எல்லோரும் ஸ்வீட் முறுக்கு எடுத்துக்கோங்க.இது எனது முந்நூறாவது பதிவு.
அச்சுமுறுக்கு செய்வது எனக்கு இதுதான் முதல்முறை.வீட்டில் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் ஞாயிறன்று அச்சு வாங்கியாச்சு.அம்மாவிடம் செய்முறை வாங்கி செய்தேன்.ஈர பச்சரிசி மாவிற்குபதில் கடையில் வாங்கிய மாவில் செய்தேன். சரியாக வந்தால் பார்க்கலாம்,இல்லையென்றால் தூக்கிப் போட்டுவிடலாம் என்ற தைரியத்தில்.
முதல் இரண்டு முறுக்குகளை அச்சிலிருந்து பிரிக்கவே முடியவில்லை.அச்சை அக்குவேறு,ஆணிவேறாகப் பிரித்து,முறுக்குகளைப் பிய்த்தெடுத்தேன். கோபம்கோபமாக வந்தது.இவர் கொஞ்சம் ஸ்ட்ராங்காக சொல்லியிருந்தால் வாங்காமலேயே வந்திருக்கலாமே என்றுகூடத் தோன்றியது.ஆனால் அடுத்தடுத்து செய்யும்போது அழகாக வந்துவிட்டது.அச்சு புதிதாக இருந்து,முதல்முறை செய்வதாக இருந்தால் கொஞ்சம் (நிறையவே) பொறுமை அவசியம்.
அச்சு இதுதான்.ஒரு மரக்கைப்பிடியுடன் கிடைக்கிறது.
தேவையானவை:
பச்சரிசி மாவு_ஒரு கப்(கடையில் வாங்கியது)
மைதா_ஒரு டேபிள்ஸ்பூன்
வெல்லம்_3/4 கப்
தேங்காய்ப்பால்_3/4 டம்ளர்
எள்_சிறிது
ஏலக்காய்_1 (பொடித்துக்கொள்ளவும்)
உப்பு_துளி
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
அரிசிமாவு,மைதா,எள்,உப்பு,ஏலக்காய்த்தூள் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும்.
வெல்லத்தைப் பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அது கரையும் அளவிற்கு சிறிது தண்ணீர் விட்டு,அடுப்பிலேற்றி சூடுபடுத்தவும்.வெல்லம் தண்ணீரில் கரைந்ததும் வடிகட்டி ஆறவைத்து மாவில் ஊற்றிக் கரைக்கவும்.
தேங்காய்ப்பாலையும் சேர்த்துக் கரைக்கவும்.கரைத்த மாவு தோசைமாவு பதத்தில் இருக்கட்டும்.தேவையானால் சிறிது தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.
வாணலில் எண்ணெய் ஊற்றி,அடுப்பிலேற்றி எண்ணெய் சூடானதும் முறுக்கு அச்சை எண்ணெயில் போட்டு வைக்கவும்.
அச்சு சூடானதும் எடுத்து மாவில் முக்கால் பாகம் மூழ்குமாறு செய்து, சூட்டினால் மாவு அச்சில் பிடித்துக்கொள்ளும். அப்படியே அச்சை எண்ணெயில் விடவும்.
முறுக்கு பாதி வேகும்போதே ஒரு மரக்குச்சியால் அச்சிலிருந்து முறுக்கை லேஸாகப் பிரித்துவிடவும்.ஏற்கனவே வெந்திருப்பதால் ஒருமுறைத் திருப்பிவிட்டு உடனே எடுத்துவிடலாம்.
மீண்டும் அச்சை எண்ணெயில் வைத்து சூடேற்றி முன்பு சொன்னது போலவே செய்யவும்.இவ்வாறே ஒவ்வொரு முறையும் செய்யவும்.இரண்டு அச்சு இருந்தால் செய்ய வசதியாக இருக்கும்.
இப்போது சுவையான அச்சு முறுக்கு சாப்பிடத்தயார்.
12:52 முப இல் ஒக்ரோபர் 12, 2012
அச்சு இருக்கு… இதுவரை செய்யவில்லை… செய்து பார்ப்போம்…
மிக்க நன்றி அம்மா…
6:10 பிப இல் ஒக்ரோபர் 12, 2012
ஊரில் இருந்தவரை நாங்களும் இப்படித்தான்,கடையில் வாங்குவதோடு சரி. இங்கு,விரும்பியதை,செய்தால்தான் சாப்பிட முடியும்.வருகைக்கு நன்றிங்க.
5:00 முப இல் ஒக்ரோபர் 12, 2012
மிக்க அழகாக இருக்கிறது. எனக்குத் தெறிந்தவர்கள் மைதாவிலேயே செய்து பார்த்திருக்கிறேன். தேங்காய்ப்பால் சேர்த்துதான். ரோஸ் குக்கி என்று பெயர் சொல்லுவார்கள். மலையாளத்தில் அச்சப்பம் என்று -பேமஸ். சாப்பிட நன்றாக இருக்கும். அவசியமான குறிப்பு. கடலை மாவிலும் செய்வார்களாம். எல்லோருக்கும் உதவியான குறிப்பு.
