கீரை வடை

 

ரோல்டு ஓட்ஸை நன்கு சூடுவர வறுத்துப் பொடித்து வைத்துக்கொண்டால் சமயங்களில்  அதை சீரியல், பொங்கல், உப்புமா, கிச்சடி,களி என பலவற்றிற்கும் பயன்படுத்தலாம். நல்ல வாசனையுடன் இருக்கும்.

இந்த மாவை வைத்துத்தான் கீரைவடை செய்தேன்.இதனை முருங்கைக்கீரை என்றில்லாமல் வேறு எந்தக்கீரையிலும் செய்யலாம்.சூப்பர் மொறுமொறுப்புடன், வாசனையாகவும் இருந்தது.நீங்களும் முயற்சிக்கலாமே.

தேவையானவை:

கடலைப்பருப்பு_ஒரு கப்
ரோல்டு ஓட்ஸ்_ஒரு கப்
முருங்கைக்கீரை_ஆய்ந்தது இரண்டு கப்
சின்னவெங்காயம்_சுமார் 10
பச்சைமிளகாய் அல்லது காய்ந்தமிளகாய்_1 காரம் விரும்பினால் கூட ஒன்று சேர்த்துக்கொள்ளலாம்.
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்
பூண்டிதழ்_2
கறிவேப்பிலை&கொத்துமல்லி இலை_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

கடலைப் பருப்பைக் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.கழுவிவிட்டு ஊறவைத்தாலும் சரி,ஊற வைத்துக் கழுவினாலும் சரி.நன்றாக ஊறியதும் நீரை வடித்துவிடவேண்டும்.

கடலைப் பருப்பு ஊறிக்கொண்டிருக்கும்போதே ஓட்ஸை முதலில் சொல்லியதுபோல் நைஸாக பொடித்து எடுத்துக்கொள்ளவும்.

மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் கடலைப்பருப்பைப் போட்டு அதனுடன் மிளகாய்,பெருஞ்சீரகம்,பூண்டு சேர்த்து தண்ணீர் விடாமல் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

இந்த மாவுடன் ஓட்ஸ் மாவு,சுத்தம் செய்த கீரை,பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை&கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசைந்து இறுதியில் உப்பு சேர்த்துப் பிசையவும்.

முதலிலேயே உப்பு சேர்த்தால் கீரையின் அளவை வைத்து அதிகமாக சேர்க்க வாய்ப்புண்டு.எல்லாவற்றையும் பிசைந்தபிறகு கீரை இருக்குமிடமே தெரியாது. இப்போது சேர்த்தால் திட்டமாகச் சேர்க்கலாம்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடானதும் மாவிலிருந்த்து பெரிய நெல்லிக்காய் அளவு அல்லது சிறு எலுமிச்சை அளவு மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறம் வெந்து சிவந்ததும் எடுத்துவிடவும்.எண்ணெய் கொண்டமட்டும் தட்டிப்போடலாம்.

இவ்வாறே எல்லா மாவையும் வடைகளாகத் தட்டி எடுக்கவும்.இப்போது கமகம,மொறுமொறு,சத்தான,சுவையான வடைகள் தயார்.

தேங்காய் சட்னி அல்லது கெட்சப்புடன் சாப்பிட மேலும் சுவையாக இருக்கும்.

12 பதில்கள் to “கீரை வடை”

  1. ranjani135 Says:

    இங்கு கிடைக்கும் ஓட்ஸ் வைத்தும் (பொடி செய்து) பயன்படுத்தலாமா? வரும் வாரக்கடைசியில் செய்ய அருமையான செய்முறை கொடுத்திருக்கிறீர்கள். நன்றி

    • chitrasundar5 Says:

      ரஞ்சனி,

      வருகைக்கு நன்றி.ஓட்ஸை நைஸாகப் பொடிக்க முடிந்தால் செய்யலாம்.அங்கு கிடைப்பது எப்படி எனத் தெரியவில்ல .தண்ணீர் விட்டு அரைத்தால் பிசுபிசுப்பாகிவிடும். மிக்ஸியைப்பற்றிக் கவலைப்படாமல் பொடிச்சு செஞ்சி பாத்துட்டு வந்து சொல்லுங்க.நன்றி.

  2. chollukireen Says:

    நல்ல ஐடியா. ஓட்ஸ் மாவு வடைமாவின் ஈரத்தை இழுத்துக் கொண்டு கரகரப்பை அதிகமாக்கும். கீரை, சின்னவெங்காயம், பெருஞ்சீரகம், பூண்டு வாஸனை ஜமாய்க்க சுடச்சுட,ரஸிக்குமே, இன்னும் கொஞ்சம் கேட்குமேன்னு சொல்லத் தோன்றியது. ஜமாய்

    • chitrasundar5 Says:

      காமாஷிமா,

      சாதாரணமாக செய்யும்போது கொஞ்சம் மீதமாகும்.அடுத்தநாள் போட்டிப்போட்டுக்கொண்டு சாப்பிடுவோம்.ஆனால் இந்த வடை செய்த அன்று எல்லாமே காலி.நல்ல கரகரப்பாக இருந்தது.நன்றி அம்மா.அன்புடன் சித்ரா.

  3. Mahi Says:

    Nice n crisp tea time snack! Looks yummy!

  4. ranjani135 Says:

    ஓட்ஸ் வடை நன்றாக வந்தது சித்ரா. ஓட்ஸை சற்று வறுத்து விட்டு பொடி செய்து போட்டேன். மிகவும் கரகரப்பாக இருந்தது. அருமையான மாலை சிற்றுண்டி செய்முறை எழுதியதற்கு நன்றி. அன்புடன் ரஞ்ஜனி

    • chitrasundar5 Says:

      ரஞ்ஜனி,

      ஓட்ஸ் வடையை செய்து பார்த்து,நன்றாக வந்து, பின்னூட்டமும் அளித்தது மகிழ்ச்சியாக உள்ளது.அந்த பொடித்த மாவை வைத்து உப்புமா, பொங்கல், கிச்சடி,பாயஸம் என செஞ்சி பாருங்க. சுவையுடன் வாஸனையாகவும் இருக்கும். வறுத்துப் பொடிப்பதால் கொழகொழப்பும் இருக்காது.செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தற்கு உங்களுக்கும் நன்றி.

      • ranjani135 Says:

        நீங்கள் சொல்லுவது சரி. என் யோகா தோழி ஒருவர் இட்லி அல்லது தோசை செய்யும்போது சிறிது மாவைத் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு அதில் ஊற வைத்த ஓட்ஸ் சேர்த்து இட்லி, தோசை செய்து சாப்பிடுவதாக சொன்னார். நாமும் அப்படியே செய்யலாமே என்று செய்தபோது சற்று கொழகொழவென இருந்தது. நீங்கள் சொல்லுவது போல வறுத்து பொடி செய்தால் இந்தக் கொழகொழப்பு வருவதில்லை. என் தோழியிடமும் இந்த யோசனையை சொல்லி இருக்கிறேன்.

      • chitrasundar5 Says:

        ரஞ்ஜனி,

        வறுத்துப் பொடித்துச் செய்வதற்கு முன்பெல்லாம் ஓட்ஸ் என்றாலே எனக்கும் பிடிக்காது.இப்போதெல்லாம் அதன் மணம்&சுவை இரண்டிற்காகவும் விரும்பி சமைப்பேன்.வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.


Mahi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி