தேங்காய் சட்னி / Coconut chutney

IMG_4442

இந்த சட்னி சமையலில் ஆரம்பநிலையில் உள்ள‌வர்களுக்கானது.அரைச்சு வையுங்க,ஓட்ஸ் கிச்சடி ரெஸிப்பியுடன் வருகிறேன்.

தேவையானவை:

தேங்காய் பத்தை_10
பச்சை மிளகாய்_2 அல்லது காரத்திற்கேற்ப‌
பொட்டுக்கடலை_1/2 கைப்பிடி
இஞ்சி_சிறு துண்டு
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்,கடுகு,உளுத்தம் பருப்பு,காய்ந்த மிளகாய்_1,பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

தேங்காய்ப் பத்தையின் பின்புறமுள்ள கறுப்புப் பகுதியைக் கத்தியால் நீக்கிவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு,அதனுடன் இஞ்சி,பச்சைமிளகாய்,பொட்டுக்கடலை,உப்பு சேர்த்து இரண்டு சுற்று சுற்றினால் பூபூவாக மசிந்திருக்கும்.

அதில் சிறிது தண்ணீர் விட்டு மேலும் இரண்டு சுற்றுசுற்றி,நிறுத்திவிட்டு சுற்றியுள்ளதை வழித்துவிட்டு,மேலும் சிறிது தண்ணீர்விட்டு இரண்டு சுற்றுசுற்றினால் தேங்காய் சட்னி தயார்.

முதலிலேயே நிறைய தண்ணீரை ஊற்றிவிட்டால் மிக்ஸி ஓடும்போது தண்ணீர் வெளியில் தெறிக்கும்.அதனால் சிறிதுசிறிதாக தேவைக்கேற்றார்போல் ஊற்றி அரைக்கவும்.

அவரவர் விருப்பம்போல் சட்னியை கெட்டியாகவோ அல்லது மேலும் சிறிது தன்ணீர்விட்டு கரைத்தோ வைத்துக்கொள்ளலாம்.

ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய்விட்டு,சூடாக்கித் தாளிக்க வேண்டியப் பொருள்களைத் தாளித்து சட்னியில் கொட்டிக்கலக்கவும்.

இது இட்லி,தோசை,உப்புமா,பொங்கல்,கிச்சடி,அடை,வடை,பஜ்ஜி, போண்டா என எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.

இதையே அம்மியில் வைத்து கெட்டியாக அரைத்து துவையலாகவும் பயன்படுத்தலாம்.அம்மியில் அரைப்பதானால் தேங்காயைத் துருவிக்கொண்டு அரைக்க வேண்டும்.

துவையல்/சட்னி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 22 Comments »

22 பதில்கள் to “தேங்காய் சட்னி / Coconut chutney”

  1. திண்டுக்கல் தனபாலன் Says:

    ஓட்ஸ் கிச்சடி ரெஸிப்பிக்கு waiting….

  2. chollukireen Says:

    lசித்ரா நான் கொஞ்சம் எலுமிச்சை சாரு பிழிவேன். இன்னும் வெளுப்பாக ,ருசியும் கொடுக்கும். நன்றாக உள்ளது

  3. rajalakshmiparamasivam Says:

    சித்ரா ,
    உங்கள் சட்னியை விடவும் ஓட்ஸ் கிச்சடி ரெசிபியைத் தான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    • chitrasundar5 Says:

      ராஜலஷ்மி,

      நீங்களெல்லாம் இங்கே காத்திட்டிருப்பீங்கன்னுதான் கொடுத்த அவார்டைக்கூட (அதாங்க oscar) வாங்க நேரமில்லாமல் ஓடிவந்து கிச்சடி செய்தாச்சு.இன்னும் சிறிது நேரத்தில் போட்டுவிடுகிறேன்.வருகைக்கு நன்றிங்க.

      • Mahi Says:

        ஹூம்..ஆஸ்கர் உங்களை மிஸ் பண்ணிட்டாரே???! எ.கொ.சித்ராக்கா இ? 😉 😉

      • chitrasundar5 Says:

        “ஹூம்..ஆஸ்கர் உங்களை மிஸ் பண்ணிட்டாரே???! எ.கொ.சித்ராக்கா இ”___புரியல.’எதுக்கு கொடுத்தாங்க சித்ராக்கா’_இது ஓகேவா.சரின்னா கடைசியில’இ’எதுக்காக?ஒன்னும் புரியல.நாளை வந்து விளக்கமளிக்கவும்.இதுகூட தெரியலயான்னு கேக்கக்கூடாது.

