வெந்தயக்கீரை மசியல்
கீரையுடன் பருப்பு மட்டும் சேர்த்து செய்யும்போது ஒரு சுவை.அதுபோல் புளி சேர்த்து செய்யும்போது தனிசுவை.இதே செய்முறையில் mustard green னிலும் செய்யலாம்.இனி செய்முறையைப் பார்க்கலாம்.
தேவையானவை:
வெந்தயக்கீரை_ஒரு கட்டு
தோல் உளுந்து_ஒரு கைப்பிடி (இட்லிக்குப்போடும் உளுந்து)
சின்ன வெங்காயம்_3
பச்சை மிளகாய்_1
தக்காளி_சிறு துண்டு
பூண்டிதழ்_3
புளி_சிறு கோலி அளவு
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
மிளகு_2
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
பூண்டிதழ்_2
செய்முறை:
கீரையைச் சுத்தம் செய்து,நீரில் அலசி,தண்ணீர் வடிய வைக்கவும்.
வெறும் வாணலை அடுப்பில் ஏற்றி சூடேறியதும் உளுந்தைப் போட்டு,சிவக்க வறுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்துல் அரை டம்ளர் தண்ணீர் விட்டு,அடுப்பில் ஏற்றவும்.தண்ணீர் கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள உளுந்தைப் போட்டு வேகவிடவும்.
உளுந்து பாதி வெந்து வரும்போதே அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,பூண்டு,புளி சேர்க்கவும்.எல்லாம் சேர்ந்து கொதித்ததும் கீரையைச் சேர்க்கவும்.
கீரை வெந்ததும் இறக்கி,சிறிது உப்பு சேர்த்து,மிக்ஸியில் போட்டு மசிக்கவும்.
தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து,அதனுடன் கடைசியில் பூண்டிதழைத் தட்டிப்போட்டு வதக்கி கீரையில் சேர்த்து ஒன்றிரண்டு சுற்றுகள் சுற்றி எடுக்கவும்.
இப்போது சாதத்துடன் சேர்த்து சாப்பிட வெந்தயக்கீரை மசியல் தயார்.
5:22 பிப இல் ஏப்ரல் 22, 2012
கீரை மசியல் உளுத்தம் பருப்பு, புளி சேர்த்து புதுமையா செய்து இருக்கீங்க.. சூப்பர்..
8:29 முப இல் ஏப்ரல் 26, 2012
packya,
நான் முதன்முதலில் வெந்தயக்கீரையை (கசப்புக்கு பயந்து) இந்த முறையில்தான் செய்தேன்.வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.
11:55 முப இல் ஏப்ரல் 24, 2012
புது விதமான கீரை மசியலாக இருக்கு! போன வாரம் போஸ்ட் பண்ணிருந்தீங்கன்னா செய்து பார்த்திருப்பேன்! 🙂
இளம் கீரையாகக் கிடைத்தால் அடுத்தமுறை முயற்சித்துப் பார்க்கிறேன்,நன்றி!
8:39 முப இல் ஏப்ரல் 26, 2012
கீரையை ஒரே மாதிரி செய்தாலும் போரடிக்குது.கொஞ்சம் வித்தியாசமாக இருந்தால் பரவாயில்லை எனத்தோன்றும். இந்த சுவை பிடித்துப்போனதால் சமயங்களில் இப்படி செய்வதுண்டு.நன்றி மகி.
12:12 முப இல் ஏப்ரல் 27, 2012
மசியல் நன்ராக இருக்கு. உளுத்தம் பருப்பு சேர்த்துச் செய்வதால்
மழமழ என்று மசியல் பெயருக்கேற்றார்ப்போல சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். நான் துவரம்பருப்பு சேர்த்துச் செய்வேன். புளியிட்ட கீரை என்று சொல்லுவோம். துளி வெல்லம் கூட சேர்ப்போம்.
10:02 முப இல் ஏப்ரல் 27, 2012
காமாஷி அம்மா,
உளுத்தம்பருப்பை வறுத்து செய்வதால் அந்தளவிற்கு கொழகொழப்புத் தெரியாது. நல்ல வாசனையுடன் இருக்கும்.நான் துவரம்பருப்பிலும் செய்வேன்.ஆனால் வெல்லம் சேர்த்ததில்லை.நீங்க வேலைகளுக்கிடையில் வந்து போவதும், கருத்தைப் பகிர்வதும் மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி அம்மா.அன்புடன் சித்ரா.