நீண்ட நாட்களாக மிளகாய் பஜ்ஜி செய்ய வேண்டுமென ஆசை.ஆசையைத் தூண்டியது இந்தப்பதிவுதான்.சம்மர் வரட்டும் என்றிருந்தேன்.அப்போதுதான் மார்க்கெட்டில் விதவிதமான,கலர்கலரான மிளகாய்கள் வரும்.அவற்றில் காரமில்லாத இரண்டுவிதமான மிளகாய்கள் வாங்கியாச்சு.
எப்போதும் ஒரே விதமாக செய்வதற்கு பதில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று கடலைப்பருப்பை ஊறவைத்து அரைத்து செய்தேன்.இந்த ஐடியாவை எனக்கு சிலபல வருடங்களுக்கு முன்பு என் சகோதரி,”பஜ்ஜியை கடலைமாவில் செய்வதற்கு பதில் கடலைப்பருப்பை ஊறவச்சி அரைச்சு செஞ்சா சூப்பரா இருக்கும்”னு சொன்னாங்க.அதை நினைத்தே நானும் செய்தேன்.சூப்பராக வந்தது.
காரமேயில்லாத அந்த மிளகாய்கள் இவைதான்.
மிளகாயைக் கீரி அதன் உள்ளேயுள்ள விதைப்பகுதியை நீக்கிவிட்டு,காருமோ என பயந்து கழுவித் துடைத்துவிட்டு பஜ்ஜிக்குத் தயார் நிலையில் உள்ளன
மிளகாய் பஜ்ஜி தயாராகிவிட்டது.
சாப்பிட்ட திருப்தியில் இனி செய்முறையைப் பார்க்கலாம்.
தேவையானவை:
கடலைப் பருப்பு_ஒரு கப்
அரிசிமாவு_2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_10
பூண்டிதழ்_5
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்_சிறித்
ஓமம்_சிறிது
காரமில்லாத மிளகாய்கள்_கொஞ்சம்
செய்முறை:
கடலைப் பருப்பை ஊறவைத்துக் கழுவி நீரை வடித்துவிட்டு கிரைண்டரில் போட்டு மைய அரைக்கவும்.
அரைக்கும்போதே பெருஞ்சீரகம்,காய்ந்தமிளகாய்,பூண்டிதழ் சேர்த்து அரைக்கவும். மிளகாய் காரம் அதிகமாக இருப்பின் குறைத்து சேர்க்கவும்.நான் 10 மிளகாய் சேர்த்தும் சுத்தமாகக் காரமில்லை.
தேவையானால் சிறிது தன்ணீர் தெளித்து மைய அரைத்தெடுக்கவும்.
மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் அரிசிமாவு, பெருங்காயம்,ஓமம்,உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக்கொள்ளவும்.தேவையானால் அரிசிமாவைக் கொஞ்சம் அதிகமாகவே சேர்க்கலாம்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி,எண்ணெய் காய்ந்ததும் மிளகாய்களை பஜ்ஜி மாவில் தோய்த்து,அதிகப்படியான மாவை வழித்துவிட்டு கவனமாக எண்ணெயில் போடவும்.
இதேமாதிரி எண்ணெய் கொண்டமட்டும் போடவும்.ஒருபக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
இப்போது சுவையான மிளகாய் பஜ்ஜிகள் தயார்.
தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.இல்லாவிடில் கெட்சப்புடனும் சாப்பிட நன்றாக இருக்கும்.
மீதமான மாவில் காலிஃப்ளவர்,வாழைக்காய் பஜ்ஜிகளும் போட்டாச்சு.
கீழேயுள்ளவை கடலை மாவில் செய்தவை.இதன் செய்முறையைக் காண இங்கே செல்லவும்.
மிளகாயின் நுனிப்பகுதியிலிருந்து அடிப்பகுதிவரை ஒரு பக்கம் மட்டும் கீறிவிட்டு அதனுள்ளே உள்ள விதைப்பகுதியை நீக்கிவிட்டு விருப்பமான மசாலாவை அடைத்து பஜ்ஜி மாவில் தோய்த்தும் பஜ்ஜி போடலாம்.