  4. ranjani135 Says:

    பார்க்கவே வெள்ளைவெளேரென்று நாக்கில் நீர் ஊறுகிறதே!
    ஓட்ஸ் கிச்சடி முதலில் போட்டுவிட்டு இதைப் போட்டிருக்கலாம். ஏனென்றால் இதை அரைத்து வைத்து
    வெறுமனே (இதையே முழு சாப்பாடாக) சாப்பிட்டு விடுவேன் போல இருக்கே!

    நாங்களும் ஆரம்ப நிலைதான்!

    • chitrasundar5 Says:

      ரஞ்சனி,

      “வெறுமனே (இதையே முழு சாப்பாடாக) சாப்பிட்டு விடுவேன் போல இருக்கே!”____நானும் இதை வெறுமனே ரசித்து,சுவைத்து சாப்பிடுவேன்.

      எங்கம்மா ஒரு முறத்தில் பொட்டுக்கடலை,கொத்துமல்லி இலை,உப்பு, பச்சைமிளகாய் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு ஒரு முழுத்தேங்காயை உடைத்து துருவுவாங்க.நானும் என் தம்பியும் எதிரில் உட்கார்ந்துகொண்டு மிளகாயைத்தவிர மற்றதை அள்ளிஅள்ளி சாப்பிடுவோம்.’இப்படி வாயிலேயே அரைச்சிங்கன்னா ஒரல்ல எதப்போட்டு அரைக்கறது’என சும்மாவாச்சும் திட்டுவதுதான் நினைவுக்கு வருது.

      இதோ கிச்சடி வந்துட்டே இருக்கு.

      “நாங்களும் ஆரம்ப நிலைதான்!”____ஊரிலேயே இருந்திருந்தால் நானும் ஆரம்ப நிலையிலேயேதான் இருந்திருப்பேன்.வருகைக்கு நன்றிங்க.

      • Mahi Says:

        ரஞ்சனி மேடம், சுடு சாதத்துக்கு தேங்காச்சட்னி சேர்த்து பிசைந்து சாப்பிட்டுப் பாருங்க! 😛 செமயா இருக்கும். 🙂 🙂

      • chitrasundar5 Says:

        வீட்ல பெரியவங்க இல்லாட்டி சுடச்சுட அரிசி கஞ்சி வச்சி,இந்த துவையல் தொட்டு சாப்பிடுவோம்.சூப்பரா இருக்கும்.

  5. Mahi Says:

    நான் கொஞ்சம் புளியும் சேர்ப்பேன் சித்ராக்கா..புளி இல்லாம தேங்காச் சட்னி செய்வது அபூர்வம்! ஏதோ குறையற மாதிரி இருக்கும் எனக்கு! 🙂 தாளிக்கும்போது பெருங்காயம் சேர்ப்பது புதுசு. அடுத்த முறை செய்து பார்க்கிறேன்.

    இன்னொரு ரகசியம்…இந்த கடேஏஏஏசியா தாளிச்சு கொட்டுற வேலை எனக்கு ரொம்ப போர்ர்ர்ர்ர்..அதனால் பாதி நாள் தாளிக்கவே மாட்டேன். எலக்ட்ரிக் ஸ்டவ்ல என்னோட இண்டாலியம் தாளிப்பு கரண்டிய வச்சு, அது சூடாகி..அப்புறம் எண்ணெய் காஞ்சு..இட்ஸ் டூ மச் ஆஃப் டைம் யு ஸீ! 😉 🙂

    • chitrasundar5 Says:

      பெருங்காயத்தை சும்மா பெயருக்குத்தான்,வாசனைக்காக தாளிக்க வேண்டும்.புளி சேர்த்து செய்வது வித்தியாசமா இருக்கு.கொத்துமல்லி தழை சேர்த்து அரைப்போம்.

      ஒரு தடவ தாளிச்சு பார்த்ததோடு சரி.அதில் கடுகு பொரிவதற்குள்ள்ள்…. மூட்டை கட்டி வச்சாச்சு.தாளிப்பதற்கு சின்னதா ஒரு எவர்சில்வர் வாணல் வச்சிருக்கேன். நொடியில் தாளிப்பு ரெடி(ஹிஹி,நொடியை நிமிடமா மாத்திக்கோங்க)ஒரு நாளைக்கு மூன்றுநான்கு தடவையாவது தாளிக்க வேண்டியிருக்கும்.

