விதவிதமான வடிவங்கள் மட்டுமல்லாது பல்வேறு தானியங்களினாலான பாஸ்தா கிடைக்கிறது. இதற்கென seasonings, pasta sauce உள்ளன.இதனை எப்படி வேண்டுமானாலும் தயாரித்துக்கொள்ளலாம்.எப்படி செய்தாலும் சுவைதான்.
பாஸ்தாவை சேர்க்கும்போது அடுப்பை நிறுத்திவிட்டுத்தான் சேர்க்க வேண்டும்.அப்போதுதான் அதற்கேயுரித்தான அதன் வழவழப்புத்தன்மை இருக்கும்.
மிளகாய்த்தூள் சேர்ப்பதானால் காய்கறி வதங்கும்போது சேர்த்துக்கொள்ளலாம். Garnish mix என்றால் கடைசியில் சேர்த்துக்கொள்ளலாம்.
தேவையானப் பொருள்கள்:
பாஸ்தா_2 கப்
விருப்பமான காய் கறிகள்_ (கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ,பச்சைப்பட்டாணி, காலிஃப்ளவர், புரோக்கலி, வெங்காயத்தாள் ,கலர்கலரான குடைமிளகாய்கள்_இவற்றுள் இருப்பதைக்கொண்டு தயார் செய்யலாம்.)
சின்னவெங்காயம்_2
பச்சைமிளகாய்_1
தக்காளி_பாதி
இஞ்சி_சிறிது
பூண்டு_1
மிளகாய்த்தூள்_1/4 டீஸ்பூன் அல்லது நூடுல்ஸிலுள்ள garnish mix _ கொஞ்சம்
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
ஆலிவ் ஆயில்_2 டிஸ்பூன்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
சீரகம்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பாஸ்தா மூழ்கும் அளவை விட இரண்டு மடங்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு அடுப்பிலேற்றி கொதிநிலை வரும்போது தேவையான உப்பு சேர்த்து,மீண்டும் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் பாஸ்தாவைக்கொட்டி ஒரு கரண்டியால் கிண்டிவிடவும்.ஒன்றுக்கொன்று ஒட்டாமல் வேகுமாறு அடிக்கடி கிண்டிவிடவும்.நன்றாக வேக குறைந்தது 20 நிமிடங்களாவது ஆகும்.நன்றாக வெந்துவிட்டால் கரண்டியில் எடுத்தால் வராமல் வழுக்கிக்கொண்டு போகும்.இப்போது ஒரு கப் குளிர்ந்த நீரை வெந்துகொண்டிருக்கும் பாஸ்தாவில் ஊற்றி அடுப்பை நிறுத்திவிடவும்.இது வெந்துகொண்டிருக்கும் பாஸ்தா மேலும் வேகாமலிருக்கத்தான்.பிறகு நீரை வடித்துவிடலாம்.
பாஸ்தா வெந்துகொண்டிருக்கும்போதே தாளிப்பை ஆரம்பிக்க வேண்டும்.
இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.வெங்காயம்,பச்சைமிளகாய்,தக்காளி இவற்றை நறுக்கி வைக்கவும்.தக்காளியை அரைத்துக்கூட சேர்த்துக்கொள்ளலாம்.காய்கறிகளை பாஸ்தாவின் வடிவத்திற்கேற்ப நறுக்கிக்கொள்ளவும்.பச்சைப்பட்டாணி சேர்ப்பதானால் முதல்நாளிரவே ஊற வைத்து விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க உள்ளவற்றைத் தாளித்துவிட்டு இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.பிறகு காய்கறி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் சிறிது உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு மிதமானத் தீயில் வேக வைக்கவும்.வேண்டுமானால் காய் வேக சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளவும்.
காய் வெந்ததும் அடுப்பை நிறுத்திவிட்டு garnish mix கலந்துவிட்டு, வடித்துவைத்துள்ள பாஸ்தாவை எடுத்துக்கொட்டி கிளறிவிடவும்.
இப்போது சுவையான பாஸ்தா தயார்.
10:32 பிப இல் நவம்பர் 8, 2011
பாஸ்தா பாக்கெட்டின் மீதே அதனதன் வடிவத்திற்குத் தகுந்தமாதிரி வேகவைக்கும் நேரம்
கொடுத்து விடுகிரார்களில்லையா. அதுகூட மிகவும் ஸவுகரியமாக இருக்கு. . காய்கறிகள் சேர்த்து செய்யும் குறிப்பு நன்றாக இருக்கு.. நான் இங்கு வரும்போதெல்லாம் பலதினுஸுகளில்
பாஸ்த்தா பாக்கெட் வாங்கி வருவேன்,. பேததிகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நல்ல குறிப்பு.நன்றிம்மா.
4:36 பிப இல் நவம்பர் 21, 2011
காமாட்சி அம்மா,
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி அம்மா.நீங்கள் சொன்னதுபோலவே எல்லா பாக்கெட்டுகளிலும் வேகவைக்கும் நேரம் கொடுத்துள்ளார்கள்.எனக்கு அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தைவிட அதிகமாகவே ஆகிறது.
‘பேததிகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று’. அப்படியானால் பேரன்களுக்கு?
அன்புடன் சித்ரா.