வத்தக் குழம்பு என்றாலே நினைவுக்கு வருவது சுண்டைக்காயும், மணத்தக்காளியும்தான்.அதேபோல் வத்தக்குழம்பிற்கான காய்கள் எனும்போது வெண்டை,கத்தரி,முருங்கை இவை நன்றாக இருக்கும்.
மசாலாவுக்குத் தேவையானதை வறுத்துப் பொடிப்பதால் நல்ல வாசனையுடன் இருக்கும்.பொடிப்பதற்குப் பதிலாக சிறிது தண்ணீர் தெளித்து அரைத்தும் செய்யலாம்.
தேவையானவை:
வெண்டைக்காய்_10
சின்ன வெங்காயம்_2
முழு பூண்டு_1
வறுத்து அரைக்க:
கொத்துமல்லி விதை_2 கைப்பிடி
சுண்டைக்காய் வத்தல்_10 க்குள் (அ) மணத்தக்காளி வத்தல்_ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_4
சின்ன வெங்காயம்_7
தக்காளி_பாதி
மஞ்சள்_சிறுதுண்டு
மிளகு_5
சீரக்ம்_சிறிது
வெந்தயம்_சிறிது
துவரம்பருப்பு_சிறிது(விருப்பமானால்)
தேங்காய்ப் பத்தை_2
புளி_பெரிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை_சுமார் 10 இலைகள்
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
வடகம்
சீரகம்
கடலைப்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
வெறும் வாணலியை அடுப்பிலேற்றி சூடாகியதும் முதலில் கொத்துமல்லி விதையைப் போட்டு வறுக்கவும்.அது பாதி வறுபடும்போதே துவரம்பருப்பு, மிளகு சேர்த்து வறுக்கவும்.
இவை வறுபட்டதும் கூடவே காய்ந்த மிளகாய், சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
அதே வாணலில் தேங்காய்த் துருவலைப் போட்டு சிவக்க வறுத்து அதனுடன் புளியைச் சேர்த்து வதக்கி,தனியாக வைக்கவும்.
மீண்டும் வாணலை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விட்டு முதலில் வெங்காயம் அடுத்து தக்காளி என சேர்த்து வதங்கியதும் இறக்கவும்.
இவை ஆறியதும் முதலில் கொத்துமல்லிக் கலவையை மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும்.இவை நன்கு பொடிந்ததும் அதனுடன் புளி&தேங்காய்த் துருவல் சேர்த்துப் பொடிக்கவும்.அடுத்து வெங்காயம்,தக்காளியைத் தனியாக அரைத்து வைக்கவும்.அல்லது இவை எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் தெளித்து மைய அரைத்தெடுக்கவும்.
குழம்பு செய்ய வெங்காயம் நறுக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும். வெண்டைக்காயின் இரு முனைகளையும் நறுக்கிவிட்டு வைக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டு ,வெண்டைக்காயை நன்றாக வதக்கித் தனியாக வைக்கவும்.
பிறகு அந்தப் பாத்திரத்திலேயே மேலும் சிறிது எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து பொடித்துவைத்துள்ள பொடி,அரைத்துவைத்துள்ள வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கி தேவையானத் தண்ணீர் விட்டு,உப்பு போட்டு மூடி கொதிக்க வைக்கவும்.
குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் மிதக்கும் சமயம் வெண்டைக்காயைச் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.
கீழே படத்திலிருப்பது கத்தரிக்காய் சேர்த்த வத்தக்குழம்பு.
10:08 பிப இல் ஜூன் 13, 2012
ஆஹா,அருமையான குழம்பு! ப்ரெஷ்ஷா மசாலா அரைத்து ஊற்றினாலே குழம்பு தனி ருசிதான்! ஆனால் 2 கைப்பிடி தனியாதான் கண்ணைக் கட்டுது சித்ராக்கா! நான் மேக்ஸிமம் 1 டேபிள்ஸ்பூன் மல்லி தான் வறுப்பேன். 😉
சூப்பர் குழம்பூ! 😛 😛
4:30 பிப இல் ஜூன் 16, 2012
“2 கைப்பிடி தனியாதான் கண்ணைக் கட்டுது”_அப்படியா!பார்க்கத்தான் டெரர் லுக்.சுத்தமாக காரம் இருக்காது.அடுத்த நாள் காலை good food க்கும்(பழைய சாதம்தான்_என் மகள் ஸ்டைலில்) சேர்த்து கொஞ்சம் அதிகமாகத்தான் வைத்தேன்.கருத்துக்கு நன்றி மகி.
10:41 பிப இல் ஜூன் 13, 2012
எப்பவும் வற்றல்களை நான் வறுத்துப் போடுவதுடன் சரி. அறைப்பதில்லை. நிறைய ஸாமான்கள். தனியாதான் என் கணக்கிலும் கொஞ்சம் அதிகம் போலத் தோன்றியது. சற்று கிரேவியாக இருப்பதும் ருசியாக இருக்கும். வற்றக்குழம்பு
சாதம் நெய் போட்டுச் சாப்பிட ருசி. மொத்தத்தில் நல்ல குழம்பு
காரக்குழம்பு என்று சொல்வது இதுவா?
5:06 பிப இல் ஜூன் 16, 2012
காமாஷி அம்மா,
அப்படியே வறுத்துப் போட்டால் சாப்பிடும்போது ஒதுக்கிவிடுகிறார்கள்.அரைத்து சேர்க்கும்போது முதலில் கொஞ்சம் கசப்புத் தெரியும்.நேரமாக ஆக நல்ல சுவையுடன் இருக்கிறது.
காரக்குழம்பு ஹாஸ்டலில் சாப்பிட்டிருக்கேன்.அதுதான் நிஜக் காரக்குழம்பா தெரியவில்லை.காய்கள் எதுவும் இருக்காது.இப்போது நினைத்தாலும் சுவை தெரிகிறது.ஆனால் செய்முறை தெரியவில்லை.கருத்துக்கு நன்றி அம்மா.அன்புடன் சித்ரா.
1:07 பிப இல் ஜூன் 17, 2012
/அப்படியே வறுத்துப் போட்டால் சாப்பிடும்போது ஒதுக்கிவிடுகிறார்/ இது எங்க வீட்டிலும் நடக்க ஆரம்பித்துவிட்டது. இனிமேல் உங்க டெக்னிக்கை ஃபாலோ பண்ணனும்னு நினைக்கிறேன் சித்ராக்கா! கொஞ்சம் கசப்பு தெரிந்தாலே என்னவர் சாப்பிடமாட்டார். இருந்தாலும் ஒரு முறை முயற்சித்துப் பார்க்கணும். 😉 🙂
1:46 பிப இல் ஜூன் 18, 2012
மகி,
உங்க வீட்டிலும் அப்படித்தானா!முதலில் வத்தலை மிகக்கொஞ்சமாக அரைத்து சேர்த்துப் பாருங்க.இந்தக் கசப்பும் ஒரு தனி டேஸ்ட்தானே.