தும்பைப் பூ போன்ற இட்லிக்கு !!!

IMG_4639

வெள்ளை நிறத்திற்கு உலகமே மல்லிகைப் பூவை எடுத்துக்காட்டாக சொல்லும்போது எங்கள் ஊர் பக்கம்  தும்பைப் பூவைத்தான் உதாரணத்திற்கு சொல்லுவாங்க‌. இல்லையென்றால் பஞ்சை(பருத்தி) சொல்லுவாங்க‌. அப்படித்தான் இட்லியையும் எல்லோரும் ‘மல்லிகைப்பூ மாதிரி’ என சொல்லும்போது நாங்க மட்டும் ………. என்ன, கண்டுபிடிச்சிட்டீங்களா !!

ஆமாங்க, ‘தும்பைப்பூ மாதிரி இட்லி வெள்ளை வெளேர்னு வந்திருக்கு பாரு’ என்றுதான் சொல்லுவோம். அதனால்தான் தலைப்பைபும் அப்படியே வைத்துவிட்டேன்.

ஒருவேளை அந்தந்த ஊரில் விளையும் பொருட்களை வைத்தே உதாரணமும் வந்திருக்கலாம். மல்லிகைப் பூவுக்காவது காம்பு பகுதி கொஞ்சம் பசுமை கலந்த பழுப்பு நிறம் இருக்கும். ஆனால் தும்பைப்பூ பூ, காம்பு என எல்லாமும் பளீர் வெண்மையில் இருக்கும். பசுமையான செடியில் குட்டிகுட்டி வெள்ளைப்பூக்கள் ……..  பார்க்கவே கொள்ளை அழகாக இருக்கும்.

தும்பைப் பூ மாதிரி இட்லி மட்டுமில்லீங்க, இந்தப் பூவை வைத்து முறுக்குகூட சுடுவோம். ஊருக்குப் போனால் தும்பைப் பூவில் முறுக்கு சுட்டு அதை காமிராவிலும் சுட்டு எடுத்து வருகிறேன். இந்தப் பூவை பார்த்தவர்களுக்கு கட்டாயம் இந்த முறுக்கை எப்படி சுடுவது என்றும் தெரிந்திருக்கும். பார்க்க ‘கை முறுக்கு’ மாதிரியே இருக்கும். இத‌ன் ரெஸிபியெல்லாம் சொல்லக்கூடாது, பரம ரகசியம்.

ஏற்கனவே இட்லி செய்முறை இருந்தாலும் புளித்து(பொங்கி) வந்துள்ள மாவு படம் இல்லையாதலால் அது ஒரு மனக்குறையாகவே இருந்தது. அது இப்பதிவின் மூலம் தீர்ந்துவிட்டது.  நிறைய எழுத வேண்டுமே என்ற சோம்பலால் இவ்வளவு நாளும் எழுதாமலே விட்டிருந்தேன்.

தேவையான பொருள்கள்:

நல்ல புழுங்கல் அரிசி _ 4 கப் தலை வெட்டாமல் (குவித்து)
உளுந்து _  1/4 கப்
வெந்தயம் _ ஒரு டேபிள்ஸ்பூன் (1/2 டீஸ்பூன் கூட சேர்த்துக்கொள்ளலாம்)
அவல் (இருந்தால்) _ ஒரு கைப்பிடி

20140306_143926

செய்முறை:

முதல் நாளிரவே வெந்தயத்தை அது ஊறும் அளவிற்கு தண்ணீர் விட்டு ஊற வைத்துவிட வேண்டும். அடுத்த நாள் காலை ஊறிய வெந்தயத்தை ஒரு ஸ்பூனால் கிளறி விடவும். இப்போது அடியில் உள்ள ஊறாத வெந்தயமும் ஊறிவிடும்.

அடுத்த நாள் காலை(சுமார் 7:00 மணி) அரிசியைத் தனியாகவும், உளுந்தை தனியாகவும் ஊற விடவும். குறைந்தது நான்கு மணி நேரமாவது ஊற வேண்டும்.

சுமார் 12:00 மணிக்கெல்லாம் ஊறிய வெந்தயம், மாவு அரைக்கத் தேவையான தண்ணீர் இரண்டையும் ஃப்ரிட்ஜினுள் எடுத்து வைத்து விடவும். இப்போதே உளுந்தையும் தோல் இல்லாமல் கழுவி ஃப்ரிட்ஜினுள் வைத்து விடவும். இவற்றை குறைந்தது அரை மணி நேரமாவது அதாவது ‘ஜில்’லுன்னு ஆகும்வரை ஃப்ரிட்ஜினுள் வைத்திருக்கவும். ஒருமணி நேரமானாலும் பரவாயில்லை.

