
எங்கள் ஊரில் அதிரசம் இல்லாமல் தீபாவளி இருக்காது. அதிலும் தினை அதிரசம்தான் செய்வார்கள். அப்போதெல்லாம் இதை செய்வது மிகப் பெரிய வேலை. இப்போதுபோல் தோல் நீக்கிய தினை கிடைக்காது.
பம்ப்செட் இல்லாதவர்கள், தங்கள் நிலத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததால் சும்மா மானாவாரியாக தினையை விதைத்து அறுவடை செய்திருப்பார்கள். தீபாவளி சமயத்தில் அதிரசம் செய்யவேண்டி அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவர்கள் வீட்டை நோக்கிப் படையெடுப்பார்கள்.
அதை வாங்கிவந்து உரலில் போட்டு மாங்குமாங்குனு குத்தி தோலை நீக்கி, (இதற்கு ஏழு தோல் இருக்குமாம், சொல்லுவாங்க) ஊறவச்சு, பிறகு குத்தி குத்தி சலித்து மாவாக்கி, வெல்லபாகு வச்சு கிண்டி, அதிரசம் செய்வாங்க.
தினையை நாங்களும் குத்தியே தீருவோம்னு நானும் என் தம்பியும் விழுந்து & புரண்டு அழுததையெல்லாம் நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.
அரிசி போல் இல்லாமல் தினையில் செய்யும்போது கொஞ்சம் சாஃப்டா, பொலபொலனு இருக்கும். இதுல செஞ்சாதான் தீபாவளி தீபாவளியா தெரியும்.
நாட்கள் செல்லச்செல்ல எல்லோரது வீட்டுக்கும் வந்த மருமகள்கள் கொஞ்சம் கொஞ்சமாக தினையிலிருந்து அரிசிக்குத் தாவிவிட்டனர்.
சின்ன வயசுல தினையைப் பார்த்ததோடு சரி, மறந்தே போயிட்டேன். இங்கு வந்த புதுசுல இந்த ஊர் கடையில் தானியங்கள் இருக்கும் பகுதியில் தினை மாதிரியே ஒன்று இருக்கவும் வாங்கி வந்து அதிரசம் சுட்டுப் பார்த்தேன், வரவில்லை. பிறகுதான் தெரிந்தது அது கஸ்கஸ் என்று :)))) இந்த பெயரில் இப்படி ஒன்று இருப்பதே அப்போதுதான் தெரியும் !

நீண்ட நாட்களாகவே சிறுதானியங்களைத் தேடிக்கொண்டே இருந்தேன். இப்போது இங்குள்ள ஒரு கடையில் எல்லா சிறுதானியங்களும் கிடைக்கிறது. அதில் தினை இருக்கவும் வாங்கிவந்து அதிரசம் சுட்டுப் பார்த்தேன், நன்றாக வந்துள்ளது. நீங்களும் ஒன்று எடுத்து சாப்பிட்டுப் பாருங்க !

தேவையானவை:
தினை _ 2 கப்
வெல்லம்_ சுமார் 2 கப் அல்லது வெல்லத்தின் இனிப்புக்கேற்ப
ஏலக்காய் _1
உப்பு _ துளிக்கும் குறைவாக. ருசியைக்கூட்ட போடுகிறோம். விருப்பமில்லை என்றாலும் பரவாயில்லை.
எண்ணெய் _ பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:
மாவு தயாரிப்பது, செய்முறை எல்லாமும் அரிசிமாவு அதிரசம் மாதிரியேதான்.
தினையை நன்றாகக் கழுவி ஊற வைக்கவும்.
ஊறியதும் நீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு ஈர மாவாக மைய பொடித்துக்கொள்ளவும். இப்போதே ஏலக்காயையும் சேர்த்து பொடித்துக்கொள்ளலாம்.
ஒரு கெட்டியான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்தவும்.
வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் தூசு & மண் போக வடிகட்டியில் வடிகட்டி மீண்டும் பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும்.
வெல்லம் கொதித்து கெட்டிப் பாகாக வரும்போது ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் விட்டு, ஒரு துளி பாகை அதில் விட்டு கையால் உருட்டினால் கரையாமல் கெட்டியாக உருட்ட வரவேண்டும்.
அந்த நேரத்தில் அப்பாகை எடுத்து தினை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டிக்காம்பால் அல்லது மத்தின் அடிப்பகுதியால் விடாமல் கிண்ட வேண்டும். ஊற்றும்போது கவனம் தேவை.
பாகின் சூட்டிலேயே மாவு வெந்துவிடும்.
கை விடாமல் நன்றாகக் கிண்டி ஆறியதும் மூடி வைத்து, அடுத்த நாளோ, இல்லை அதற்கும் அடுத்த நாளோ அதிரசங்களைச் சுடலாம். அன்றேகூட செய்யலாம். எங்க அம்மா மாவு கிண்டி வைத்து அதிரசம் சுட ஒரு வாரமாவது ஆகும், அதற்குள் பாதி மாவைக் காலி பண்ணிடுவோம் 🙂
எண்ணெயை அடுப்பில் ஏற்றி காய வைக்கவும்.

ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் அல்லது பேப்பர் டவலில் சிறு உருண்டை அளவிற்கு மாவை எடுத்து படத்தில் உள்ளதுபோல் தட்டிக்கொண்டு எண்ணெய் காய்ந்ததும் போட்டு பொரித்தெடுக்கவும்.
எண்ணெய் ரொம்பவும் சூடாக இருக்கக் கூடாது. தீயுமே தவிர உள்மாவு வேகாது. எண்ணெய் குலோப் ஜாமூன் சுடும் பதமாக இருக்கலாம்.
எடுத்தபின் ஒரு தட்டில் வைத்து அடிப்பக்கம் தட்டையான ஒரு கிண்ணத்தால் அழுத்தினால் உப்பியிருக்கும் அதிரசம் தட்டையாகிவிடும்.
எல்லா மாவையும் இப்படியே செய்ய வேண்டியதுதான்.

பிறகென்ன, ஆறியதும் எடுத்து சாப்பிட்டு விடுவதோ அல்லது எடுத்து வைத்து பிறகு சாப்பிடுவதோ எல்லாமும் உங்கள் கைகளில்.