இது முற்றிய ஊறுகாய் மாங்காயின் கொட்டையை உடைத்து அதன் உள்ளே உள்ள பருப்பை எடுத்து செய்தது.பொதுவாக துவையல் என்றால் புளிப்பும், காரமும் இருக்கும்.இதில் இவற்றுடன் துவர்ப்பும் சேர்ந்திருக்கும்.இதை வைத்து குழம்பும் செய்வார்கள்.அதற்கு இங்கே கிளிக்கவும்.
தேவையானவை:
மாங்கொட்டை_2
புளி_பெரிய நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய்_5
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு
வறுத்து சேர்க்க:
உளுந்து_ஒரு டீஸ்பூன்
தேங்காய் கீற்று_2
செய்முறை:
மாங்கொட்டையை உடைத்து அதன் உள்ளே உள்ள பருப்பை சிறுசிறு துண்டுகளாக உடைத்து நீரில் ஊற வைக்கவும். குறைந்தது இரண்டுமூன்று மணி நேரம் ஊற வேண்டும்.அம்மி என்றால் பருப்பை ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை.
வெறும் வாணலில் உளுந்து,தேங்காய் இவற்றை அடுத்தடுத்து போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். விருப்பமில்லையானால் தேங்காய் சேர்க்க வேண்டாம்.
பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.
இப்போது மாங்கொட்டை துவையல் தயார்.இது இட்லி,தோசை,சாத வகைகளுக்கு நன்றாக இருக்கும்.
2:39 முப இல் ஏப்ரல் 5, 2012
நல்ல மாங்காய் ஸீஸனில் முற்றின மாங்காயை மூன்று பாகமாக வகிர்ந்து உப்பிட்டு உலர்த்தி வைத்து ,கொட்டை, மாங்காய் எல்லாவற்றையும் உபயோகிப்பது உண்டு. அந்த வகைக் கொட்டையின் பருப்புதான் துவையலுக்கு உபயோகித்திருப்பாய் என்று நினைக்கிறேன். மாம் பருப்பு மருத்துவ குணமுடையது. சேர்த்தரைத்து துவையல் நன்றாக
உள்ளது. இன்று நான் பிரண்டைத் துவையல் செய்து, படமெடுத்தேன். என்ன ஒரு ஒரே துவையல் வகையில் மனம் போனது.? எண்ணிக் கொண்டேன், கொஞ்ச நாள் கழித்துப் போடுவோமென. அன்புடன்
11:37 முப இல் ஏப்ரல் 5, 2012
காமாஷி அம்மா,
உங்க பின்னூட்டத்தைப் பார்த்து ‘மாம்பருப்பு’ என்று பெயரை மாற்றிவிட்டேன்.இந்தப்பெயர் நல்லாருக்கு.நீங்க சொல்லும் அதே ஊறுகாயின் பருப்புதான்.பருப்பை மட்டுமே சாப்பிட்டாலும் சூப்பர்தான்.
பிரண்டைத் துவையல் அரைப்பாங்க.ஆனால் நான் சாப்பிட்டதில்லை.சீக்கிரமே போடுங்க.ஊருக்குப் போனால்தான் செய்யலாம்.நீங்க பிரண்டையை கடையில வாங்கினிங்களா? எங்க ஊரில் வேலி ஓரங்களில் நிறைய இருக்கும்.இப்போ இருக்கோ என்னவோ.மாட்டுப்பொங்கலன்று வாயிற்படிக்கு கட்டும் தோரணத்தில் அதுவும் இருக்கும்.அன்புடன் சித்ரா.
12:36 பிப இல் ஏப்ரல் 5, 2012
This is a new dish to me..never heard/seen the “maamparuppu”! 🙂
Thuvaiyal looks delicious!
2:10 பிப இல் ஏப்ரல் 5, 2012
மகி,
நீங்க நிறைய miss பன்னிட்டீங்க.எங்க ஊர் பக்கம் முழு மாங்காயைக் கீறி உப்பு சேர்த்து ஊறுகாய்னு ஒன்னு போடுவாங்க.அது காய்ந்து முடிவதற்குள் கொட்டையின் இரண்டு பக்கமும் உள்ள சதைப் பகுதி சுத்தமாகக் காணாமல் போய்விடும்.வீட்டில் உள்ள வாண்டுகள் பிய்த்து தின்று விடுவார்கள்.அவ்வளவு ருசியாக இருக்கும்.மீதமாகும் கொட்டையை உடைத்து அதன் உள்ளே உள்ள பருப்பை குழம்புக்கு பயன்படுத்துவாங்க. அப்படியேகூட சாப்பிடலாம்.அதில் செய்த துவையல்தான் இது.
9:28 பிப இல் ஏப்ரல் 6, 2012
சித்ரா மாங்கொட்டை கசக்குமே, அதை எப்ப்டி முழு மாங்காயைக் கீறி உப்பு ஊறுகாய் போட்டுப் ப்தப்படுத்தித் துவையல் செய்ய வேண்டும் என்பதையும் கூறினால் நன்றாக இருக்கும். நீங்கள் மகிக்குக் கூறிய பதிலைப் படித்ததும் நாக்கில் எச்சில் ஊறுகிற்து.. இதில் தயிர்ப் பச்சடி கூட செய்வார்களாமே அதனையும் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன்.
10:22 முப இல் ஏப்ரல் 8, 2012
கல்யாணி,
மாங்கொட்டை கசக்காதுங்க.துவர்ப்பாக இருக்கும்.இந்த ஊறுகாயில் தயிர் பச்சடி செய்ய முடியுமான்னு தெரியல.குறிப்பைப் போட்டுவிட்டேன்.நீங்க இந்தியாவில் இருந்தால் முயற்சிக்கலாம். வெளிநாடு என்றால் கஷ்டம்தான்.ஊருக்குப் போனபோது கொட்டையை உடைத்து பருப்புகளை மட்டும் எடுத்துவந்து விட்டேன்.உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.