ஒவ்வொரு சாம்பாருக்கும் ஒவ்வொரு சுவை உண்டு. அப்படித்தான் இந்த வெண்டைக்காய் சாம்பாரும். இதன் மணமும், சுவையும் அலாதியாக இருக்கும். பிஞ்சு வெண்டைக்காயாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும், பச்சையாக சாப்பிடவும்தான்.
வேண்டியவைகள்:
துவரம்பருப்பு _ 1/4 கப் (இரண்டு பேர் என்பதால் குறைத்துப் போட்டுள்ளேன்)
வெண்டைக்காய் _ சுமார் 10
சின்ன வெங்காயம் _ 2 ( ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மாதிரி கிடைக்கும். சில சமயங்களில் பெரிய வெங்காயம் அளவிலேயே இருக்கும். )
தக்காளி _ 1
புளி _ புளியங்கொட்டை அளவுதான் (கரைத்து சேர்க்காமல் அப்படியே எடுத்து சாம்பாரில் போட்டு, சாம்பார் ரெடியானதும் புளியை எடுத்துவிடுவேன்)
மிளகாய்த்தூள் _ 2 டீஸ்பூன் (காரத்திற்கேற்ப)
மஞ்சள்தூள்
சுவைக்காகத் தேங்காய்ப் பூ கொஞ்சம். இல்லையென்றாலும் பரவாயில்லை
கொத்துமல்லி தழை
உப்பு _ தேவைக்கு
தாளிக்க வேண்டியவை :
எண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
வெந்தயம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை
செய்முறை:
துவரம் பருப்பை குக்கரிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோ எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு பருப்பு வேகுமளவு தண்ணீர் விட்டு அதில் மஞ்சள்தூள் சிறிது, பூண்டுப்பல் இரண்டு, இரண்டுமூன்று சொட்டுகள் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் விட்டு பருப்பை மலர வேகவைக்கவும்.
பருப்பு வேகுமுன் சில வேலைகளை முடித்துவைப்போம்.
வெண்டைக்காயைக் கழுவிக்கொண்டு, நேரமிருந்தால் பேப்பர் டவலால் துடைத்தும் வைக்கலாம். அரியும்போது தண்ணீர் துளிகளால் ஏற்படும் வழவழப்பு இல்லாமல் இருக்கும்.
அதேபோல் வெங்காயம், தக்காளி இவற்றையும் கழுவிவிட்டு தேவையான அளவில் அரிந்துகொள்ளவும்.
அடுப்பில் குழம்புக்கான பாத்திரத்தை ஏற்றி எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்துவிட்டு, வெங்காயம், தக்காளி, வெண்டைக்காய் என ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் பருப்பைக் கடைந்து ஊற்றி தேவையான தண்ணீரையும் ஊற்றி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், புளி, உப்பு இவற்றையெல்லாம் சேர்த்து காரம், உப்பு சரியாக இருக்கிறதா என சுவை பார்த்து, வேண்டுமானல் இன்னும் கொஞ்சம் சேர்த்தும், அதிகமானால் ? …… சேர்க்கும்போதே கொஞ்சம் குறைவாக சேர்ப்பது நல்லது.
இப்போது மூடிவைத்து நன்றாகக் கொதித்து சாம்பார் வாசனை கமகம என வந்ததும் தேங்காய்ப் பூ, கொத்துமல்லி தழையைக் கிள்ளிப்போட்டும் இறக்கிவிடலாம்.
இப்போது வெண்டைக்காய் சாம்பார் சாதம், இட்லி, தோசை என எல்லாவற்றுக்கும் தயார்.
9:25 பிப இல் திசெம்பர் 24, 2014
//(கரைத்து சேர்க்கா அப்படியே எடுத்து சாம்பாரில் போட்டு, சாம்பார் ரெடியானதும் புளியை எடுத்துவிடுவேன்)// என் மாமியார் முள்ளங்கி சாம்பாரில் அப்படி போட்டு எடுத்துருவாங்க..முதல்முறை பார்க்கையில் எனக்கு ரொம்ப புதிதாக இருந்தது! 🙂
வெண்டைக்காய் புளிக்குழம்பு என்னவரின் ஃபேவரிட் என்பதால் வெ.காய் சாம்பார் அதிகம் செய்வதில்லை. சாம்பார் பொடி இல்லாமல் செய்திருக்கீங்க..நல்லா இருக்கு.