சுமார் 1:00 மணிக்கெல்லாம் கிரைண்டரை துடைத்துவிட்டு உளுந்து & வெந்தயம் இரண்டையும் ஒன்றாகப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஆன் பண்ணவும். கிரைண்டரில் உள்ளவற்றின் அளவு குறைவாக இருப்பதால் முதலில் ஒரு நிமிடத்திற்காவது விடாமல் தள்ளிவிட வேண்டும்.

பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவைத் தள்ளிவிட்டு சுமார் அரை மணி நேரத்திற்கு ஓடவிடவும்(எங்கேன்னு எல்லாம் கேட்கக்கூடாது). மாவு பந்துபோல் பஞ்சு மாதிரி வரவேண்டும்.

பிற‌கு ஒரு பாத்திரத்தில் வழித்து கையால் நன்றாகக் கொடப்பவும். அப்போதுதான் அரிசி அரைத்து எடுப்பதற்குள் உளுந்துமாவு அமுங்காமல் இருக்கும்.

இப்போது கிரைண்டரில் அரிசியில் கொஞ்சம் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு ஓடவிட்டு மீதமுள்ள அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்கவும்.

அரிசி ஓடும்போதே அவலை கழுவி சேர்த்து அரைக்கவும். அவல் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

IMG_8837

அரிசி நன்றாக மசிந்ததும் உளுந்து மாவு உள்ள பாத்திரத்திலேயே வழித்தெடுத்து, தேவையான உப்பு போட்டு நன்றாக கொடப்பு கொடப்பு என கொடப்பவும். கரைக்கும்போதே காற்றுக் குமிழ்கள் தெரியும். மாவு உள்ள பாத்திரத்தை மூடி வெதுவெதுப்பான இடத்தில் வைத்து புளிக்க விடவும்.

நான் இங்கே அரைக்கும் நேரம் இது. நம்ம ஊர் என்றால் மாலையில் அரைத்தால்தான் சரிவரும். இல்லையென்றால் அடுத்த நாள் காலையில் பாத்திரத்தில் துளிமாவு இல்லாமல் எல்லாம் பொங்கிப்போய் தரையில் இருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

IMG_8647

ஹை, மாவு பொங்கி வந்தாச்சூஊஊஊ,  ஆனாலும்  கொஞ்சம் விட்டுத்தான் பிடிப்போமே !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

idli maavu idli maavu
idli maavu  idli maavu

இனிமேலும் இப்படியே விட்டு வைக்கக்கூடாது. இட்லியை ஊற்றிவிட வேண்டியதுதான் !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காலையில் இட்லி ஊற்றும்போது பொங்கி வந்த மாவைக் கரைத்து ஊற்றாமல் அப்படியே கரண்டியால் இட்லித் தட்டின் குழிகளில் அள்ளி வைக்க‌ வேண்டும். ம்ம்ம்…..இட்லி வேக வைப்பதெல்லாம் தெரியும்தானே !!

தோசை சுடுவதாக இருந்தால் இரண்டு தோசை அளவிற்கு மாவை தனியாக எடுத்து ஒன்றிரண்டு டீஸ்பூன்கள் தண்ணீர் சேர்த்து கலந்து ஊற்றலாம்.
IMG_4474

இந்த இட்லியை வெள்ளை நிற தட்டில் வைத்துமட்டும் சாப்பிட ஆரம்பிச்சிடாதீங்க‌. அப்புறம் “ஆட்டை தோளின் மீது வைத்துக்கொன்டே …….. ” என்ற பழமொழிபோல் “தட்டு எது? இட்லி எது?” என தேட ஆரம்பிச்சிடுவீங்க.

ஹலோஓஓஒ …….. எங்கே யாரையுமே காணொம், …… ஓ …… வெந்தயம் ஊற வைக்க கெளம்பிட்டீங்களா !!

21 பதில்கள் to “தும்பைப் பூ போன்ற இட்லிக்கு !!!”

 1. திண்டுக்கல் தனபாலன் Says:

  நேரம் உட்பட படங்களுடன் அருமையான விளக்கம் அம்மா… நன்றி… இது போல் செய்து பார்க்கிறோம்…

  வாழ்த்துக்கள்..

