சேப்பங்கிழங்கு நம்மூரில் குட்டிக்குட்டியாகக் கிடைக்கும்.வேகவைத்து,தோலை உரித்தெடுத்துவிட்டு,முழு கிழங்கையும் இடது உள்ளங்கையில் வைத்து வலது உள்ளங்கையால் அழுத்தி ஓரங்களை லேஸாகத் தட்டிவிட்டு பின்வரும் முறையில் செய்வேன்.ஆனால் இங்கு ( USA ) இவை பெரிதாகக் கிடைப்பதால் அதேபோல் செய்தால் காரம்,உப்பு சரியாக உரைப்பதில்லை.எனவே பட்டைபட்டையாக நறுக்கி செய்துவிடுவேன்.
கிழங்கில் தயிர் சேர்ப்பதால் நன்றாக சிவந்து வரும்.அவ்வளவாக கொழகொழப்பு தெரியாது.நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலில் செய்யும்போது வாசனைக் கொஞ்சம் கூடுதலாகவும்,கூடுதல் சுவையுடனும் இருக்கும்.அதேபோல் பூண்டைத் தட்டிப் போடுவது நல்ல வாசனை,சுவையைக் கொடுக்கும்.அடிப் பிடிக்கும் என்பதால்தான் நறுக்கிப் போடுவதில்லை.
தேவையானவை:
சேப்பங்கிழங்கு_3
மிளகாய்த்தூள்_3 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
தயிர்_ஒரு டேபிள்ஸ்பூன்
பூண்டிதழ்_2
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு
எண்ணெய்_ இரண்டல்லது மூன்று டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கிழங்குகளைப் போட்டு அவை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,வேகவைத்தெடுத்து,ஆறியதும் தோலை உரித்துவிட்டு படத்திலுள்ளதுபோல் நறுக்கி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,பெருங்காயம்,உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
இப்போது நறுக்கி வைத்துள்ள துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மிளகாய்த்தூள் கலவையில் எல்லா பக்கமும் புரட்டி எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.இது மாதிரியே எல்லாவற்றையும் செய்து ஒரு 1/2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.அல்லது வெளியில்கூட வைக்கலாம்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும் பாதி எண்ணெய் விட்டு கல் கொண்ட மட்டும் கிழங்கு துண்டுகளை தனித்தனியாக வைத்து,இவற்றுடன் பூண்டிதழ்களை லேசாகத் தட்டிப்போட்டு மிதமானத் தீயில் மூடி போட்டு வேக விடவும்.
தயிரைக் கட்டியில்லாமல் கலக்கிக்கொள்ளவும்.
சிறிது நேரம் கழித்து துண்டுகளைத் திருப்பிவிட்டு,மீதமுள்ள எண்ணெயை சுற்றிலும் விட்டு,ஒவ்வொரு துண்டின் மீதும் சிறிது தயிரை ஸ்பூனால் தடவி விடவும்.
மீண்டும் துண்டுகளைத் திருப்பிவிட்டு முன்பு சொன்னதுபோலவே தயிரைத் தடவி விட்டு கிழங்கின் இரண்டு பக்கமும் நன்றாக சிவக்கும் வரை அடிக்கடி திருப்பிவிட்டு எடுத்து வைக்கவும்.
இப்போது சுவையான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.
இது எல்லா சாதத்திற்கும் நன்றாகப் பொருந்தும்.
7:43 பிப இல் பிப்ரவரி 28, 2012
புது விதமான வறுவலா இருக்கு..சீக்கிரம் செய்துபார்த்து சொல்றேங்க. 🙂
7:33 முப இல் பிப்ரவரி 29, 2012
மகி,
சீக்கிரம் செஞ்சி சாப்டுட்டு வந்து சொல்லுங்க.நன்றி மகி.
10:54 பிப இல் பிப்ரவரி 28, 2012
இந்த வறுவலைச் சுடச்சுட சாப்பிட்டால் கொள்ளை ருசி.
7:38 முப இல் பிப்ரவரி 29, 2012
காமாட்சி அம்மா,
சூடாக இருக்கும்போது நல்லா மொறுமொறுன்னு சூப்பராகத்தான் இருக்கிறது.முக்கியமாக தயிர்,சாம்பார்,சாத வகைகளுக்கு சூப்பர் காம்பினேஷன்.நன்றி அம்மா.
2:50 பிப இல் மார்ச் 1, 2012
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்துட்டேன்ங்க..ஆனா என்ன காமெடியாச்சுன்னா கிழங்கு கொஞ்சம் குழைஞ்சுருச்சு, அப்புறம் தயிர் தடவவும் மறந்துட்டேன்! 😉 ஆனாலும் காரசாரமா பூண்டு வாசனையுடன் சூப்பரா இருந்தது!
Thanks for the recipe! 🙂
4:18 பிப இல் மார்ச் 1, 2012
மகி,
செய்து பார்த்தது சந்தோஷம்.செய்ததில் பிரச்சினை என்றதும் கொஞ்சம் வருத்தம்.
குழைந்து போனாலும் ஒன்னும் பிரச்சினையில்ல.முழு கிழங்கை அப்படியே இரண்டு உள்ளங்கைகளுக்கிடையில் வைத்து அழுத்திவிட்டு,ஓரங்களைக் கொஞ்சம் திருத்திவிட்டு பிறகு மற்றவையெல்லாம் அப்படியேதான்.
கிழங்கை குக்கரில் போடாமல் தனியாக ஒரு பாத்திரத்தில் (டீ,காபி போடும் பாத்திரம் மாதிரி) வேக வைங்க.நமக்குத் தேவையானபோது தொட்டுப்பார்த்து லேசாக அமுங்கினால் எடுத்திடலாமில்ல.நன்றி மகி.