நீர்மோர்,தாளித்த மோர் இரண்டின் செய்முறையும் ஒன்றுதான்.தாளித்த மோருக்கு எக்ஸ்ட்ராவாக தாளிதம் செய்கிறோம்.அவ்வளவே.முதலில் நீர்மோர் செய்து குடித்துவிட்டு தெம்பாக அடுத்து தாளித்த மோர் பற்றி பார்க்கலாம்.
நீர்மோர்_தேவையானவை:
தயிர்_இரண்டு டேபிள்ஸ்பூன்
தண்ணீர்_இரண்டு டம்ளர்
உப்பு_தேவைக்கு
பெருங்காயத்தூள்_துளிக்கும் குறைவாக
வெறும் வாணலில் வறுத்துப்பொடித்த வெந்தயத்தூள்_துளிக்கும் குறைவாக
வெறும் வாணலில் வறுத்துப்பொடித்த சீரகத்தூள்_துளிக்கும் குறைவாக
இஞ்சி_சிறு துண்டு
கறிவேப்பிலை_ஒன்றிரண்டு இலைகள்
கொத்துமல்லி இலை_ஒன்றிரண்டு இலைகள்
செய்முறை:
தயிரை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் கட்டிகளில்லாமல் வந்துவிடும்.அல்லது கரண்டியைக்கூட பயன்படுத்தலாம். அதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நம்ம ஊரில் டீ,காஃபி ஆத்துவோமே அதுமாதிரி இரண்டு ஆத்து ஆத்தவும்.
இதனுடன் மேலே கொடுத்துள்ளத் தேவையானப் பொருள்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இப்போது சுவையான நீர்மோர் குடிக்கத் தயார்.
பிறகு விருப்பமானவற்றில்(கப்,டம்ளர் போன்றவை)ஊற்றி குடிக்கலாம்.
தாளித்த மோர்_தேவையானவை:
நீர்மோர்_ஒரு கப்
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்தமிளகாய் அல்லது பச்சை மிளகாய்
(பெருங்காயம்,கறிவேப்பிலை இரண்டும் நீர்மோரிலேயே இருப்பதால் போடவேண்டுமென்பதில்லை.விருப்பமானால் இவற்றையும் சேர்த்துத் தாளித்துக்கொள்ளலாம்)
செய்முறை:
தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து மோரில் கொட்டிக்கலக்கவும்.
இதனை சாதத்துடன் ரசம் மாதிரி ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும்.உடன் உருளைக்கிழங்கு பொரியல் அல்லது துவையல் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
12:50 பிப இல் மே 9, 2012
நீர்மோரில் வெந்தயம்-சீரகம் பொடித்து போட்டதாய் நினைவில்லை..கறிவேப்பிலை,இஞ்சி,பச்சமிளகாய் பொடியா நறுக்கி போட்டு செய்வேன். தயிரை மிக்ஸியில் அடிப்பதற்கு பதிலா கடையில் பட்டர்மில்க் வாங்கினா வேலையும் குறைவு, ருசியும் அருமை! 😉 அதுவும் இங்கே மிடில் ஈஸ்டர்ன் மார்க்கட்டில் கிடைக்கும் மோர் சூப்பரா இருக்கும்! 😛
/நம்ம ஊரில் டீ,காஃபி ஆத்துவோமே அதுமாதிரி/ ஹாஹ்ஹா! நான் இங்கயும் கூட டீ-யை ஆத்தித்தான் குடிப்பேன் சித்ராக்கா! இந்த ஊர் கப்களில் விளிம்பு இல்லாததால் இப்படி ஆத்த சிரமமா இருக்கும். ஒவ்வொரு முறை ஊருக்கு போயிட்டு வரைலயும் கிண்ணம்- டம்ளர் இப்படி ஒண்ணொண்ணா கொண்டுவந்துட்டேன்! 🙂
வெயிலுக்கேற்ற பதிவு.
11:33 முப இல் மே 10, 2012
மகி,
சீரகப்பொடி சேர்க்காவிட்டாலும் வெந்தயப்பொடி சேர்த்துப் பாருங்க,நல்ல சுவையுடன் வாசனையா இருக்கும். எனக்கும் ஒருவர் சொல்லித்தான் சேர்க்க ஆரம்பித்தேன்.பட்டர்மில்க் வாங்கினால் வேலை குறைவுதான்.மோர் குழம்பிற்காக சமயங்களில் தயிர் உறைய வைப்பேன்.
இங்கே அந்த பட்டர்மில்க் எல்லா இன்டியன் கடைகளிலும் கிடைக்கும். அடிக்கடி வாங்குவேன்.எவ்வளவு தண்ணீர் சேர்த்தாலும் சேர்த்த மாதிரியே தெரியாது. உப்பும் அப்படியே இருக்கும்,நல்ல சுவையுடன்.அதுதானே மகி!
“ஒவ்வொரு முறை ஊருக்கு போயிட்டு வரைலயும் கிண்ணம்- டம்ளர் இப்படி ஒண்ணொண்ணா கொண்டுவந்துட்டேன்!”_ எல்லோருமே அப்படித்தானோ?