இப்போ வேணுங்கறவங்கல்லாம் ஆர்டர் கொடுக்கலாம். அளந்து அளந்து போட்டு பார்சல் அனுப்பிவைக்கிறேன்.
போன வருடம் எங்க பேட்டியோவுக்கு அருகில் இருந்த ஒரு பெரிய மரத்தை வெட்டிட்டு வரிசையா மூன்று நான்கு குட்டிகுட்டி மரங்களாக நட்டுள்ளனர். இதனால் இந்த வருடம் வெயில் படு ஜோராக எங்க பேட்டியோவில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதை விட மனசில்லாமல் இந்த கோடையில் காசுவத்தல் ஊத்தி எடுத்தாச்சு.
தேவையானவை:
பச்சரிசி _ 2 கப்
ஜவ்வரிசி_ 1/2 கப்
காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய்_ 3
சீரகம்_ ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு
பெருங்காயம்_ சிறிது
செய்முறை:
பச்சரிசியை ஊற வைத்து அது நன்றாக ஊறியதும் அதனுடன் மிளகாயை சேர்த்து தாராளமாக தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
ஒரு 5 லிட்டர் குக்கரில் பாதியளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஜவ்வரிசியைப் போட்டு இரண்டுமூன்று சொட்டுகள் நல்லெண்ணெய் விட்டு ஒரு தட்டு போட்டு மூடி அடுப்பில் ஏற்றவும்.
எண்ணெய் விடுவதால் அரைத்த மாவை ஊற்றிக் கிண்டும்போது கட்டி தட்டாமல் இருக்கும். மேலும் பொங்கி வழிவதும் ஓரளவுக்குக் கட்டுப்படும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காயம், சீரகம் இரண்டையும் சேர்த்துவிட்டு, அரைத்துவைத்துள்ள பச்சரிசி மாவையும் ஒரு நீளமான மரக்கரண்டி அல்லது whisk ஆல் கிண்டிக்கொண்டே ஊற்றவும்.
மாவு ஊற்றுவதிலிருந்து அடுப்பு வேலை முடியும்வரை கவனம் தேவை. கொதிக்கும் மாவு தெறித்து நம்மேல் விழ வாய்ப்புண்டு.
மாவு முழுவதையும் ஊற்றிவிட்டு தேவையான உப்பு போட்டு, முக்கால் குக்கர் அளவுக்கும் அதிகமாக தண்ணீர் ஊற்றவும்.
கிண்டுவதை நிறுத்தக்கூடாது. விடாமல் கிண்ட வேண்டும். இல்லையென்றால் கட்டி தட்டும். பிறகு மாவு சரியாக வேகாமல் உருண்டை உருண்டையாய் இருந்து கடுப்பேற்றும்.
மேலும் குக்கரை ஒரு அரை மணி நேரத்திற்கு அடுப்பிலேயே மீடியம் ஹீட்டில் மூடி வைத்திருக்கவும். இடையிடையே திறந்து கிண்டிவிடவும்.
மாவு நன்றாக வெந்தபின் நல்ல வாசனை வரும். இப்போது குக்கரை அதன் மூடியால் மூடி வைத்து விடவும்.
காலையில் வெயில் வரும் சமயம் வத்தல் ஊற்ற உகந்த நேரம்.
ஒரு டேபிளில் ப்ளாஸ்டி கவரை அல்லது சுத்தமான ஒரு துணியை நனைத்து ஈரம் இல்லாமல் பிழிந்து விரித்துப்போட்டு, மாவை நன்றாக ஒரு தரம் கலந்துவிட்டு, உப்பு சரிபார்த்து, தேவையானால் சிறிது சேர்த்துக்கொண்டு கரண்டியால் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஊற்றவும்.
(இவ்ளோ கஷ்டபட்டு வத்தல் போட்டுட்டு ஃபோட்டோ எடுக்காம விட்டா எப்படீ !!)
ஒரு நாள் முழுவதும் காய்ந்த பிறகு அப்படியே எடுத்து வைத்து அடுத்த நாள் காலை எல்லா வற்றலையும் திருப்பிவிட்டு மீண்டும் வெயிலில் காயவிடவும்.
(முதல் நாள் இந்த அளவுக்குத்தான் காய்ந்தது.)
நன்றாகக் காய்ந்த பிறகு பெரிய கண்ணாடி பாட்டிலில் அல்லது பெரிய ஸிப்லாக்கில் எடுத்து வைத்து தேவையானபோது வாணலில் எண்ணெய் காய வைத்து பொரித்து சாப்பிடலாம்.
எல்லா சாதத்துக்கும் முக்கியமாக வத்தக்குழம்பு,காரக்குழம்பு, புளிக்குழம்பு இவற்றிற்கெல்லாம் சூப்பராக இருக்கும்.
(முறுக்கு வத்தல் போடல போலிருக்குன்னு நெனச்சிடக் கூடாதில்லையா !!)
3:59 பிப இல் ஓகஸ்ட் 26, 2013
சூப்பர்! 🙂
எனக்கு காசு வத்தல் ஒரு பவுண்டு, முறுக்கு வத்தல் ஒரு பவுண்டு பார்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸல்!! 😉 நான் சிலபல வருஷங்களுக்கு முன் போட்ட வத்தல் இன்னும் பாக்கி இருக்குது, உங்க வத்தலுக்கு பதில் மரியாதையாக அந்த வத்தல் பார்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸேஏஏஏஏஏஏஏஏல் அனுப்பப்படும்! நன்றி வணக்கம்! 😉 😀
8:01 முப இல் ஓகஸ்ட் 27, 2013
எனக்குத்தான் அனுப்புவதில் குழப்பமே தவிர நீங்க அனுப்பி வைப்பதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை.
