மிகவும் சுவையான இந்த சீயம் தீபாவளியன்று (எங்க வீட்டில்) செய்வாங்க.இதை சாப்பிட ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.என்ன கொஞ்சம் (உண்மையில் அதிகம்) வேலை வாங்கும்.
சிலர் மேல் மாவிற்கு மைதாவிற்கு பதில் புதிதாக அரைத்த இட்லி மாவைப் பயன்படுத்துவார்கள்.புளித்த மாவு என்றால் அதிகமாக எண்ணெய் குடிக்கும்.
மைதாவில் செய்யும்போது சீயம் வெள்ளையாக இருக்கும்.இட்லி மாவில் செய்யும்போது சிவந்து வரும்.
கடலைப் பருப்பிற்கு பதில் பச்சைப் பருப்பிலும் இதைச் செய்யலாம்.எங்கம்மா செய்யும் முறை எனக்குப் பிடிக்கும் என்பதால் அதையே கீழேக் கொடுத்துள்ளேன்.
தேவையானவை:
பூரணத்திற்கு:~
கடலைப்பருப்பு_ஒரு கப்
வெல்லம்_ஒரு கப்
ஏலக்காய்_1
மேல் மாவிற்கு:~
மைதா_2 கப்
அரிசிமாவு_2 டீஸ்பூன்
சமையல் சோடா_துளிக்கும் குறைவாக
மஞ்சள்தூள்_ஒரு சிட்டிகை
உப்பு_சுவைக்கு
எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
கடலைப் பருப்பைக் கழுவிவிட்டு,அது மூழ்குமளவு தண்ணீர் ஊற்றி மலர வேக வைக்கவும்.ஆனால் குழைந்திருக்கக் கூடாது.பருப்பு வெந்ததும் நீரை வடிக்கவும்.நீரை வடித்தும் நீர் இருப்பதுபோல் தோன்றினால் ஒரு சுத்தமான துணி/பேப்பர் டவலில் பரப்பிவிட்டு உலர வைக்கவும்.
வெல்லத்தை மண்,தூசு நீக்கி சுத்தம் செய்துவிட்டுப் பொடிக்கவும்.ஏலக்காயைப் பொடிக்கவும்.
கடலைப் பருப்பை மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடிக்கவும்.பிறகு ஒரு கடாயில் எடுத்து,அதனுடன் வெல்லத்தையும் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமானத் தீயில் வதக்கவும்.முதலில் சிறிது இளகி பின் கெட்டியாகும். இப்போது ஏலப்பொடியைச் சேர்த்து இறக்கவும்.
இது ஆறியதும் படத்திலுள்ளதுபோல் சிறுசிறு உருண்டைகள் பிடிக்கவும்.
மேல்மாவிற்கு கூறியுள்ள அனைத்தையும் மாவு சலிக்கும் சல்லடையில் போட்டு இரண்டு முறை சலிக்கவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு இட்லி மாவுபோல் கரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடாகியதும் உருண்டைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.எண்ணெய் அதிகமாக சூடாக இருக்கக்கூடாது.
மேலும் உருண்டைகள் உடைந்துவிடாமல் வேக வேண்டும்.உடைந்துவிட்டால் உள்ளேயுள்ள பூரணம் வெளியில் வந்து எண்ணெய் முழுவதும் பரவி கருப்பாகிவிடும்.
அதிக எண்ணிக்கையில் போடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் போடலாம். ஒன்றையொன்று ஒட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இப்போது உருண்டைகளைத் திருப்பிவிட்டு (போண்டா போல்) வெந்ததும் எடுத்துவிடவும்.
இப்போது சுவையான சீயம் நொறுக்க/சாப்பிடத் தயார்.
