கேழ்வரகு புட்டு இரண்டு வகைகளில் செய்வார்கள்.ஒன்று வேர்க்கடலை, எள், வெல்லம் சேர்த்தது.என்னுடைய ஃபேவரைட்டும்கூட. இதன் செய்முறைக்கு இங்கே நுழையவும்.மற்றொன்று தேங்காய்ப்பூ,சர்க்கரை சேர்த்தது.இதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையானவை:
கேழ்வரகு மாவு_ஒரு கப்
சர்க்கரை_தேவைக்கு
தேங்காய்ப்பூ_2 டீஸ்பூன்
ஏலக்காய்_1
உப்பு_ துளி அளவு
செய்முறை:
கேழ்வரகு மாவில் துளி உப்பு போட்டுக் கலந்து (உப்பு சேர்ப்பது சுவைக்காகத்தான்),தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு இரண்டு கைகளாலும் மாவைப் பிசறினார்போல் கிளறவும்.
தண்ணீரைச் சேக்கும்போது கொஞ்சம் கவனமாகச் சேர்க்க வேண்டும். அதிகமாகிவிட்டால் மாவு புட்டுபோல் இல்லாமல் குழைந்துவிடும்.தண்ணீர் குறைவாக இருந்தால் புட்டு வேகாமல் வெண்மையாக இருக்கும்.
பிசைந்த மாவைக் மாவைக் கையில் எடுத்து பிடிகொழுக்கட்டைக்குப் பிடிப்பதுபோல் பிடித்தால் பிடிக்க வரவேண்டும்.பிறகு அதையே உதிர்த்தால் உதிரவும் வேண்டும்.இந்தப் பக்குவத்தில் மாவைப் பிசறிய பிறகு ஒரு 10 நிமி மூடி வைக்கவும்.
பிறகு எடுத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும்.இல்லையென்றால் பிசறிய மாவை மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து ஒரு சுற்று சுற்றினால் கட்டிகளில்லாமல் நைஸாகிவிடும்.அதன்பிறகு இட்லி அவிப்பதுபோல் இட்லித் தட்டில் ஈரத்துணி போட்டு மாவை அவிக்கவும்.
ஆவி வந்து வாசனை வந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி, உதிர்த்துவிட்டு தேங்காய்ப்பூ,சர்க்கரை,ஏலத்தூள் சேர்த்துக் கிளறிவிடவும்.இப்போது சத்தான,சுவையான,இனிப்பான கேழ்வரகு புட்டு சாப்பிடத்தயார்.
3:29 பிப இல் ஏப்ரல் 29, 2012
கேழ்வரகு புட்டு எனக்கு ரெம்ப பிடிக்கும்………
5:01 பிப இல் ஏப்ரல் 30, 2012
உங்களுக்கும் பிடிக்குமா!எனக்கும் அப்படித்தான்.கேழ்வரகு மாவில் எது செய்தாலும் பிடிக்கும்.வரவிற்கு நன்றி யாஸ்மின்.
1:06 பிப இல் ஏப்ரல் 30, 2012
நம்பினா நம்புங்க,நான் இதுவரை “புட்டு” சாப்பிட்டதே சில முறைதான்! 😉
புட்டு ஆறினால் விக்கிக்கும் என்ற பயத்திலேயோ என்னவோ நான் விரும்பி சாப்பிட்டதும் இல்லை..எங்க வீட்டில் செய்ததும் இல்லை! யாராவது செய்து தந்தா டெஸ்ட்..ச்சே,டேஸ்ட் பண்ணுவேன்! படத்தில் அழகா இருக்குது. 😉 🙂
சித்ரா அக்கா,என் இங்க்லீஷ் ப்ளாகில் சர்க்கரை வள்ளி வேகவைத்து ஒரு தனி பதிவாவே போட்டுட்டேன், நேரமிருந்தா எட்டிப் பாருங்க! 🙂
5:21 பிப இல் ஏப்ரல் 30, 2012
புட்டு சாப்பிடும்போது விக்கும் என்று அதனுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவதாக சிலர் சொல்லுவாங்க. தெரியலையே.
எங்க வீட்ல செய்வாங்க.நான்தான் கேழ்வரகு சம்மந்தமான எதையும் சாப்பிடமாட்டேன்.பிறகு என் மகளுக்கு சிறு வயதிலேயே இதையெல்லாம் பழக்கம் செய்யப்போய் எனக்கும் பிடித்துவிட்டது. உங்க இங்லீஷ் ப்ளாகை இன்னும் சிறிது நேரத்தில் போய்ப் பார்க்கிறேன்.நன்றி மகி.