தேவையானப் பொருள்கள்:
பெரும்பயறு_3 கைப்பிடி
புளி_பெரிய நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம்_7 லிருந்து 10 க்குள்
முழு பூண்டு_1
தக்காளி_பாதி
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
வறுத்துப் பொடிக்க:
கொத்துமல்லி விதை_ஒரு டீஸ்பூன்
கடலைப் பருப்பு_1/2 டீஸ்பூன்
மிளகு_2
சீரகம்_1/2 டீஸ்பூன்
வெந்தயம்_சுமார் 10 எண்ணிக்கை
தாளிக்க:
நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
வடகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
சீரகம்
கடலைப் பருப்பு
வெந்தயம்
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் பயறு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி,சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும்.சீக்கிரமே வெந்துவிடும்.ஊற வைக்கவெல்லாம் வேண்டாம். வெந்ததும் நீரை வடித்துவிடவும்.
புளி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.ஊறியதும் தேவையானத் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
வறுத்துப் பொடிக்க வேண்டியதை வெறும் வாணலியில் வறுத்து ஆறியதும் பொடித்து வைக்கவும்.வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.
இக்குழம்பையும் மண் சட்டியில் செய்தால்தான் சுவையாக இருக்கும்.
சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க உள்ள பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு,முதலில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்து தக்காளி வதக்கி,அதன் பிறகு வெந்த பயறு சேர்த்து வதக்கி, அதனுடன் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.பிறகு புளித்தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்க விடவும்.
நன்றாகக் கொதித்து,வாசனை வந்ததும் பொடித்து வைத்துள்ளப் பொடியைப் போட்டுக் கலக்கி விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.
குறிப்பு:
இக் குழம்பில் கத்தரிக்காய் (அ) முருங்கைக்காய் சேர்த்தும் செய்யலாம்.குழம்பு ஒரு கொதி வந்ததும் காய் சேர்க்கலாம். அல்லது வெங்காயம்,தக்காளி வதக்கிய பிறகு காய் சேர்த்து வதக்கி செய்யலாம்.
மறுமொழி இடுக