8:20 முப இல் ஜூலை 14, 2012
காலங்காத்தால தெரியாம 😉 இந்தப் பக்கம் வந்துட்டேன்..பஜ்ஜிகளின் அணிவகுப்பு சும்மா மிரட்டுதே! 😉 😉
எல்லா பஜ்ஜிகளும் ஜூஊஊஊஊஊஊப்பர்! 😛
நான் எதுக்கும் அப்பறமா வந்து ரெசிப்பிகளை படிச்சுப் பார்க்கிறேன் சித்ராக்கா! 🙂
7:44 பிப இல் ஜூலை 14, 2012
வாங்கவாங்க,மெதுவா வாங்க,அடுத்த நாள்தான் நல்லாருக்கும்.
11:09 பிப இல் ஜூலை 14, 2012
டெம்ப்ளேட் எல்லாம் மாத்தி…தமிழில் தேதி போட்டு..கடலைப்பருப்பை அரைச்சு பஜ்ஜி போட்டு…கலக்கிட்டீங்க போங்க! 🙂 சூப்பரா இருக்கு எல்லாமே!
கடலைப்பருப்பை அரைச்சு பஜ்ஜிக்கு உபயோகிப்பது கேள்விப்பட்டிருக்கேன், இப்பதான் போட்டோவுடன் பார்க்கிறேன். மிளகாய்கள் எல்லாம் அழகழகா இருக்கு. அதுவும் அந்த horizontal-ஆ கட் செய்து இருப்பது பூ மாதிரியே இருக்கு. 🙂
10:44 பிப இல் ஜூலை 15, 2012
டெம்ப்ளேட் மாத்தரதுக்கு இரண்டு வாரம் முன்பே முதலில் உள்ள பஜ்ஜிகளும், போன வாரம் இரண்டாவது பஜ்ஜியும் செய்தேன்.அடிக்கடி செய்யக்கூடாதுனு நெனச்சிட்டே இந்த வாரமும் குட்டிகுட்டி மிளகாய்கள் வாங்கியாச்சு.இந்த வாரம் மார்க்கெட்டில் அதிசயமாக முருங்கைக்கீரை ஃப்ரெஷ்ஷா வந்திருந்தது. சூப்பர்.
டெம்ப்ளேட் ஒரே ஜிகுஜிகுனு இருந்ததால் மீண்டும் பழசுக்கே போயாச்சு. தேதியை அவனே தமிழில் கொடுத்திருக்கான்.இன்னும் சில மாற்றங்கள்.
எனக்கும் கடலைப்பருப்பை அரைத்து செய்தது இதுதான் முதல்முறை. நல்லாவே இருந்துச்சு.வருகைக்கு நன்றி மகி.
11:55 பிப இல் ஜூலை 14, 2012
அழகழகான அருமையான ருசியான பஜ்ஜிகள். வகைக்கு ஒன்றாக சாப்பிட்டதே வயிறு நிறைந்து விட்டது. அறைத்துப் போட்டால் ருசி தூக்கலாகவே இருக்கும். கொஞ்சம் எண்ணெய் குடிப்பதுபோலத் தோன்றும். ஆனால் ருசிக்கு முன்னால் எதுவுமில்லை. இன்னும் எழுதலாம்.
எல்லாரும் பருப்பை ஊறப்போடுங்கள்
10:53 பிப இல் ஜூலை 15, 2012
காமாஷிமா,
அரைத்த மாவு கெட்டியா இருக்குன்னு கொஞ்சம் தண்ணீர் சேர்த்துவிட்டேன். அதனால் கொஞ்சம் எண்ணெய் குடித்தது.ஆனாலும் சுவையாக இருந்தது.அடுத்த தடவ கொஞ்சம் கவனமா இருக்கனும்.
‘எல்லாரும் பருப்பை ஊறப்போடுங்கள்’_செய்துவிட வேண்டியதுதான். வாங்கக்கூடாது என நினைத்துக்கொண்டே இந்த வாரமும் குட்டிமிளகாய்கள் வாங்கி வந்திருக்கேன்.அன்புடன் சித்ரா.