முறுக்கு செய்வதில் இது ஒரு முறை.மெஷினில் கொடுத்து அரைக்கும்போது சூட்டினால் முறுக்கின் நிறம் மாறும்.இந்த முறையில் செய்யும்போது நல்ல நிறத்தில் இருக்கும்.
செய்முறையைப் பார்க்கும்போது ஏதோ பெரிய வேலை போல் தோன்றும். பருப்பை நன்றாக வேக வைத்து எடுத்தால் வேலை முடிந்தது.சரியாக வேகாமலிருந்தால் முறுக்கு கடக்முடக் என கடிக்க வேண்டியிருக்கும்.
தேவையானவை:
1) வெள்ளை உளுந்து _ ஒரு பங்கு
(அல்லது)
உடைத்த பச்சைப்பயறு_ஒரு பங்கு
(அல்லது)
இரண்டும் கலந்து ஒரு பங்கு (எந்த விகிதத்தில் வேண்டுமானாலும்)
2) அரிசிமாவு_5 பங்கு
3) அடுத்து வழக்கம்போல் முறுக்கிற்கு தேவையான ஓமம், எள், பெருங்காயம், உப்பு என சேர்த்துக்கொள்ளலாம்.
கீழே உள்ள செய்முறையில் நான் சேர்த்தது:
உளுந்து _ 1/2 கப்
பச்சைப்பயறு_ 1/2 கப்
அரிசிமாவு_5 கப்
ஓமம்_சிறிது
எள்_கொஞ்சம்
பெருங்காயம்_சிறிது
உப்பு _தேவைக்கு
செய்முறை:
உளுந்து,பச்சைப்பயறு இரண்டையும் தனித்தனியாக திட்டமாக தண்ணீர் ஊற்றி குழைய வேக வைக்கவும்.
இரண்டின் வேகும் நேரத்தில் வித்தியாசம் இருப்பதால் தனித்தனியாக வேக வைக்க வேண்டும்.ஒரு பருப்பு மட்டும் போட்டல் இந்தப் பிரச்சினை இல்லை.
வெந்ததும் இரண்டையும் கைகளால் நன்றாக மசித்துவிட்டு மாவு கலக்கும் தட்டில் வைக்கவும்.
அதனுடன் அரிசிமாவு,ஓமம்,எள்,பெருங்காயம்,உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும்.
இப்போது தேவைப்பட்டால் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து முறுக்கு பிழியும் பதத்தில் பிசைந்துகொள்ளவும்.
விருப்பமானால் தண்ணீருக்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்தும் பிசையலாம்.நல்ல வாசனையுடன் சுவையாக இருக்கும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய வைத்து முறுக்குக்குழலில் விருப்பமான அச்சைப்போட்டு நேராக எண்ணெயிலோ அல்லது உங்கள் விருப்பம் போல் பிழிந்தோ வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சுவையான, கரகரப்பான,மொறுமொறுப்பான முறுக்குகள் தயார்.
12:04 பிப இல் திசெம்பர் 24, 2011
உளுந்து வேகவைச்சு நானும் ஒருமுறை முறுக்கு செய்திருக்கேன்..நல்லா இருக்குது முறுக்கு!
7:34 முப இல் திசெம்பர் 26, 2011
நீங்க ஏற்கனவே இதுமாதிரி செஞ்சிருக்கீங்களா! முறுக்கு வேற நல்லா இருக்குன்னு சொல்லியிருக்கீங்க. USA வந்த புதிதில் இப்படித்தான் செய்வேன்.நன்றி மகி.
10:56 பிப இல் திசெம்பர் 24, 2011
நான் இந்த முறையி்ல் செய்ததில்லை. இதுவும் ஸுலபமாக இருக்கும் போலிருக்கு. செய்து பார்க்கணும்.
7:48 முப இல் திசெம்பர் 26, 2011
காமாட்சி அம்மா,
இது சுலபமான முறைதான்.நான் முதன்முதலில் USA வந்தபோது எதுவும் (மாவு வகைகள்) எடுத்துவரவில்லை.வந்ததும் தீபாவளி வேறு வந்துவிட்டது.ஒரு தோழிதான் இந்த முறையில் செய்யச்சொன்னார்.நன்றாக இருந்தது.நீங்களும் செய்து பாருங்க.
அன்புடன் சித்ரா.