அடுத்த பின்னூட்டத்தப் படிச்சுட்டு ராத்தியெல்லாம் அலசி ஆராஞ்சதுல பார்ஸல அனுப்பலாமா வேண்டாமா என்ற குழப்பம் இப்போ இல்ல.நல்லா தெளிவாயிட்டேன்.
4:03 பிப இல் ஓகஸ்ட் 26, 2013
ஹிஹிஹ்..ஹி! 2011-ல நானும் காமாட்சிமா ப்ளாகைப் பார்த்து ஆர்வமா வத்தல் போட்டேன் சித்ராக்கா. ஆனா பாருங்க, எனக்கென்னமோ இந்த வத்தல்-அப்பளம் இதெல்லாம் பொரிப்பது கொஞ்சம் அலர்ஜி! அதற்குப் பதிலா 2 வகை பொரியல் பண்ணிருவேன்! 😉
என்னவருக்கு இதெல்லாம் ரொம்ப இஷ்டம்! ஆனா அவர் கொடுத்து வைச்சது அவ்வளவுதான். 😉 ஊரிலிருந்து எப்ப என் மாமியார் வருவாங்க என காத்திருக்கார். அவங்க தாராளமாவே பொரிச்ச சமையல் செய்வாங்க. 🙂
முத போணியா வந்து ஆர்டர் குடுத்திருக்கேன், சட்டுப்புட்டுன்னு பார்ஸலை அனுப்புங்க. அட்ரஸ்தான் உங்களுக்குத் தெரியுமே..நம்பர் 420, ஆரஞ்சுக் கவுன்ட்டி குறுக்குச் சந்து, ஆரஞ்சுக் கவுன்ட்டி, ஆரஞ்சு. ;))))))
8:10 முப இல் ஓகஸ்ட் 27, 2013
அட்ரஸ் பிரச்சினையெல்லாம் இல்லை.அதான் ஆரஞ்சுன்னு தட்டியதுமே உங்க வீட்டு அட்ரஸ்தான் வருமே!!
சிலபல வருஷங்களுக்கு முன்னால போட்ட வத்தல பொரிக்கவெ இந்தியாவுல இருந்து ஆள் வர்றாங்கன்னா…யோசிக்கத்தான் வேண்டியிருக்கு.
எங்க வீட்லயும் வத்தல்னா உடனே காலியாயிடும்
7:15 பிப இல் ஓகஸ்ட் 26, 2013
காசை வத்தலாக்கி கொடுத்தாலும் சரி, இல்லை காசாகவே கொடுத்தாலும் வாங்கி நானே வத்தலாகிக் கொள்கிறேன். ஓ.கே.யா?
8:17 முப இல் ஓகஸ்ட் 27, 2013
ராசியின் குறும்புத்தனம் தெரியுதே,ம் ம் ம், எப்படி இங்க வந்தாங்க!!
1:30 முப இல் ஓகஸ்ட் 27, 2013
ஹை! ராஜியின் பின்னூட்டம் நன்றாக இருக்கிறதே!
காசு வத்தல் பெயரே அழகாக இருக்கு. இதுவரை நான் வடாம், வத்தல் போட்டதே இல்லை. சொல்லவே வெக்கமா இருக்கு! 😦
செய்முறை சுலபமா இருக்கு. கொஞ்சமா முயற்சி செய்து பார்க்கிறேன்.
8:29 முப இல் ஓகஸ்ட் 27, 2013
“ஹை! ராஜியின் பின்னூட்டம் நன்றாக இருக்கிறதே!”____ அவங்க எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க.
‘இதுவரை நான் வடாம், வத்தல் போட்டதே இல்லை’___ ஊர்ல இருந்திருந்தா நானும் இப்படித்தான் இருந்திருப்பேன்.இங்கு வந்துதான் கரண்டியைக் கையில் எடுத்ததே.ரெஸிபி கேட்கிறேன் பேர்வழின்னு இங்கிருந்துகொண்டு எங்கம்மாவைப் படாதபாடு படுத்தியிருக்கேன்.
வத்தல் போடுறேன்னு மாவைக் கரைத்து குக்கரில் வைத்து விசில் வரலையேன்னு பார்த்தால் கூழா இருக்க வேண்டியது ஸ்ட்ராங்கான பாறாங்கல் மாதிரி இருந்து தூக்கிப்போட்ட அனுபவம் எல்லாம் உண்டு.
எதுக்கும் முதலில் கொஞ்சமா செஞ்சு பாருங்க,நல்லாவே வந்திடும்.
3:01 முப இல் ஓகஸ்ட் 27, 2013
ஆஹா என்ன அழகா படம் போட்டிருக்கீங்க! படத்தை போலவே பெயரும் சூப்பர் 😀
8:52 முப இல் ஓகஸ்ட் 27, 2013
இந்த ‘ப்ளாக்’கால கொஞ்சம் ஃபோட்டோ எடுக்கக் கற்றுக்கொண்டதென்னவோ உண்மைதாஙக.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.