தோசை / Dosa

நீண்ட நாட்களாகவே தோசைப் பதிவை போட வேண்டும் என நினைப்பேன்.ஆனாலும் ஃபோட்டோ எடுப்பதற்குள் ஆறிப் போய்விட்டால் யார் சாப்பிடுவது என நினைத்து விட்டுவிடுவேன்.ஆமாம்,சூடாக இருக்கும்போது இருக்கும் மொறுமொறு சிறிது நேரத்திலேயே காணாமல்போய் சாஃப்டாகிவிடும்.உள்ளே இறங்காது.

இன்று துணிந்து ஒரு முடிவுக்கு வந்து,அதாங்க ஆறிப்போனாலும் சூடுபண்ணி சாப்பிட்டுவிடுவது என முடிவுப‌ண்ணி (டுமீல் டுமீல் என) சுட்டுவிட்டேன்.படத்தை க்ளிக் பண்ணி பாருங்க,கல்லிலிருந்து எடுத்ததும் இப்பவோ அப்பவோ என உடைந்துவிடும்போல மொறுமொறுவென இருக்கும் இருக்கும் இந்தத் தோசையை எப்படி ஆறவைத்து சாப்பிடுவது!!

நான் தோசைக்கென தனியாக மாவு அரைப்பதில்லை.இட்லி மாவையேப் பயன்படுத்திக்கொள்வேன்.இட்லி சரியாக வந்துவிட்டால் தோசை தானாகவே வந்துவிடும்.

மாவுதான் ஏற்கனவே அரைத்து வைத்துவிட்டோமே.இப்போது தோசை சுடுவது எப்படி?என்று மட்டும் பார்ப்போம். இட்லிமாவு இன்னும் அரைக்கவில்லை என்பவர்கள் இங்கே போய் சீக்கிரமே அரைச்சு எடுத்திட்டு வந்திடுங்க‌.

இட்லி மாவைவிட தோசைக்கான மாவு கொஞ்சமேகொஞ்சம் நீர்த்து இருக்க வேண்டும். அதேபோல் மாவு முழுவதையும் தண்ணீர் ஊற்றிக் கரைக்காமல் இரண்டுமூன்று தோசைக்கான மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு 1/4 டம்ளருக்கும் குறைவாகத் தண்ணீர் விட்டு கரண்டியால் லேஸாகக் கரைத்துவிட்டு பயன்படுத்தவும்.

தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி சூடுபடுத்தவும்.கல் சூடானதும் வாழைக்காயின் காம்புப்பகுதி அல்லது கத்தரிக்காயின் நுனியில் லேஸாக நறுக்கிவிட்டு எண்ணெயில் தொட்டு கல் முழுவதும் தடவிவிட்டு ஒரு கரண்டி மாவைக் கல்லின் நடுவில் ஊற்றி,கரண்டியின் அடிப்பகுதியால் கல் முழுவதும் இழுத்து நன்றாகத் தேய்க்கவும்.சுற்றிலும் மேலாகவும் சிறிது எண்ணெய் விட்டு இட்லிப் பாத்திரத்தின் மூடியால் நன்றாக மூடி வேக‌விடவும்.தோசை வெந்ததும் மூடியின் வழியே ஆவி வரும்.மூடியைத் திறந்து தோசைத்திருப்பியால் தோசையைக் கல்லிலேயே மடித்துப்போட்டு (திருப்பிப்போடாமல்) எடுக்கவும்.மொறுமொறு தோசை தயார்.

தோசை வெந்துவிட்டால் தோசைத்திருப்பியால் எடுக்கும்போது எளிதாக வந்துவிடும்.எடுக்க வராமல் கல்லில் ஒட்டிக்கொண்டால் தோசை இன்னும் வேகவில்லை என்பதாகும்.மீண்டும் மூடிவைத்து வெந்ததும் எடுக்கவும்.

இதற்கு தேங்காய் சட்னி,வேர்க்கடலை சட்னி,இட்லி தூள்,இட்லி சாம்பார் எல்லாம் சூப்பரா இருக்கும்.அதைவிட தேங்காய் சட்னி & இட்லி சாம்பாருடன் சேர்த்து சாப்பிட சூப்பரோ சூப்பர்.இதனுடன் தூளையும் தொட்டு சாப்பிட இன்னும் சூப்பரோ சூப்பர்.

தோசை பளபளன்னு வரணுமின்னா கல் போனாலும் பரவாயில்லை என்று கல்லில் எண்ணெய் தேய்க்காமல் சிறிது தண்ணீர் தெளித்துவிட்டு சொடசொடப்பு அடங்கியதும் மாவு ஊற்றி தேய்த்துவிட்டு சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பிப்போடாமல் எடுக்கவும்.

