இங்குள்ள ஒரு பப்ளிக் டிவி சானலில் சமையல் நேரத்தில் எக்ப்ளான்ட் ஃபலாஃபெல் / Eggplant falafel செய்து காட்டினர்.அது மாதிரியே நானும் செய்ய முடிவுபண்ணி கொண்டைக் கடலையை ஊற வைத்தேன்.செய்யப் போகும்போது, கத்தரிக்காய் சேர்ப்பதால் சுவை மாறிப்போய் இவர்கள் சாப்பிடாமல் போனால் என்ன செய்வது என தவிர்த்துவிட்டேன். வீட்டில் யாரும் இல்லாதபோது செய்யப் போகும் சமையல் லிஸ்டில் இதையும் சேர்த்தாச்சு.
அந்தக் கடலையை இரவு ஒரு ஈரத்துணியில் கட்டிவைத்தேன்.காலையில் பார்த்தால் எல்லாக் கடலையும் முளை கட்டியிருந்தது.இதனை கடலைப் பருப்பு வடை மாதிரியே செய்தேன்.நன்றாக இருந்தது.முடிந்தால் நீங்களும் செய்து பார்க்கலாமே.
தேவையானவை:
கருப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலை_ஒரு கப்
சின்ன வெங்காயம்_நான்கைந்து
பச்சை மிளகாய்_1
காய்ந்த மிளகாய்_1
இஞ்சி_சிறிது
பூண்டிதழ்_2
பெருஞ்சீரகம்_கொஞ்சம்
பெருங்காயம்
கறிவேப்பிலை & கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
கொண்டைக் கடலையை முதல் நாளிரவே ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும் நீரை வடித்துவிடவும்.
மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் கடலையைப் எடுத்துக்கொண்டு, அதனுடன் மிளகாய்,இஞ்சி,பூண்டு,பெருஞ்சீரகம் எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல்,இரண்டுமூன்று தடவை மிக்ஸியை நிறுத்தி நிறுத்தி தள்ளிவிட்டு அரைக்கவும்.
ஒன்றிரண்டு கடலை அரைபடாமல் இருந்தால் கரண்டியால் நசுக்கி விட்டுக் கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொண்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை & கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசையவும்.
உப்பு,காரம் சரிபார்த்துக்கொள்ளவும்.காரம் தேவையெனில் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப்போட்டு சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மேலே படத்தில் உள்ளவாறு வடைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
இது கடலைப் பருப்பு வடையைவிட மென்மையாகவும்,சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது.தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவை கூடும்.
6:14 பிப இல் ஜூன் 11, 2013
அன்பின் சித்ரா சுந்தர் – கொண்டக்கடலை வடை செய்முறை அருமை – படங்களூம் நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
2:33 பிப இல் ஜூன் 12, 2013
சீனா ஐயா,
வருகைக்கும்,நல்வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
8:44 பிப இல் ஜூன் 11, 2013
இதுவரை வீட்டில் செய்ததில்லை… குறிப்பின் படி செய்து பார்ப்போம்…. நன்றி….
2:53 பிப இல் ஜூன் 12, 2013
திண்டுக்கல் தனபாலன்,
நானும் இப்போதுதான் முதல்முறையாக செய்தேன்.தோலுடன்,முளைகட்டிய பயறு எனும்போது சத்தானதும்கூட.செய்து சாப்பிடுங்க.நன்றி.
11:51 பிப இல் ஜூன் 11, 2013
இந்த வாரம் வார இறுதி மாலை நேர சிற்றுண்டியாக செய்து பார்க்கிறேன். செய்முறை சுலபமாகவும் இருக்கிறது.
4:22 பிப இல் ஜூன் 12, 2013
க.பருப்பைவிட இது எளிதில் மஸிந்துவிட்டது.ரொம்பவே சுலபம்தாங்க. ஞாயிறு மாலை இங்குவரை வாசனை வருதான்னு செக் பண்ணிட வேண்டியதுதான்.
3:31 முப இல் ஜூன் 12, 2013
சித்ரா வடை நன்றாக இருக்கு. இன்னும்,கீரை வகைகள் கூட போட்டுச் செய்யலாம். கோஸ். செய்து சாப்பிடுவதை விட கொஞ்சம் அனுப்பி விட்டால் ஸௌகரியமாக இருக்கும். அன்புடன்
5:55 பிப இல் ஜூன் 12, 2013
காமாக்ஷிமா,
இப்போதைக்கு கீரை இல்லை,கோஸ் இருக்கு.இந்த வாரமே கோஸ் வடையை ரெடி பண்ணிட வேண்டியதுதான்.
“செய்து சாப்பிடுவதை விட கொஞ்சம் அனுப்பி விட்டால் ஸௌகரியமாக இருக்கும்”_____மும்பைக்கு ஒரு பார்ஸல் அனுப்பிட்டாப் போச்சு. சாப்பிடும்போது இந்த வரி கண்டிப்பாக நினைவுக்கு வரும். நினைத்துக்கொண்டே சாப்பிட வேண்டியதுதான்.அன்புடன் சித்ரா.
10:07 முப இல் ஜூன் 12, 2013
கொண்டைகடலையில் வடை செய்யலாம் என்பது எனக்கு செய்தி.
அருமையான செய்முறை விளக்கம் சித்ரா.
நன்றி சித்ரா
7:33 பிப இல் ஜூன் 12, 2013
இங்கு வந்த பிறகுதான் எனக்கும் தெரியும்.ஆனால் செய்தது இதுதான் முதல்தடவை.நீங்களும் செஞ்சு பாருங்க.நன்றிங்க.
6:18 பிப இல் ஜூன் 13, 2013
ஃபலாஃபல் சாப்பிட்டிருக்கேன், ஆனா வீட்டில செய்ததில்லை. நம்மூர் மசாலா சேர்த்து, அதுவும் முளைக்கட்டிய கடலைன்னா சத்தும் கூட! சீக்கிரம் செய்து பார்க்கிறேன் சித்ராக்கா.
மீன்வைல், அந்த ப்ளேட்டை இப்ப இங்க அனுப்புங்க பாப்போம், டீ கூட கொறிக்க நல்லாருக்கும்!! 😉 🙂 😛
8:34 பிப இல் ஜூன் 14, 2013
அனுப்பிய வடை எப்படி இருந்துச்சுன்னு வந்து சொல்லுங்க.
வந்த புதிதில் நானும் ஃபார்மர்ஸ் மார்க்
கெட்டில்தான் வாங்கி சாப்பிட்டேன். அவ்வளவும் எண்ணெய்.ஒருவேளை கடலையின் தோல் இருப்பதால் எண்ணெய் எடுத்திருக்குமோ என நினைத்தேன்.ஆனால் வீட்டில் செய்தபோது சுத்தமாக எண்ணெய் இழுக்கவில்லை.செஞ்சு பாருங்க.