கொழுக்கட்டை இல்லாத விநாயகர் சதுர்த்தியா!இந்த முறை சிவப்பரிசியில் செய்துள்ளேன்.இளம் பிங்க் நிறத்தில் பார்க்கவே அழகாக இருந்தது.நீங்களும் செய்துபார்த்து,சுவைத்துவிட்டு வந்து சொல்லுங்க.
வெல்லம்,எள் இவற்றின் அளவை அவரவர் விருப்பம்போல் கூட்டிக் குறைத்துக்கொள்ளலாம்.
மேல் மாவிற்கு:
சிவப்புப் பச்சரிசி/மட்டரிசி_2 கப்
உப்பு_சிறிது
பூரணத்திற்கு:
வறுத்துத் தோலெடுத்த வேர்க்கடலை _1 கப்
பொடித்த வெல்லம்_ஒரு கப்
வறுத்த எள்_ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்_1
செய்முறை:
சிவப்பரிசியைத் தண்ணீரில் ஊறவைத்து,ஊறியதும் நீரை வடித்து விடவும்.பிறகு மிக்ஸியில் போட்டு ஈர மாவாக,நைஸாக இடித்துக்கொள்ளவும்.
இட்லிப்பாத்திரத்தை அடுப்பிலேற்றி சூடாகியதும் ஒரு இட்லித்தட்டை அதில் வைத்து,அதில் ஈரத்துணியைப்போட்டு மாவைப் போட்டு மூடி அவிக்கவும்.
சுமார் 10 லிருந்து 15 நிமிடங்களில் மாவு வெந்துவிடும்.மாவின் அளவைப்பொறுத்து வேகும் நேரம் மாறுபடும். மூடியைத்திறந்து மாவைக் கையால் தொட்டுப்பார்த்து,கையில் மாவு ஒட்டவில்லை என்றால் ஒரு பெரிய தட்டில் மாவை எடுத்துக்கொட்டி,கட்டிகளில்லாமல் உடைத்துவிட்டு, சிறிது உப்பு சேர்த்து இளஞ்சூடான தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.பிசைந்த மாவை உருட்டி ஒரு ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
பிசைந்த மாவு கைகளில் ஒட்டக்கூடாது.ஒட்டினால் இன்னும் மாவு கொஞ்சம் வேகவேண்டும்.அதற்கு மாவில் சிறிது தண்ணீரைத் தெளித்து மைக்ரோ அவனில் இரண்டு தடவை 1/2 நிமிடத்திற்கு வைத்து எடுத்தால் சரியாகிவிதும்.இது சரியாக வேகவில்லை என்றால் மட்டுமே.
வேர்க்கடலை,வெல்லம்,எள்,ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து இரண்டு சுற்றுசுற்றி கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தால் தெரியும்.
பிசைந்த மாவில் சிறு எலுமிச்சை அளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து லேஸாக உருட்டி சிறு வட்டம் மாதிரி தட்டிக்கொண்டு,அதில் கொள்ளுமளவு கொஞ்சம் பூரணத்தை வைத்து படத்திலுள்ளதுபோல் மடித்து ஓரத்தை அழுத்திவிடவும்.
இதுபோல் எல்லாவற்றையும் செய்துகொள்ளவும்.அல்லது ஒரு தட்டு வேகும்போதே அடுத்த தட்டுக்கு செய்துகொள்ளலாம்.இட்லிப்பானயில் ஒரு தட்டை வைத்து அதில் ஈரத் துணியைப் போட்டு,ஒன்றன் மேல் ஒன்று ஒட்டாமல் அடுக்கி வேகவைக்கவும்.ஏற்கனவே மாவு வெந்துவிட்டதால் 5 லிருந்து 10 நிமிடத்திற்குள்ளாகவே வெந்துவிடும்.
மூடியைத் திறந்து தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டாமல் இருந்தால் வெந்துவிட்டது எனலாம்.இட்லித்தட்டை அப்படியே எடுத்துக்கொட்டாமல் ஒவ்வொன்றாக எடுத்துவைக்கவும்.
இப்போது சுவையான இந்த சிவப்பரிசிக் கொழுக்கட்டைகளை எடுத்துச் சாப்பிட வேண்டியதுதான்.இதுவும் அன்றே சாப்பிடுவதைவிட அடுத்த நாள் இன்னும் சுவையாக இருக்கும்.
பச்சரிசியில் செய்த வெள்ளை வெளேர் கொழுக்கட்டைக்கு இங்கே செல்லவும்.
ஆவியில் வேக வைக்குமுன் வெந்த பிறகு
10:39 பிப இல் செப்ரெம்பர் 17, 2012
அன்புள்ள சித்ரா,
கொழுக்கட்டைகள் பார்க்க ரொம்ப அழகாக இருக்கின்றன. நேற்று தொலைக்காட்சியில் திருமதி ரேவதி சண்முகம் இதை செய்து காட்டினார்கள். பூரணம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. பயத்தம்பருப்பு போட்டு செய்திருந்தார். நாளை கட்டாயம் செய்து பார்க்கிறேன். எனக்கு சொப்புகள் அத்தனை நன்றாகச் செய்ய வராது. பரவாயில்லை, செய்து பார்த்துவிட்டு எழுதுகிறேன்.
பண்டிகைக்கு வாழ்த்துக்கள்!
5:15 பிப இல் செப்ரெம்பர் 18, 2012
ரஞ்சனி,
உங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்.வாழ்த்திற்கும் நன்றி.
வேர்க்கடலைக்கு பதிலா எள்,வேகவைத்த கடலைப்பருப்பு,பெரும்பயறு, தேங்காய் இவற்றையும் பயன்படுத்தலாம்.ஆனாலும் வேர்க்கடலை வைத்து செய்தால்தான் ருஸி அதிகமா இருக்கும்.
மாவு நல்லா வெந்தாச்சுன்னா முக்கால்வாசி வேலை முடிந்தது. வேகலைன்னாதான் சொப்பு உடைந்துவரும்.ஆவலா இருக்கேன்,உங்க வீட்டு கொழுக்கட்டை என்ன டிசைனில் இருக்குமென்று!
7:13 முப இல் செப்ரெம்பர் 18, 2012
வீட்டில் குறித்துக் கொண்டார்கள்…
சிவப்பரிசிக் கொழுக்கட்டை செய்ததில்லை…
/// நேற்று தொலைக்காட்சியில் திருமதி ரேவதி சண்முகம் இதை செய்து காட்டினார்கள். – ரஞ்ஜனி அம்மா /// – வீட்டில் இதையே இணையத்தில் தேடச் சொல்லி உள்ளார்கள்…
நன்றி அம்மா…
5:23 பிப இல் செப்ரெம்பர் 18, 2012
திண்டுக்கல் தனபாலன்,
இரண்டு அரிசிகளின் சுவையும் ஏறக்குறைய ஒன்றுபோலதான் இருக்கும்.செய்து பார்க்கச் சொல்லுங்க.தொடர் வருகைக்கு நன்றி.