      “தாளிப்பு கரண்டிய வச்சு, அது சூடாகி..அப்புறம் எண்ணெய் காஞ்சு..”___ அதனால அடுத்த தடவ ஊருக்குப்போனா சின்ன வாணலோட வாங்க.தாளிச்சாலே தனி வாசனைதான்.

  6. rajalakshmiparamasivam Says:

    சித்ரா,

    பொட்டுக் கடலைக்குப் பதிலாக கடலைப் பருப்பு, வர மிளகாய் , பெருங்காயம் எல்லாம்
    எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து தேங்காயுடன் சேர்த்து புளியும் கொஞ்சம் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொண்டு தாளிக்கும் போது கடுகு, உளுத்தம் பருப்பு, சின்ன வெங்காயம் தூளாக நறுக்கி லேசாக (லேசாக மட்டுமே) வதக்கி தாளித்து இட்லிக்குத் தொட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும்.

    (நான் சமையலில் பெரிய ராணி இல்லை.
    ஆனாலும் இது நன்றாகவே இருக்கும் .உங்களைப் போல் எல்லாம் விதம் விதமாக சமைக்காவிட்டாலும் ஏதோ நானும் ரெசிபி எழுதி விட்டேன். ஹப்பா…………..நிம்மதியாச்சு.)
    உப்பு… உப்பு… மறந்து விட்டேன் . சேர்த்துக் கொள்ளுங்கள்.

    • Mahi Says:

      ராஜி மேடம், நீங்க சொல்லும் சட்னியும் நான் செய்வேன். என்ன ஒண்ணே ஒண்ணு, சின்ன வெங்காயம் வதக்கி தாளிச்சதில்லை. in fact, மோஸ்ட்லி தாளிக்கவே மாட்டேன். 😉

      • chitrasundar5 Says:

        “in fact, மோஸ்ட்லி தாளிக்கவே மாட்டேன்”____தாளிச்சாத்தான் வாசனையோட இருக்கும்னு வீட்ல இருக்கவங்ககிட்ட யாரும் இன்னும் போட்டுகுடுக்கலையா!ஒருவேளை டயட்டா இருக்குமோ!

    • chitrasundar5 Says:

      கடலைப் பருப்பு வைத்து சட்னியா!மிக்ஸியில் நன்றாக மசிய வந்தால் செய்திடலாம்.

      ‘நான் சமையலில் பெரிய ராணி இல்லை’___பட்டத்த கையில எடுத்திட்டிங்கன்னா தானாவே சமையலில் மகாராணி ஆயிடுவிங்க.

      “ஹப்பா…………..நிம்மதியாச்சு.)உப்பு… உப்பு… மறந்து விட்டேன் . சேர்த்துக் கொள்ளுங்கள்.”_____நீங்க எழுதினா நகைச்சுவை மணமும் சேர்ந்து வரும் என்பது தெரிகிறது.

      வருகைக்கு நன்றிங்க.

  7. Mahi Says:

    //எ.கொ.சித்ராக்கா இ”___புரியல.’எதுக்கு கொடுத்தாங்க சித்ராக்கா’_இது ஓகேவா.சரின்னா கடைசியில’இ’எதுக்காக?ஒன்னும் புரியல.நாளை வந்து விளக்கமளிக்கவும்.இதுகூட தெரியலயான்னு கேக்கக்கூடாது.// சந்திரமுகி படத்தில “என்ன கொடும சரவணா இது?” அப்படினு ஒரு டயலாக் பயங்கரமா ஃபேமஸ் ஆச்சில்ல சித்ராக்கா? அதோட சுருக்கம் தான் எ.கொ.ச.இ.? உங்க பேரு சரவணன் இல்லைல்ல, அதனால எ.கொ.சி.இ. ஆகிருச்சு! ஹிஹிஹி!

  8. mahalakshmivijayan Says:

    இஞ்சி எப்பொழுது சேர்க்க வேண்டும், தாளிக்கும் போதா,அரைக்கும் போதா?? வழக்கம் போல் போட்டோ சூப்பர் 😀

    • chitrasundar5 Says:

      நீங்க நினைவுபடுத்தியதும் இஞ்சியை தேங்காய்,பொட்டுக்கடலையுடன் சேர்த்து வச்சு அரைச்சிட்டேங்க. இஞ்சி & பச்சைமிளகாயை சிறிது எண்ணெயில் வதக்கி அரைத்தால் இன்னும் நல்லா இருக்கும்.

      ‘போட்டோ சூப்பர்’______இந்தக் கோடைக்கு குளிர்ச்சியா இருக்கு,நன்றிங்க.


chitrasundar5 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி