சைனீஸ் கடைகளில் கிடைக்கும் இந்தக் கீரையில், மற்ற கீரைகளைப் போல மசியல்,சாம்பார்,பொரியல் எது செய்தாலும் நன்றாகவே உள்ளது.
தேவையானப் பொருள்கள்:
கீரை ( Watercress) _ ஒரு கட்டு
பச்சைப்பருப்பு (அ) துவரம்பருப்பு _ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய்_1
சின்ன வெங்காயம்_2
பூண்டு_2 பற்கள்
தக்காளி_1/4 பாகம்
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
செய்முறை:
கீரையை ஆய்ந்து அலசி நீரை வடிய வைக்கவும்.
பச்சைப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஆறியதும் கழுவிவிட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அது வேகும் அளவு தண்ணீர் ஊற்றி,துளி மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.ஒரு சொட்டு விளக்கெண்ணெய் விட்டால் பருப்பு சீக்கிரமே குழைய வெந்துவிடும்.
பருப்பு பாதி வேகும் நிலையில் பச்சை மிளகாய், வெங்காயம்,பூண்டு, தக்காளி சேர்த்து வேகவைக்கவும்.எல்லாம் சேர்ந்து வெந்து வரும்போது கீரையைப் போட்டு வேகவைக்கவும்.இப்போது மூட வேண்டாம்.
சிறிது நேரத்திலேயே கீரை வெந்துவிடும்.வெந்ததும் இறக்கி ஆற வைத்து அதில் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் மசிந்துவிடும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக்கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துக் கீரையில் கொட்டி மேலும் ஒரு சுற்று சுற்றினால் போதும்.
இப்போது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையான கீரை மசியல் தயார்.
மறுமொழி இடுக