வழக்கம் போல சி.வெங்காயம், வெண்டைப்பிஞ்சு இவற்றைப் பார்த்து பெருமூச்சு விட்டுகிட்டு நடையக் கட்டறேன்! 😉
9:40 பிப இல் திசெம்பர் 24, 2014
மகி,
சாம்பார் பொடியைத்தான் நாங்க மிளகாய்த்தூள்னு சொல்லுவோம்.
10:17 பிப இல் திசெம்பர் 24, 2014
இந்தப் புளிய நான் எதுல போட்டு கரைக்கிறது ? அதனாலதான் போட்டுட்டு கடைசியில தேடி எடுத்திருவேன். இப்போ இதுவே பழக்கமாயிடுச்சு.
முள்ளங்கிக்கு சும்மா பேருக்குத்தான் புளி சேர்ப்போம். பெரும்பாலும் சேர்ப்பதில்லை. ஒருவேளை உங்க மாமியார் எங்க ஊர் பக்கமோ !! சும்மா சொன்னேன்.
ஒருகாலத்துல இந்த சின்ன வெங்காயத்தைத் தேடி அலையோ அலைன்னு அலைவேன். இப்போ எளிதாவே கிடைக்கிறது. விலையும் குறைவுதான். வெண்டைக்காய் அழகா இருக்கில்ல !!
11:13 பிப இல் திசெம்பர் 24, 2014
நம்ப ஊர் சின்ன வெங்காயம் போலவே இருக்கே … அங்கே pearl onions பார்த்திருக்கிறேன். ஆனால்…..சாம்பார் வெங்காயமே கிடைத்தால் தென்னிந்தியர்களுக்கு மகிழ்ச்சி தான்.
உங்கள் சாம்பாரின் மணம் இங்கு வரைக்கும் வீசுகிறது. உடனே நானும் இன்று வெண்டைக்காய் சாம்பார் செய்து விட்டேன் சித்ரா.
12:30 பிப இல் திசெம்பர் 25, 2014
ஓ, நம்ம ரெண்டு பேர் வீட்டிலும் இன்று வெண்டைக்காய் சாம்பார்தானா !
இவை சாம்பார் வெங்காயமே. மற்ற பகுதிகளில் எப்படின்னு தெரியல, இங்கே எங்களுக்குக் கிடைக்கிறது. நேற்றுகூட பலாப்பழம் ஒன்று வாங்கி வந்தோம்னா பார்த்துக்கோங்களேன்.
3:49 முப இல் திசெம்பர் 25, 2014
வெண்டைக்காய் அழகுமட்டுமில்லை. நல்ல இளசாகவும் இருக்கிறது. ஒரு வதக்கல்லே வதங்கிவிடும்.
புளி துளிபோட்டதற்கே ஸாம்பார் கலராஇருக்கு. எல்லா ஸாம்பாரிலும் நாங்கள் வெங்காயம் போடுவதில்லை. ஒரு பச்சை மிளகாய்,போடுவோம். வெண்டைக்காயிற்கு அரைத்த ஸாம்பார் இல்லாமல் பொடிபோட்டுச் செய்யும் வழக்கம் எனக்கும் தான். புளி அதிகம் சேர்க்காத ஸாம்பாருக்கு
அதன் கண்ணில் புளியைக் காட்டிவிட்டு எடுத்து விடலாம். ஸரியான யோசனை சின்ன அளவு ஸாம்பாருக்கு.. பழுத்த டொமேடோ ருசிபோதும். நல்ல ஸாம்பார். ருசிக்க வேண்டும். அன்புடன்
12:37 பிப இல் திசெம்பர் 25, 2014
ஆமாம்மா, இவை பிஞ்சு வெண்டைக்காய்கள்தான். ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் வாங்கியது. நானும் வெங்காயம் சேர்க்காமல் என்றாவது சாம்பார் வைத்துப் பார்க்கலாம் என நினைப்பதுண்டு. ஆனால் வைக்கமாட்டேன். சிவப்பு நிற தக்காளிதான் சேர்த்துள்ளேன். அன்புடன் சித்ரா.
4:42 முப இல் திசெம்பர் 25, 2014
சாம்பார் குறிப்பு எனக்கு மிக பயனுள்ளது. தந்தமைக்கு நன்றி சித்ரா. இனிய புதுவருட வாழ்த்துக்கள் சித்ரா.
12:39 பிப இல் திசெம்பர் 25, 2014
வாங்க ப்ரியசகி,
இக்குறிப்பு உங்களுக்கும் பயன்படும் என்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கும், உங்களின் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் & புதுவருட வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றி ப்ரியசகி.