6:23 பிப இல் ஒக்ரோபர் 12, 2012
காமாட்சிமா,
இது கேரள சமையலா!நான் கேரளக்காரங்க வச்சிருக்கிற கடையில்தான் இந்த அச்சை வாங்கினேன். கடைக்காரர் அச்சப்பம்தானே செய்வீங்கனு கேட்டார். நான் அச்சுமுறுக்கு செய்யப்போவதாகச் சொன்னேன்.
உங்களுக்கு எல்லா மாநில சமையலும் அத்துபடி என்று நினைக்கிறேன்.நீங்க தெரியலைனு சொன்னால் அதுதான் ஆச்சர்யம்.ஓரளவுக்கு செய்ய வந்துவிட்டது.முடியும்போது ஒரிஜினல் ரெஸிபி இருந்தால் கொடுங்கம்மா. அன்புடன் சித்ரா.
7:44 முப இல் ஒக்ரோபர் 16, 2012
hai
11:31 முப இல் ஒக்ரோபர் 18, 2012
இந்த அச்சு இங்கயே கிடைக்குதா சித்ராக்கா? நான் கோவையில் தேடிப் பிடிச்சு வாங்கி வந்திருக்கேன், யு ஸீ! 😀
காமாட்சிம்மா சொல்வது போல “இது கேரளா ரெசிப்பிதான்”- என்று நான் இதுவரை நினைத்திருந்தேன், ஒரு நாள் தேடிப்பிடிச்சு அச்சு வாங்கிட்டு வீட்டுக்கு வரேன், வீடு க்ளீன் செய்தப்ப கிடைச்சது என்று ஒரு இரும்பு அச்சை எடுத்து வைச்சிருக்காங்க! ஒரே இன்ப அதிர்ச்சியோட விசாரிச்சா, என் கணவரின் பாட்டி இந்த முறுக்கை அந்தக் காலத்திலயே செய்வாங்களாம். “மோதிர முறுக்கு” என்று பேர் சொன்னாங்க. ரெசிப்பி கேட்டேன், பாட்டிக்கு நினைவில்லை.
வெல்லம் சேர்த்து செய்வது எனக்குப் புதுசா இருக்கு. செய்து பார்க்கிறேன். //அச்சு புதிதாக இருந்து,முதல்முறை செய்வதாக இருந்தால் கொஞ்சம் (நிறையவே) பொறுமை அவசியம்.// ஆஹா..இது வேறயா?!! ஆனாலும் விட மாட்டமில்ல? ஒரு கை பார்த்துடலாம்! ஹாஹா! 🙂
உங்க முறுக்கு அழ……கா இருக்கு சித்ராக்கா!
9:17 பிப இல் ஒக்ரோபர் 18, 2012
ஒரு கடையில் சும்மா பாத்துட்டே வரும்போது இது இருந்துச்சு.எல்லாக் கடையிலும் இருக்கான்னு தெரியல.
எங்க மாமியாரின் ஒரு பெரிய மரப்பெட்டியில் இதைப் பார்த்திருக்கேன். இரும்பு அச்சு.அச்சு கொக்கியில் ஆடியதைப் பார்த்து ஒடஞ்சு போய்ருச்சுன்னு நெனச்சேன்.அப்போ இதிலெல்லாம் விருப்பமில்லை என்பதால் அதைப்பற்றி கேட்கக்கூட இல்லை.எங்க மாமியார் கச்சிக்காய்னு(கர்ச்சிக்காய்) ஒன்னு செய்வாங்க. பொடிப்பொடியான சோமாஸ் மாதிரியே இருக்கும்.அதன் அச்சுகூட பல்லாங்குழி அச்சு மாதிரியே இருக்கும்.இதன் ரெஸிபி எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
‘மோதிர முறுக்கு’_இந்தப் பெயர் சூப்பரா இருக்கே.உண்மைதான் மகி, சாப்பிடும்போது மோதிரம்போல் ஒவ்வொரு வளையமா உடைந்து வருது.
ஊரில் இருந்தபோது அடிக்கடி கடலூரில் இதை வாங்குவேன்.கடைக்காரர் என்னைப் பார்த்ததுமே வெல்லம் சேர்த்து செய்த முறுக்கைத்தான் தருவார். நிறம் கொஞ்சம் கம்மியாதான் இருக்கும்.ஆனால் சர்க்கரை சேர்த்ததைவிட இது நல்லா இருக்கும்.
‘ஆனாலும் விட மாட்டமில்ல? ஒரு கை பார்த்துடலாம்!’_அதானே,ஏதேதோ செய்தாச்சு,இத செய்ய மாட்டோமா என்ன!நன்றி மகி.
7:53 முப இல் ஒக்ரோபர் 19, 2012
உங்க ப்ளாக் அறிமுகத்தை வலைச்சரத்தில் பார்த்தேன்… அச்சு முறுக்கு சூப்பர் ரா இருக்கு…. ஒரு முறை சாப்பிட்டு இருக்கேன் இந்த முறுக்கை…
8:30 முப இல் ஒக்ரோபர் 20, 2012
ஆமாம்,ரஞ்ஜனி அறிமுகப்படுத்தியிருந்தாங்க.நன்றி அவங்களுக்குத்தான்.
நீங்களும் அச்சு+நேரமிருந்தால் செஞ்சு பாருங்க.
“அச்சு முறுக்கு சூப்பர் ரா இருக்கு”/////நன்றிங்க.