13 பதில்கள் to “தோசை / Dosa”

 1. chitrasundar5 Says:

  ரஞ்ஜனி,

  எங்க வீட்டு தோசை உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சிங்க.

 2. MahiArun Says:

  🙂 superb dosa..will come again tomorrow! 🙂

 3. ranjani135 Says:

  நீங்க கொடுத்திருக்கும் எல்லா குறிப்புகளையும் நானும் கடைபிடிக்கிறேன். இட்லி மாவையே தோசைக்கும் பயன்படுத்துவது; மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்வது; அதனால்தானோ என்னவோ என் தோசையும் நன்றாக இருக்கும்…ஹி….ஹி…!

  வாழக்காய் காம்பு, அல்லது கத்திரிக்காய் காம்புக்கு பதில் இப்போது மரத்தில் தோசை கல் தேய்ப்பதற்கென்றே கிடைக்கிறது அதையும் பயன்படுத்தலாம். (உபரியாக ஒரு குறிப்பு!)

  தோசை, மிளகாய்பொடி காம்பினேஷன் போல வருமா?

  • chitrasundar5 Says:

   எல்லா நேரமும் கத்தரிக்காய்,வாழைக்காய் ஸ்டாக் இருப்பதில்லை. சமயத்தில் அல்லது எந்நேரமும் உதவுவது பேப்பர் டவல்தான்.ஊருக்குப் போனதும் உங்க உபரி குறிப்பை வாங்கிவர வேண்டும்.தகவலுக்கு நன்றிங்க.

   “தோசை, மிளகாய்பொடி காம்பினேஷன் போல வருமா?”____நானும் இப்படித்தான் இருந்தேன்.இப்போ மாறியாச்சு.அதாவது மீதமானதையெல்லாம் ஒரு தொட்டு தொட்டுசாப்பிட அதுவுமே சூப்பர்.

 4. திண்டுக்கல் தனபாலன் Says:

  பேப்பர் ரோஸ்ட் வேண்டுமா…? வெந்தயத்தையும் சிறிது ஊற வைத்து மாவு அரைக்க வேண்டும்…

 5. chollukireen Says:

  தோசை அசத்தலா இருக்கு. நான் கிச்சன்லே உபயோகிக்கிரோமே
  அந்த டிஷ்யூ பேப்பரை எண்ணெயில் தொட்டு கல்லைத் துடைப்பேன்.ஒருதரம் எண்ணெய் தொட்டு விட்டால் பலமுறை வரும். தோசையும் பட்டு பட்டா அருமையாக வரும். ரொம்ப அழகா
  தோசை வார்க்கிராய். நன்ராக இருக்கு.

  • chitrasundar5 Says:

   காமாக்ஷிமா,

   உண்மையில் நீங்க சொல்வதைத்தான் அடிக்கடி தோசைக்கும் சப்பாத்திக்கும் பயன்படுத்துவேன்.

   வேலைக்குப்போன புதிதில் வேட்டவலத்தில் பஸ்ஸுக்காக நிற்கும்போது அங்கு ஒரு சாப்பாட்டுக்கடையில் ஒரு பெரிய தோசைக்கல் முழுக்க தண்ணீர் விட்டு துடைப்பத்தால் தேய்த்து 12 தோசை ஊத்துவாங்க.அது வெந்ததும் திருப்பிப்போட்டு அடுக்கி எடுப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

   ஊரிலிருக்கும்வரை கல்லில் தண்ணி விட்டா திட்டுவாங்க.கல் என்னிடம் வந்ததும் ட்ரயல் பண்ணிப் பாத்துட்டேன்.உங்களுக்குத் தெரியாததா!கதை எல்லாம் சொல்லிட்டிருக்கேன்.

   “ரொம்ப அழகா தோசை வார்க்கிராய்.நன்றாக இருக்கு”___நீங்க சொல்லும்போது சந்தோஷமா இருக்கு.ஊரில் இருக்கும்வரை ஒரு தோசையையும் பிஞ்சு போகாம சுட்டதில்லை.வேகாமலே திருப்பிடுவேன்.

   இப்படியே விட்டா கதை போய்ட்டே இருக்கும்.வருகைக்கு நன்றிமா.

