தேவையானவை:
ப்ரோக்கலி பூ_ஒன்று
பச்சைப் பயறு_1/2 கைப்பிடி
சின்ன வெங்காயம்_2
பச்சை மிளகாய்_1
தக்காளி_1/4 பகுதி
அரைக்க:
தேங்காய் பத்தை _2
சீரகம்_சிறிது
அரிசிமாவு_1/2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை
ப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.தண்டு,இலைகளையும் தூக்கிப்போடாமல் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.
செய்முறை:
பச்சைப்பயறை சூடுவர வறுத்து,கழுவிவிட்டு அது வேகுமளவு தண்ணீர் விட்டு,மஞ்சள்தூள்,பெருங்காயம்,இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு வேகவைக்கவும்.
பாதி வேகும்போதே வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து கிளறிவிட்டு வேகவிடவும்.
இவை எல்லாம் வெந்ததும் ப்ரோக்கலியைச் சேர்த்துக் கிளறிவிட்டு,சிறிது உப்பும் சேர்த்து கிண்டிவிடவும்.ப்ரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.இரண்டு கொதி வந்தாலே போதும்.
தேங்காய்,அரிசிமாவு,சீரகம் இவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து கொதிக்கும் கூட்டில் ஊற்றி மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்து ப்ரோக்கலி கூட்டில் கொட்டிக் கிளறவும்.
இது சாதம்,சப்பாத்தி இவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.
2:45 பிப இல் மார்ச் 15, 2013
ப்ரோக்கலியில் உசிலி செய்திருக்கிறேன், பொரியல் செய்திருக்கிறேன், கூட்டு செய்ததில்லை, செய்து பார்த்திட வேண்டியதுதான். 🙂
ஃபார்மர்ஸ் மார்க்கட்டில் ப்ரோக்கலி வாங்கினப்ப நானும் உங்க ஃபோட்டோல இருக்கமாதிரியேதான் கீரையோட சேர்த்து வாங்கினேன். ஆனா கீரையை தனியே எடுத்து கேரட் கூட சேர்த்து பொரியல் செய்துட்டேன், ப்ரோக்கலியுடன் சேர்க்கல! 😉 🙂
9:36 முப இல் மார்ச் 16, 2013
நானும் உசிலியை செய்து பார்த்திட வேண்டியதுதான்.கூட்டு சூப்பர் டேஸ்ட்ல இருக்கு,நம்பி செய்யுங்க.வாங்க ஆரம்பிச்ச புதுசுல தண்டை மட்டும் தூக்கிப்போட்டுடுவேன்.இப்போது எதையும் விடுவதில்லை.கொஞ்சம் நாரை எடுத்துவிட்டால் தண்டுமே நல்லா சாஃப்டாதானே இருக்கு.
கேரட்கூட செஞ்சா கலர் சூப்பரா இருக்கும்ல,அடுத்த தடவ செஞ்சுட்டாப்போச்சு.வருகைக்கு நன்றி மஹி.
8:15 பிப இல் மார்ச் 15, 2013
இதுவரை செய்ததில்லை…
செய்முறை விளக்கத்திற்கு நன்றி…
9:36 முப இல் மார்ச் 16, 2013
கிடைக்கும்னா செஞ்சு சாப்பிட்டுப் பார்க்கலாமே.வருகைக்கு நன்றி தனபாலன்.
10:49 பிப இல் மார்ச் 15, 2013
நம்ம பக்கத்து சமையல் ஸ்டைல் கூட்டு நன்ராக இருக்கு. கூட்டு,ரஸம், அப்பளாம். செஞ்சூட்டாப் போரது.
9:42 முப இல் மார்ச் 16, 2013
காமாக்ஷிமா,
என்ன காய் கிடைத்தாலும் சாம்பார்,பொரியல்,கூட்டு இப்படித்தானே செய்யத்தோன்றுகிறது.
‘கூட்டு,ரஸம்,அப்பளாம்.செஞ்சூட்டாப் போரது’___இந்த காம்பினேஷனும் சூப்பரா இருக்கு.வருகைக்கு நன்றிமா.
2:35 முப இல் மார்ச் 16, 2013
உங்க குறிப்பு படிக்க வந்தால், மகி தரும் குறிப்புகள் free!
பொதுவா கூட்டுன்னா பயத்தம்பருப்பு தான் போடுவேன். நீங்க சொல்லியிருப்பதைப் பார்த்தால் பயறு சேர்ப்பது ருசியைக் கூட்டும் (கூட்டின் ருசியை கூட்டும் – என்ன ஒரு pun பாருங்க!) போலிருக்கிறதே!
ப்ரோக்கலி வாங்குவதே இல்லை. அடுத்தமுறை வாங்கிவந்து பண்ணிப் பார்க்கிறேன்.
9:58 முப இல் மார்ச் 16, 2013
‘உங்க குறிப்பு படிக்க வந்தால், மகி தரும் குறிப்புகள் free!’___ முடிவு பண்ணியாச்சு,இனி பைசா வாங்கிட வேண்டியதுதான்.
‘கூட்டின் ருசியை கூட்டும்’___நேற்று இந்தக் கூட்டை படம் எடுத்த சமயம் எங்க வீட்டுக்கு புறா ஒன்று வந்தது.அதையும் படம் எடுத்துக்கொண்டேன். இரண்டு படங்களையும் போட்டு ‘புரோக்கலி/புறாக்கலி’ என எழுதி, பப்ளிஷ் பண்ணும்போது புறாவைக் காலிபண்ணிட்டேன்.
தனியாக எந்த வாசனையும் வராது,தைரியமா வாங்கிட்டு வந்து செய்யுங்க.
10:15 முப இல் மார்ச் 16, 2013
புறாவை காலி பண்ணிட்டீங்களா?
அடுத்த சமையல் குறிப்பு……..?
(சும்மா தமாஷ்!)
10:25 முப இல் மார்ச் 16, 2013
எங்க Apt_ல bird feeder கூட வக்கக்கூடாது.இதுல அத காலிபண்ணா அவ்வளவுதான்.
9:54 முப இல் மார்ச் 22, 2013
எப்படி இந்த பதிவை மிஸ் செய்தேன் ? தெரியவில்லை.
நேற்றைய பதிவைப் பார்ர்க்கும் போது தான் தெரிந்தது.இதை விட்டிருக்கிறேன் என்று.
broccoli ஐப் பற்றி பெரிய சந்தேகம் .அதுவும் காலிபிளவர் மாதிரி தானே. எப்படி இதில் புழு எத்டுவும் இருக்காதா? எப்படி கிளீன் செய்வீர்கள்.
நானும் கூட்டு செய்ததில்லை. செய்து பார்த்து விட வேண்டியது தான்.
3:37 பிப இல் மார்ச் 22, 2013
பார்க்கத்தான் காலிஃப்ளவர் மாதிரி இருக்கும்,சுவை சாதாரண காய்கறி மாதிரிதான் இருக்கும்.தனியாகவோ அல்லது மற்ற காய்களுடன் சேர்த்தோ சாம்பார்,பொரியல்,குருமா எல்லாமே செய்யலாம்.சீக்கிரமே வெந்திடும்.
ஒவ்வொரு பூவாகப் பிரித்து சும்மா சாதாரண தண்ணீரிலேயே அலசிடலாம். புழு எல்லாம் இருக்காது.தைரியமா வாங்கி செய்யுங்க.வருகைக்கு நன்றிங்க.