அவல் பாயசம்

தேவையனப் பொருள்கள்:

அவல்_ஒரு கப்
வெல்லம்_ஒரு கப்
பால்_ஒரு கப்
குங்குமப்பூ_சிறிது
ஏலக்கய்_1
நெய்_சிறிது
முந்திரி_10
திராட்சை_10

செய்முறை:

வெறும் வாணலில் அவலைப்போட்டு  நன்கு சூடுவர வறுத்துக்கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி ஒன்றும் பாதியுமாக உடைத்து எடுத்துக்கொள்ளவும்.அல்லது உடைக்காமல் முழு அவலாகவும் பயன்படுத்தலாம்.

ஒரு கனமான பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றவும்.

அது கொதிக்க ஆரம்பித்ததும் அவலைப் போட்டுக் கட்டிகளில்லாமல் கிண்டிவிடவும்.சீக்கிரமே வெந்துவிடும்.

பாலை சிறிது சூடாக்கி குங்குமப்பூவைக் கலந்து வைக்கவும்.

அவல் வெந்ததும் பொடித்துவைத்துள்ள வெல்லத்தைப்போட்டுக் கிளறவும்.

வெல்லம் கரைந்ததும் பால் ஊற்றிப் பொங்கி வந்ததும் ஏலக்காயைப் பொடித்துப்போட்டு இறக்கவும்.

ஒரு கரண்டியில் நெய் விட்டு முந்திரி,திராட்சையை பொன்னிறமாக வறுத்து,நெய்யைத் தவிர்த்து முந்திரி,திராட்சையை மட்டும் பாயஸத்தில் சேர்த்துக் கிளறவும்.

உளுந்து வடை,அப்பளம் இவற்றுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

அவல் சர்க்கரைப் பொங்கல்/Aval sakkarai pongal

இது அவசரத்திற்கு எளிதில் செய்யக்கூடியது. இதற்கு ஆகும் நேரமும் குறைவு.சுவையோ அதிகம். சத்தானதும்கூட.

இதில் நான் வறுத்த அவலை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி ஒன்றும் பாதியுமாக இடித்துப் போட்டுள்ளேன்.அவரவர் விருப்பமாக முழு அவலைப் போட்டும் செய்யலாம்.

தேவையானப் பொருள்கள்:

அவல்_ஒரு கப்
பச்சைப் பயறு_1/4 கப்
வெல்லம்_ஒரு கப்
குங்குமப்பூ_சிறிது
பால்_1/2  கப்
ஏலக்காய்_1
நெய்_1/4 கப்
முந்திரி_10
திராட்சை_10

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

அதே வாணலில் அவலைப் போட்டு சூடேறும்வரை வறுத்துக்கொள்ளவும்.

பச்சைப் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அது வேகும் அளவிற்கு தண்ணீர் விட்டு மலர வேக வைக்கவும்.

பருப்பு வெந்ததும் அதில் ஒரு பங்கு அவலுக்கு இரண்டு பங்கு பாலும், தண்ணீருமாகக்  கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும்.

கொதி வந்ததும் அவலைக்கொட்டிக் கட்டித்தட்டாமல் நன்றாகக் கிளறி மிகவும் குறைவானத் தீயில் மூடி வேகவைக்கவும்.அவல் சீக்கிரமே வெந்துவிடும்.

சிறிது சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கி பொங்களில் சேர்த்துவிடவும்.

இதற்கிடையில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி இளம் பாகு பதம் வந்ததும் பொங்கலில் கொட்டிக் கிளறவும்.

ஏலக்காயைத் தட்டிப் போடவும்.

ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரி,திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து இவற்றை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கவும்.

சர்க்கரைப் பொங்கலுடன் புளிசாதம், உருளைக் கிழங்கு வறுவல் சேர்த்து சாப்பிட காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.

அவல் கிச்சடி

தேவையானப் பொருள்கள்:

அவல்_ 2 கப்
பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி
கேரட்_1/4 பாகம்
காலிஃப்ளவர்_கொஞ்சம்
சின்ன வெங்காயம்_10
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
சீரகம்
முந்திரி
பெருங்காயம்
கிராம்பு_2
பிரிஞ்சி இலை_1
கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைபட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

அவலைத் தண்ணீரில் கொட்டி இரண்டு அல்லது மூன்று முறை அலசி கழுவிவிட்டு  தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து  ஊற வைக்கவும்.

நன்றாக ஊறியதும் தண்ணீரிலிருந்து பிழிந்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும்.

அவல் நன்றாக ஊறி இருக்க வேண்டும்.ஆனால் குழைந்து இருக்கக்கூடாது.

கேரட்டை சிப்ஸ் கட்டையில் வைத்து சீவி அதன்பிறகு சிறுசிறு நீளத்துண்டுகளாக்கவும்.

காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுத்து சிறுசிறு பூக்களாகப் பிரித்துக்கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும், மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும்.

இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில்  இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு அடுத்து வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி இவற்றை அடுத்தடுத்து  சேர்த்து வதக்கவும்.

அடுத்து கேரட்,பட்டாணி,காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் சிறிது உப்பு,மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறிவிட்டு லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

காய் வெந்ததும் அவலைக்கொட்டிக் கிளறவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

உப்பு தேவையானால் சேர்த்துக்கொள்ளவும்.

