தேவையானப் பொருள்கள்:
உருளைக் கிழங்கு_1
குடைமிளகாய்_1
பூண்டு_2 பற்கள்
மிளகாய்த் தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
உளுந்து
பெருங்காயம்
கறிவேப்பிலை
குறிப்பு:
குடைமிளகாயையும்,உருளைக்கிழங்கையும் ஒன்றாக வதக்கி வேக வைத்தால் மிளகாயின் நிறம் மாறி இருக்கும்.எனவே முதலில் மிளகாயை வதக்கி எடுத்துக்கொண்டு பிறகு உருளைக்கிழங்கு வெந்தபிறகு சேர்த்தால் அதன் பச்சை நிறம் அப்படியே இருக்கும்.இதனை எந்த மிளகாயில் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.
செய்முறை:
குடைமிளகாயைக் கழுவி சுத்தம் செய்து விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.
உருளைக் கிழங்கை விருப்பமான வடிவத்தில் நறுக்கி நீரில் போட்டு வைக்கவும்.பூண்டு உரித்து நறுக்கி/தட்டி வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு குடைமிளகாயைப் போட்டு,சிறிது உப்பு போட்டு வதக்கவும்.வதங்கியதும் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்கக்கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்து உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கி அது வேகும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும்.பாதி வெந்த நிலையில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து பிரட்டி விட்டு மீண்டும் மூடி வேக வைக்கவும்.
உருளைக்கிழங்கு நீர் வற்றி,நன்றாக வெந்ததும் வதக்கி வைத்துள்ள குடைமிளகாயைச் சேர்த்துக் கிளறிவிடவும்.
உருளைக்கிழங்கும்,குடைமிளகாயும் நன்றாகக் கலந்ததும் இறக்கவும்.
இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.
10:40 பிப இல் ஒக்ரோபர் 31, 2011
இந்த வயலெட் கலர் மிளகாயை இப்பதான் பார்க்கிறேன். போட்டு செய்தால்பொறியல் நன்றாக இருக்கு. இந்த உருளைக் கிழங்கை ஸமயத்திலே மைக்ரோவேவில் வைத்து எடுத்துப் போட்டால் வேலை சீக்கிரம் முடிந்து விடுகிறது. கலர்கள் மிக்க மிளகாய்கள் . எல்லாம் நீ சொன்ன முறையில் போட்டு செய்தால் கதம்பமாக அழகாகவும் இருக்கும்.
10:25 முப இல் நவம்பர் 2, 2011
காமாட்சி அம்மா,
இங்கு மிளகாய் இன்னும் பல வண்ணங்களில் கிடைக்கிறது. வாங்கினால் ப்ளாக்கில் போடுகிறேன்.
சரியாகச்சொன்னீர்கள்.மைக்ரோவேவ் அவனில் சமைத்தால் வேலையும் சீக்கிரமே முடிந்துவிடும்.வருகைக்கும்,கருத்திற்கும் நன்றியம்மா.