12:21 பிப இல் ஏப்ரல் 18, 2012
சீயம் சூப்பரா இருக்குங்க. அதுவும் அந்த பூரணம் பர்ஃபெக்ட்! ட்ரையாவும் இருக்கு, அழகா விரிசல் இல்லாமயும் உருட்டியிருக்கீங்க. கலக்கல்! 🙂
ஆடி 18 அன்று எங்க வீடுகளில் இது கட்டாயம் செய்வோம், பெயர்தான் வேறு~~~ “பணியாரம்” என்று சொல்லுவோம் நாங்க..இட்லி மாவில் செய்ததில்லை,எப்பவுமே மைதாமாவுதான். பணியாரக்கல்லில்தான் செய்வாங்க, சில சமயங்களில் டீப்ஃரை செய்வதும் உண்டு. அதுவும் இது செய்து அடுத்த நாள் சாப்பிட்டா சுவை செமையா இருக்கும்! 😛
/கொஞ்சம் (உண்மையில் அதிகம்) வேலை வாங்கும்./ 🙂 அப்படின்றீங்க? போளியுடன் ஒப்பிட்டால், இது ஈஸி! அதுவும் பொரித்து எடுத்தா சீக்கிரமே வேலை முடிந்துடும். ஹிஹி! 😉
6:40 பிப இல் ஏப்ரல் 18, 2012
மகி,
பிடித்த ஸ்வீட் என்பதால் அழகாக செய்துவிட்டேன்.நாங்களும் இதை வேறு பெயரில்தான் சொல்லுவோம்.’சொயா உருண்டை’என்போம்.பணியாரக்கல்லில் எப்படி சுடுவிங்க.உடைந்துவிடும் என்ற பயமில்லாமல் செய்யலாமே.செய்தால் ப்ளாக்கில் போடுங்க(சீக்கிரமே).நாங்களும் செய்வோமில்ல.
சீயம்,கொழுக்கட்டை போன்றவற்றை முதலிலேயே அடுத்த நாளுக்கென எடுத்து வைத்துவிடுவேன்.இன்று மாலை டீயுடன் நேற்றைய சீயம்தான். ஆமாம் மகி சுவை செமையாதான் இருந்தது.
‘போளி செய்வது’ அது ஒரு பெரிய வேளை. அதை இரண்டு நாட்களாக செய்வேன்.இதில் உருண்டைகள் எண்ணெயில் உடைந்துவிடாமல் வரவேண்டுமே என்ற பிரச்சினைதான்.நன்றி மகி.
2:46 முப இல் ஏப்ரல் 19, 2012
நாங்கள் தேங்காய் பூரணம் கிளறி அதை உருட்டி, வடைமாவு மாதிரி
உளுந்தை அரைத்து, அதில் தோய்த்துப் போட்டுப் பொரித்து ஒருவகை செய்வோம். ஸுய்யம் என்று பெயர் சொல்லுவோம்.
பாசிப்பருப்பை வேகவைத்து அரைத்து வெல்லம் சேர்த்துக் கிளறி
உருட்டியும் செய்வோம். நீ சொல்லும் அதே பக்குவம்தான். கடலைப்பருப்பு சேர்த்து நீ செய்திருப்பது போளியின் ருசியை ஞாபகப்படுத்துகிரது. நல்ல பக்குவம். நன்றாகஉள்ளது.
8:20 முப இல் ஏப்ரல் 19, 2012
காமாஷி அம்மா,
ஆமாம்,இது போளியின் ருசியில்தான் இருக்கும்.பூரணத்துடன் தேங்காய்ப்பூவையும் சேர்த்து செய்வாங்க. ஆனால் தேங்காய்ப் பூரணம் மட்டுமே வைத்து செய்ததில்லை.அடுத்த முறை நீங்க சொல்வதுபோல் செய்து பார்க்கிறேன்.மேலும் பாசிப்பருப்பில் செய்யும்போது இன்னும் சுவை கூடுதலாகத்தான் இருக்கும். உளுந்துவடைக்கு அரைக்கும்போது 2 ன் 1 டிஃபனாக செய்துவிடலாம் போலிருக்கிறதே. பகிர்தலுக்கு நன்றி அம்மா.