 6. rajalakshmiparamasivam Says:

  மொறு மொறு தோசை சாப்பிட அழைக்கிறது.
  நானும் ரஞ்சனி மேடம் சொன்னது போல் இதற்கென்று விற்கும் கட்டை உபயோகித்து எண்ணெய் தடுவுவேன்.

  நல்லதொரு விளக்கம்.
  எண்ணெய் தடவுவதற்கு காமாக்ஷி மாமி கொடுத்திருக்கும் ஐடியா நன்றாக இருக்கிறதே!

  • chitrasundar5 Says:

   நீங்க சொல்வதையெல்லாம் பார்த்து ஒரு முடிவுக்கு வந்துட்டேன், ஊருக்குப் போனதும் முதல் வேலையாக எண்ணெய் தடவும் கட்டையை வாங்கிவிடுவதென.

   ஆமாங்க,காமாக்ஷிமா சொன்ன மாதிரிதான் நானும் செய்வேன்.

   “மொறு மொறு தோசை சாப்பிட அழைக்கிறது”____வாங்க, ஆறிப்போவதற்குள் ஆளுக்கொன்றாக காலி பண்னிடலாம்.வருகைக்கு நன்றிங்க.

 7. Mahi Says:

  எண்ணெய் தடவும் கட்டை புதுசா இருக்கிறது. நான் ஒரு silicone pastry brush வைச்சிருக்கேன், அதை ஒரு முறை எண்ணெயில் dip செஞ்சு வைச்சுகிட்டு, ஒவ்வொரு முறையும் தோசை வார்க்கும் முன் ப்ரஷ்ஷால் தோசைக்கல்லை wipe பண்ணுவேன். டிஷ்யூ பேப்பரால் தடவ கொஞ்சம் கஷ்டம், கையும் எண்ணெய் ஆகுமே! 😉 🙂 சிலநேரங்களில் கல் ரொம்பவும் சூடாகி விட்டால் தண்ணீரும் தெளித்து ப்ரஷ்ஷால் தடவிட்டு தோசை ஊற்றுவேன். மோஸ்ட்லி, தோசையை மூடி வைத்து அப்படியே மடித்து எடுப்பதுதான் வழக்கம்.

  உங்க இட்லிமாவு ரேஷியோ அன்பிலிவபிள் சித்ராக்கா! அதெப்படி 8 கப்பு அரிசிக்கு 1/2 கப்பு உளுந்து போதும்?!? உங்கூர் உளுந்து ஏகத்துக்கும் மாவு காணுமோ?! அவ்வ்வ்வ்வ்வ்!

  • chitrasundar5 Says:

   பேப்பர் டவலில் 1/4 பகுதியை பிச்சு ரெண்டுமூனு ம‌டிப்பு மடிச்சு(நீள் செவ்வகமா வந்திருக்கும்) அதையே ரெண்டா மடிச்சு மேல் பகுதிய பிடிச்சுகிட்டு,கீழ் பகுதிய தேய்ப்பதற்கு பயன்படுத்திப்பாருங்க,எண்ணெயாவது,சூடாவது?எதுவுமே கிட்ட வராது.பேப்பர் டவல்னா யூஸ்&த்ரோ வா வச்சிக்கலாம்.

   இவங்களுக்கெல்லாம் திருப்பிப்போடாத தோசை,எனக்கு மட்டும் கொஞ்சம் மொத்தமா,திருப்பிப்போட்டு ஊத்துவேன்.

   மஹி,சொன்னா நம்ப மாட்டீங்க.4 கப் கோபுரமா புழுங்கல் அரிசியும் 1/4 கப் உளுந்தும்தான் போடுவேன்.வெந்தயத்தைக் கூட்டி உளுந்தை இன்னும் குறைக்கலாம். ஆனால் கிரைண்டர் போயிடுமேன்னு கால் கப் போடுறேன்.பே ஏரியா உளுந்துதான்.அரைக்க அரைக்க கிரைண்டர் ரொம்பிடும்.

   ஒரு தடவ மட்டும் அந்த அளவுக்கு போட்டு உளுந்தை எழுதியுள்ள‌ மாதிரி அரைச்சு பாருங்க,’ஐ இட்லி பன்னைவிட சாஃப்டா,வெள்ளைவெளேர்னு வந்திருச்சே’ன்னு சொல்லுவிங்க.

   உளுந்து அதிகமானா கலர் கம்மியாவும்,இட்லி சப்பையாவும்,அமுங்கியும் வரும்.தோசை சொல்லவே தேவையில்லை.அங்கே 4 கப் அளவுக்கான வெந்தயத்தைப் போட்டிருக்கேன்.போய் மாத்திடுறேன்.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: