புதினா & கொத்துமல்லியில் துவையல் செய்வது மட்டுமல்லாமல் சாதம் செய்யவும் பயன்படுத்தலாம்.துவையலுக்கு புளியின் அளவைக் கொஞ்சம் குறைத்தும்,சாதம் செய்யும் போது கொஞ்சம் அதிகமாகவும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
புதினா,கொத்துமல்லி சாதத்திற்கானக் குறிப்பினைக் காண இங்கே செல்லவும்.
தேவையானப் பொருள்கள்:
புதினா_ஒரு கட்டு
கொத்துமல்லி இலை_ஒரு கட்டு
புளி_ஒரு கோலி அளவு
பச்சை மிளகாய்_1
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்_2
பெருங்காயம்
செய்முறை:
புதினா,கொத்துமல்லியை ஆய்ந்து, தண்ணீரில் அலசி, நீரை வடிய வைக்கவும்.
மிக்ஸியில் புதினா,கொத்துமல்லி இலை,புளி,பச்சை மிளகாய்,உப்பு இவற்றைப் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்து துவையலில் கொட்டி ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.இப்போது புதினா,கொத்துமல்லி துவையல் தயார்.
புதினா வாசனை பிடிக்காதவர்கள் வாணலியில் சிறிது எண்னெய் விட்டுக் காய்ந்ததும் துவையலைப் போட்டு பிரட்டி ஆறவைத்து பயன்படுத்தலாம்.
இதை எல்லா வகையான சாததிற்கும் தொட்டு சாப்பிடலாம்.இட்லி,தோசைக்கும் பொருத்தமாக இருக்கும்.

