சிவப்பரிசியில் புழுங்கல் அரிசியாகப் பார்த்து வாங்க வேண்டும்.இதற்கும் புழுங்கல் அரிசி மாதிரியேதான் அளவு,மாவு அரைப்பது,கரைத்து வைப்பது எல்லாம்.ஆனால் அரிசி நன்றாக ஊறுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும்.எனவே முதல் நாளிரவே ஊற வைத்துவிட வேண்டும்.
தேவையானப் பொருள்கள்:
சிவப்பரிசி_4 கப்
உளுந்து_1/4 கப்
வெந்தயம்_ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
செய்முறை:
அரிசியையும்,வெந்தயத்தையும் தனித்தனியாக முதல் நாளிரவே,தூங்கச் செல்வதற்கு முன் ஊற வைத்து விட வேண்டும்.அடுத்த நாள் காலையில் உளுந்தை ஊற வைக்கவும்.குறைந்தது 4 மணி நேரமாவது ஊற வேண்டும். பிறகு தோலியைக் கழுவிவிட்டு ஃபிரிட்ஜில் சுமார் ஒரு 1/2 மணி நேரத்திற்கு வைக்கவும்.மாவு அரைப்பதற்கும் ஃபிரிட்ஜ் வாட்டரைப் பயன்படுத்தினால் உளுந்து நிறைய மாவு காணும்.
மாவு அரைக்கும்போது முதலில் உளுந்தையும்,வெந்தயத்தையும் கிரைண்டரில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.குறைந்தது 1/2 மணி நேரமாவது அரைக்க வேண்டும்.இடையிடையே தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து அரைக்கவும்.நன்றாக அரைத்த பிறகு,மாவைக் கையில் எடுத்துப் பார்த்தால் நுரைத்துக் கொண்டு இருக்கும்,அப்போது ஒரு பாத்திரத்தில் வழித்து கைகளால் நன்றாகக் கொடப்பி வைக்கவும். அப்போதுதான் மாவு அமுங்காமல் இருக்கும்.
அடுத்து அரிசியைப் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.மாவு கெட்டியாக இல்லாமலும்,நீர்க்க இல்லாமலும் இருக்க வேண்டும்.புழுங்கல் அரிசிக்கு தேவைப்படும் தண்ணீரை விட இதற்கு கொஞ்சம் அதிகமாகத் தேவைப்படும்.நன்றாக அரைத்த பிறகு (இதற்கும் சுமார் 1/2 மணி நேரம் பிடிக்கும்.) வழித்து உளுந்து மாவுடன் சேர்த்து உப்பு போட்டு நன்றாகக் கொடப்பி கரைத்து வைக்கவும்.
அடுத்த நாள் பார்த்தால் மாவு நன்றாகப் பொங்கி வந்திருக்கும்.இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி அதில் இட்லி தட்டை வைத்து ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் மாவு ஊற்றி வேகவைக்கவும்.வெந்த பிறகு மூடியைத்திறந்து எடுத்துக் கொட்டவும். சிறிது இளஞ் சிவப்பாக, பஞ்சு போன்ற இட்லிகளாக வரும்.தோசை வேண்டும் எனில் கொஞ்சம் மாவைத் தனியாக எடுத்து, சிறிது நீர் விட்டுக் கரைத்து தோசையாக வார்க்கலாம்.
நமக்கு விருப்பமான சாம்பார்,சட்னி,புளிக் குழம்பு,அல்லது குருமாவுடன் சாப்பிடலாம்.
7:25 முப இல் செப்ரெம்பர் 8, 2017
நான்கு கப் அரிசிக்கு கால் கப் உளுந்தா?????????
இட்லி எப்படி வரும்? நான்குக்கு ஒன்றல்லவா கணக்கு?
7:55 முப இல் ஒக்ரோபர் 28, 2017
சங்கப்பலகை அறிவன்,
இதுநாள்வரை இப்படித்தான் போட்டு அரைக்கிறேன். உளுந்து & வெந்தயம் இவற்றை அரைப்பதில் கொஞ்சம் கவனம் இருந்தால் போதும், இட்லி பூ மாதிரி வரும்.