 2. mahalakshmivijayan Says:

  சித்ரா அக்கா நான் ஒரு இட்லி ரசிகை! இட்லி மாவை ஆட்ட தெரிந்தாலே போதும் கணவர், கணவரின் வீட்டு காரர்கள் எல்லோரையும் வசியம் செய்து விடலாம். நானும் உளுந்து சேர்த்து ஆட்டி இருக்கிறேன். ஆனால் இப்பொழுது அப்படி ஆட்டுவது இல்லை! உங்க நாலுக்கு ஒரு பங்கு என்ற அளவை குறித்து வைத்து கொண்டேன். ஆட்டி பார்க்கிறேன், தும்பை பூ போன்ற இட்லி சுவைக்க எனக்கும் ஆசை தான். நெடு நேரம் வெந்தயத்தை ஊற வைக்கனும் இல்லையா! நான் வெந்தயம் சேர்த்து ஆட்டிய பொழுது எல்லாம் எனக்கு இட்லி கலர் மாறி விடும். நான் சிறிது அளவு நேரமே ஊர வைத்ததன் விளைவோ என்னவோ.. பார்க்கலாம்.. அருமையான படங்கள்… 🙂

 3. mahalakshmivijayan Says:

  ‘நானும் வெந்தயம் சேர்த்து ஆட்டி இருக்கிறேன்..’ அக்கா உளுந்து சேர்த்து என்று டைப் செய்து காமெடி செய்து விட்டேன்! என் கமென்டில் சிறிது திருத்தி படியுங்கள் 🙂 🙂

  • chitrasundar5 Says:

   மஹா,

   வெயிட் வெயிட். 4 கப் அரிசிக்கு 1/4 கப் உளுந்து. உளுந்து ரொம்ப கம்மியா இருக்கறதால அரைக்கும்போது முதலில் கொஞ்சம் தள்ளிவிட்டால் போதும். பிறகு கிரைண்டர் நிறைய மாவு வந்துவிடும். ஊறிய உளுந்தும் ஊறிய வெந்தயமும் ஏறக்குறைய ஒரே அளவாய் இருக்கும். வெந்தயம் சேர்க்கும்போது உளுந்து நிறைய மாவு காணும். நிறத்திலும் மென்மையிலும் பஞ்சு மாதிரி அரைபடும். அதே மாதிரி கொஞ்சம் சிரமப்படாம உளுந்து மாவை ஒரு தடவையும், எல்லாம் கலந்த பிறகு ஒரு தடவையும் நன்றாகக் கலக்குமாறு கொடப்பி கரைக்க வேண்டும். அரைச்சுபார்த்து வந்துதான்னு சொல்லுங்க.

   இதென்ன உளுந்து இல்லாமல் அரிசியும், வெந்தயமும் மட்டுமே சேர்த்த புது இட்லியா இருக்கேன்னு பார்த்தேன். ஹா ஹா ஹா

 4. rajisivam51 Says:

  இட்லி மாவிற்கு அவல் போடுவீர்களா. ? முயற்சித்துப் பார்க்க வேண்டியது தான்.நல்ல மல்லிகைப் பூ மாதிரியல்லவா இட்லி இருக்கு.

  • chitrasundar5 Says:

   அவல் சும்மா ஒரு கைப்பிடி போடுவேன். நீங்களும் போட்டு பாருங்க. உங்களுக்கும் மல்லிகைப்பூ மாதிரியான‌ இட்லி கிடைக்காமலா போயிடும் !!

 5. மகிஅருண் Says:

  சமீப காலத்தில மாவரைப்பதே மறந்து போச் சித்ராக்கா! 🙂 எங்க மாமியார் ஒரு இட்லி ஸ்பெஷலிஸ்ட்..வெந்தய இட்லி-உளுந்து இட்லின்னு தினமும் இட்லிதான்!! கிட்டத்தட்ட உங்க அளவிலதான் அவங்களும் உளுந்து-வெந்தயம் ஊறவைப்பாங்க. மாவு சூப்பரா பொங்கி வந்திருக்கு. சாம்பார் அல்லது குருமா குடுத்தீங்கன்னா அதில சிலபல இட்லிகளை நீந்தவிட்டு வெளுத்துக் கட்டலாம்! 🙂 😉 🙂

  • chitrasundar5 Says:

   “மாவரைப்பதே மறந்து போச்” _________ ஹும், ஜாலிதான். எங்க ஊர் பக்கம் இட்லின்னாலே அரிசி&உளுந்து&வெந்தயம் சேர்த்ததுதான். வெந்தய இட்லி …… ம்ம்ம்ம் ……உளுந்து இட்லி……..இதெல்லாம் புதுசா இருக்கே. நேரம் கிடைக்கும்போது சொல்லுங்க. சாம்பார் தருகிறேன். ஆனால் இட்லிக்கு குருமா ……. புதுசுதான்.

