மீன் குழம்பை தனி மீன் குழம்பாகவோ அல்லது மாங்காய்,பலாக்கொட்டை போன்றவற்றை சேர்த்தோ சமைப்பார்கள்.
மீன் குழம்பிற்கு ஒட்டு மாங்காயை விட குண்டு மாங்காய்தான் சுவையாக இருக்கும்.
காய் ரொம்பவே புளிப்பாக இருந்தால் புளியின் அளவைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்:
மீன்_ 1/2 கிலோ
மாங்காய்_1
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
பூண்டு_5 பற்கள்
புளி_எலுமிச்சை அளவு
மிளகாய் தூள்_ 4 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய்_ஒரு டேபிள்ஸ்பூன்
வடகம்
வெந்தயம்
கறிவேப்பிலை
செய்முறை:
புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.ஊறியதும் கெட்டியாக கரைத்து வைத்துக்கொள்ளவும்.
மீனை நறுக்கி,மஞ்சள் தூள்&உப்பு சேர்த்து கழுவி, சுத்தம் செய்து நீரை வடிய வைக்கவும்.
வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.
மாங்காயை விருப்பமான அளவில் நறுக்கிக்கொள்ளவும்.
குழம்பு சட்டியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாகத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இவை வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி புளிக்கரைசலை ஊற்றவும்.
உப்பு,காரம் சரிபார்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.மீன் சேர்க்கும்போது சிறிது நீர் விட்டுக்கொள்ளும்.எனவே குழம்பு கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்.
இங்கு (USA) கடையில் வாங்கிய மாங்காயாக இருந்தால் குழம்பு ஒரு கொதி வந்ததும் போட்டு நன்றாகக் கொதிக்க விட்டு மாங்காய் வெந்துவிட்டதா எனப் பார்த்து பிறகு மீனைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.கடைகளில் வாங்கும் மாங்காய் அவ்வளவு சீக்கிரம் வேகாது.
மாங்காய் farmers market ல் வாங்கியதாக இருந்தால் குழம்பு நன்றாகக் கொதித்த பிறகு போட்டு ஒரு கொதி வந்ததும் (சீக்கிரமே வெந்துவிடும்) மீனைப் போட்டு மற்றொரு கொதி வந்ததும் இறக்கவும்.
குழம்பில் மீனைச் சேர்த்த பிறகு கரண்டியால் அதிகமாக கிண்டிவிட வேண்டாம்.மீன் உடைந்து விடும்.
இக்குழம்பு முதல் நாள் சாப்பிடும்போதுள்ள சுவையைவிட அடுத்த நாள்தான் அதிக சுவையாக இருக்கும்.
சாதம்,இட்லி,தோசை இவற்றிற்கு அருமையாக இருகும்.
6:44 முப இல் மே 27, 2011
It looks yummy!
9:54 முப இல் ஜூன் 3, 2011
தேன்மொழி,
வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.