தேவையானப் பொருள்கள்:
அவல்_2 கப்
சின்ன வெங்காயம்_5
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்_ஒரு துளி
கடலைப்பருப்பு_1 டீஸ்பூன்
வேர்க்கடலை_2 டீஸ்பூன்
முந்திரி_3
பச்சை மிளகாய்_1
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_5 இலைகள்
செய்முறை:
முதலில் அவலைத் தண்ணீரில் கொட்டி இரண்டு அல்லது மூன்று முறை அலசி கழுவிவிட்டு தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.(மஞ்சள் தூள் சேர்ப்பதாக இருந்தால் அவல் ஊறும்போதே சேர்க்கவும்.) சீக்கிரமே ஊறிவிடும்.சுமார் ஒரு 5 நிமிடம் போதுமானது.நன்றாக ஊறியதும் தண்ணீரிலிருந்து பிழிந்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும்.அவலைப் பிழிந்தெடுத்தால் குழையக் கூடாது.ஊறாமலும் இருக்கக்கூடாது.இவ்வாறு இருந்தால்தான் உப்புமா கட்டிகளில்லாமல் பொலபொலவென்று நன்றாக வரும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வங்கியதும் அவலை சேர்த்துக் கிளறவும்.தீ மிதமாக இருக்கட்டும்.அவல் ஏற்கனவே ஊறி இருப்பதால் தண்ணீர் சேர்க்கக் கூடாது.அவலில் ஏற்கனவே உப்பும் சேர்த்திருப்பதால் ஒரு துளி மட்டும் லேசாக தெளித்து விடவும்.அவல் சூடேறியதும் எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லி இலைத் தூவி இறக்கவும்.இப்போது சுவையான அவல் உப்புமா ரெடி.
நீண்ட நேரம் அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டாம்.மேலும் மூடியும் போட வேண்டாம்.அவ்வாறு செய்தால் குழைந்து விடும்.
குறிப்பு:
அவல் ஊறும் போதே உப்பு சேர்த்தால்தான் நன்றாக இருக்கும்.செய்முறையைப் பார்ப்பதற்குத்தான் நீளமாக உள்ளது.ஆனால் செய்வது மிகவும் சுலபம்.
இங்கு கறிவேப்பிலையை fresh ஆக பார்ப்பதே அதிசயம்.சில சமயங்களில்தான் அவ்வாறு கிடைக்கும்.அப்படி கிடைத்தபோதுதான் ஒரு ஆர்வக்கோளாறில் ஒரு முழு குச்சியைப் போட்டுவிட்டேன்.
2:07 பிப இல் ஜூலை 16, 2012
/இங்கு கறிவேப்பிலையை fresh ஆக பார்ப்பதே அதிசயம்.சில சமயங்களில்தான் அவ்வாறு கிடைக்கும்.அப்படி கிடைத்தபோதுதான் ஒரு ஆர்வக்கோளாறில் ஒரு முழு குச்சியைப் போட்டுவிட்டேன்./ 🙂 🙂 அதானே! முதல்ல படத்தைப் பார்த்து கொஞ்சம் jerk ஆகிட்டேன்! ஹாஹா!
2:28 பிப இல் ஜூலை 16, 2012
படம் எடுத்து முடித்தபிறகு இரண்டு இலையை மட்டும் கிள்ளிப்போட்டுவிட்டு மீதியை பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டேன்.நாம்தான் எண்ணியெண்ணிப் போடுவோமே.கருத்துக்கு நன்றி மகி.