 6. மகிஅருண் Says:

  //நல்ல புழுங்கல் அரிசி// நல்லாச் சொன்னீங்க போங்க..இங்க நல்ல புழுங்கலரிசி கிடைப்பதே ஒரு ப்ராபபிளிட்டிதான்..ஒரு முறை நல்ல அரிசி கிடைச்சா, பத்துமுறை பழுப்பு அரிசிதான் கிடைக்குது. எவ்வளவுதான் களைஞ்சு ஊறவிட்டாலும் மஞ்சக்கலர் இட்லி-மஞ்சக்கலர் சோறுதான்!! அவ்வ்வ்வ்வ்வ்!

  • chitrasundar5 Says:

   அரிசி எங்க வாங்குவீங்க. ஒருவேளை பழைய அரிசியா இருக்குமோ ! கேக்கவே கஷ்டமா இருக்கு.

   நாங்க அங்கிருந்தபோது ஆர்டீஷியாவுக்கு போக சோம்பல்பட்டு, அனஹெய்ம்ல இருந்த நம்ம ஊர் கடை ஒன்னுல பாசுமதி மட்டுமே இருந்ததால அதையும், தாஜ்மஹால் டீ தூளும் வாங்கி வந்தோம். அரிசி பையைத் திறந்தால் அரிசியைவிட நீளமான புழுக்கள். டீ தூள் சொல்லவே தேவையில்ல. திரும்பவும் கடைக்குப் போகணும்னா ரொம்ப தூரம் போகணும். அப்படியே குப்பைக்கு போயாச்சு. ரொம்பவே கஷ்டப்பட்டுட்டோம்.

   • மகிஅருண் Says:

    அரிசி வாங்க ஆர்டீஷியா போகுமளவு பக்கத்திலில்லை சித்ராக்கா! இந்த டிராஃபிக்ல அங்க போயிட்டு வர டைம்ல/ கேஸ் ப்ரைஸ்ல இங்க பக்கத்தில வாங்கற க்ரோசரியே பெட்டராதானிருக்கு. லஷ்மி ப்ராண்ட் புழுங்கலரிசிதான் வாங்குவது. அப்பப்ப ராயல் ப்ராண்ட், ஏஷியன் கிச்சன், பாலாஜி இப்படி வேற அரிசிகளும் வாங்கிப்பார்ப்போம். [ஆர்டீஷியாவிலும் இதேதான் கிடைக்குது, நோட் திஸ் பாயிண்ட்டு! ;)]..பெரும்பாலும் பழுப்பரிசியாகவும், அவ்வப்போது நல்ல அரிசியாகவும் கிடைக்குது. பழகிப்போச்..!! இந்த முறை வாங்கினதுல மஞ்ச இட்லிதான் வருது, கரெக்ட்டா உங்க பதிவும் வந்துச்சா, அதான் ஒரு பாட்டம் புலம்பிட்டேன்! ஹஹா!!

    //அரிசி பையைத் திறந்தால் அரிசியைவிட நீளமான புழுக்கள். // ஓஎம்ஜி!! அநியாயம்!! அனஹெய்ம் பக்கமெல்லாம் நாங்க போனதில்லை..இந்த எரியால கடைகள் நல்லாவே இருக்கு.

   • chitrasundar5 Says:

    எங்களுக்கும் ஆர்டீஷியா தூரம்தான். அதுவுமல்லாமல் காலையில் போய் அந்த கடைக்கூட்டத்தில் மாட்டி, பார்க்கிங் வேறு பிரச்சினை. வேறு வழியில்லை போயேதான் ஆக வேண்டும். நாங்க இருந்த இடத்துல நம்ம ஊர் கடை எதுவுமில்ல மகி. கொஞ்ச நாளைக்கப்புறம் பக்கத்து ஊர் ‘டஸ்டின்’ போனோம். அதுவும் பிடிக்கல.