மிதமானத்தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும்.

பிறகு எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி,கொத்துமல்லி தூவி  இறக்கவும்.

இதற்கு  தேங்காய் சட்னி,ஊறுகாய் வகைகள் நன்றாக இருக்கும்.

அவல் கேசரி

தேவையானப் பொருள்கள்:

கெட்டி அவல்_ஒரு கப்
சர்க்கரை_ஒரு கப்
முந்திரி_10
திராட்சை_10
ஏலக்காய்_2
குங்குமப்பூ_சிறிது
நெய்_3 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் அவலைப்போட்டு சிவக்க,வாசம் வரும்வரையில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

ஆறியதும் மிக்ஸியில் போட்டு   pulse  ல் வைத்து இரண்டு சுற்று சுற்றி கொரகொரப்பான ரவை பதத்திற்கு இடித்துக்கொள்ளவும்.

ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும்.

மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து பாதி நெய்யை விட்டு முதலில் முந்திரியையும்,பிறகு திராட்சையையும் வறுத்து ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.

அதே வாணலியில் ஒன்றுக்கு இரண்டு பங்கு என தண்ணீர் விட்டு, குங்குமப்பூவையும் போட்டு சூடுபடுத்தவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அவல் ரவையை சிறிதுசிறிதாகக் கொட்டிகொண்டே ஒரு தோசைத்திருப்பியால் கட்டித் தட்டாமல் நன்றாகக் கிண்டவும்.

அவல் முழுவதையும் கொட்டிய பிறகு அது வேகும்வரை விடாமல் கிளறிவிடவும்.

அவல் வெந்ததும் சர்க்க்ரையைச் சேர்த்துக் கிளறவும்.இப்போது நீர்த்துக்கொள்ளும்.

அவ்வப்போது சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்துக் கொண்டு கிளறிகொண்டே இருக்கவும்.

கேசரி கெட்டிப்பதம் வந்ததும் முந்திரி,திராட்சை,ஏலப்பொடி,மீதமுள்ள நெய் இவற்றை சேர்த்துக் கிளறி,இறக்கி ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் விருப்பமான வடிவத்தில் துண்டுகள் போடவும்.

அல்லது துண்டுகள் போடாமல் அப்படியேகூட‌ சாப்பிடலாம்.

இப்போது சுவையான அவல் கேசரி தயார்.

குறிப்பு:

நான் இதில் food color சேர்க்கவில்லை. சேர்க்க‌ விருப்பமானால் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

அவல் உப்புமா

தேவையானப் பொருள்கள்:

அவல்_2 கப்
சின்ன வெங்காயம்_5
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்_ஒரு துளி
கடலைப்பருப்பு_1 டீஸ்பூன்
வேர்க்கடலை_2 டீஸ்பூன்
முந்திரி_3
பச்சை மிளகாய்_1
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_5 இலைகள்

செய்முறை:

முதலில் அவலைத் தண்ணீரில் கொட்டி இரண்டு அல்லது மூன்று முறை அலசி கழுவிவிட்டு  தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து  ஊற வைக்கவும்.(மஞ்சள் தூள் சேர்ப்பதாக இருந்தால் அவல் ஊறும்போதே சேர்க்கவும்.) சீக்கிரமே ஊறிவிடும்.சுமார் ஒரு 5 நிமிடம் போதுமானது.நன்றாக ஊறியதும் தண்ணீரிலிருந்து பிழிந்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும்.அவலைப்  பிழிந்தெடுத்தால்  குழையக் கூடாது.ஊறாமலும் இருக்கக்கூடாது.இவ்வாறு இருந்தால்தான் உப்புமா கட்டிகளில்லாமல் பொலபொலவென்று நன்றாக வரும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வங்கியதும் அவலை சேர்த்துக் கிளறவும்.தீ மிதமாக இருக்கட்டும்.அவல் ஏற்கனவே ஊறி இருப்பதால் தண்ணீர் சேர்க்கக் கூடாது.அவலில் ஏற்கனவே உப்பும் சேர்த்திருப்பதால் ஒரு துளி மட்டும் லேசாக தெளித்து விடவும்.அவல் சூடேறியதும் எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லி இலைத் தூவி இறக்கவும்.இப்போது சுவையான அவல் உப்புமா ரெடி.

நீண்ட நேரம் அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டாம்.மேலும் மூடியும் போட வேண்டாம்.அவ்வாறு செய்தால் குழைந்து விடும்.

குறிப்பு:

அவல் ஊறும் போதே உப்பு சேர்த்தால்தான் நன்றாக இருக்கும்.செய்முறையைப் பார்ப்பதற்குத்தான் நீளமாக உள்ளது.ஆனால் செய்வது மிகவும் சுலபம்.

இங்கு கறிவேப்பிலையை fresh   ஆக பார்ப்பதே அதிசயம்.சில சமயங்களில்தான் அவ்வாறு கிடைக்கும்.அப்படி கிடைத்தபோதுதான் ஒரு ஆர்வக்கோளாறில் ஒரு முழு குச்சியைப் போட்டுவிட்டேன்.

உப்புமா வகைகள், சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 2 Comments »