    ஒரு தடவ உளுந்து வாங்க மறந்துபோய் இட்லிக்கு உளுந்துக்கு பதிலா துவரம்பருப்பு போட்டு அரைச்சு ………….. சும்மா சொல்லக்கூடாது, தோசை சும்மா சூப்பரா பட்டை பட்டையா ஷைனிங்கா ஜம்முன்னு வந்துச்சு. அதிலிருந்து துவரம்பருப்பு சேர்த்து மாவு அரைக்கணும்னு நினைக்கிறேனே தவிர ஊற வைக்கும்போது மறந்துபோயிடுறேன்.

 7. adhi venkat Says:

  செய்முறை படங்களுடன் அருமை. 4 பங்கு அரிசிக்கு 1/4 கப் உளுந்து தானா!! நான் 5 பங்கு அரிசிக்கு 1 உளுந்தும் கொஞ்சம் வெந்தயமும் சேர்ப்பேன். அவல் சேர்த்ததில்லை… முயற்சித்து பார்க்கிறேன்.

  • chitrasundar5 Says:

   முயற்சித்து செஞ்சு பாருங்க. நான்குக்கு ஒரு பங்கு வீதம்தான். பதமாக ஆட்டுவதிலும், கரைத்து வைப்பதிலும் மீதி இருக்கிறது. வருகைக்கு நன்றிங்க ஆதி.

 8. ranjani135 Says:

  இன்னிக்குத் தான் சரியா எழுதி வைத்துக் கொண்டேன். அடுத்த வாரம் சனிக்கிழமையே வெந்தயம் ஊற வைக்க வேண்டும் மறக்காமல். நான்கு அரிசிக்கு ஒரு உளுத்தம்பருப்பு போடுவேன். நீங்கள் உளுந்து சொல்லியிருக்கிறீர்கள். முழுவதும் புழுங்கல் அரிசி போடமாட்டேன். இரண்டு பு. அரிசி, இரண்டு சாப்பாட்டு அரிசி.
  நீங்கள் சொன்னபடி செய்து பார்த்துவிட்டு படத்துடன் அனுப்புகிறேன்.இந்த டெஸ்டில் இட்லி சரியாக வந்தால் உங்கள் குக்கிங் கிளாஸ்-ல சேருவேன். இல்லேன்னா இல்ல! 🙂
  ஒரே ஒரு சந்தேகம்: பொங்கி வந்த மாவை ஒன்று சேர்த்து கலக்காமல் அப்படியே இட்லி தட்டில் வைத்தால் இட்லி சப்பையாகி விடுகிறதே. (நான் வழக்கமாகச் செய்யும் முறையில்) நீங்கள் சொன்ன முறைப்படி செய்து பார்க்கிறேன்.

  • chitrasundar5 Says:

   உளுந்தை அரைக்கும்போதே தெரிந்துவிடும் இட்லி எப்படி வருமென்று. ஜில் உளுந்தில் ஜில் தண்ணீர் விட்டு அரைக்கும்போது பஞ்ஞ்ஞ்சு மாதிரி நிறைய மாவு வரும். முதலில் உளுந்தை வழித்து நன்றாகக் கொடப்பி கரைத்து வைத்து மூடி, பிறகு அரிசி மாவு அரைபட்டதும் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து உப்பு போட்டு மீண்டும் நன்றாகக் கொடப்பி கரைத்து வைங்க.

   மாவைக் கரைத்தால் நீர்க்குமே. அப்படியே அள்ளிஅள்ளி வைத்தால்தான் சாஃப்டா இருக்கும். இட்லியை சுட்டு படத்தையும் அனுப்புங்க, சாப்பிட்டுப் பார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்றேன்.

   ‘இட்லி நல்லா வரணுமே’ன்னு உங்களை விட நான்தான் வேண்டிக் கொள்வேன்போல் தெரிகிறது. எல்லாம் ‘குக்கிங் க்ளாஸ்’ படுத்தும் பாடுதான்.

   • ranjani135 Says:

    ஒரு சந்தேகம். முழு உளுந்தா? உடைத்த உளுந்தா?

   • chitrasundar5 Says:

    படத்துல இருக்கு பாருங்க‌, உடைத்த கருப்பு உளுந்துதான். நல்லநல்ல புஸுபுஸு
    இட்லிகளாக வரவேண்டும்.

    2014-05-02 8:48 GMT-07:00 Chitrasundar's Blog :

    >


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: