ஈஸி அதிரசம்னா பச்சரிசி இல்லாமலோ !!!! , அல்லது சர்க்கரை இல்லாமலோ !!!! இப்படித்தானே எண்ணத் தோன்றும். இவை எல்லாமே உண்டுங்க. ஆனால் முக்கியமான ஒண்ணு, அதாங்க நாமெல்லாம் பார்த்து பயப்படுவோமே, சில சமயங்களில் வரும், பல சமயங்களில் சொதப்புமே, அது அது அதேதான். பாகு காய்ச்ச வேண்டிய அவசியல்லை. அப்பாடா, இப்போ நிம்மதி பெருமூச்சு விட்டாச்சா ! இனி அடிக்கடி அதிரசம் செய்து சுவைக்கலாம், வாங்க !!
தேவையானவை:
பச்சரிசி _ ஒரு அளவு
சர்க்கரை _ பாதி அளவு
ஏலக்காய் _ ஒன்றிரண்டு
உப்பு _ கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு துளியூண்டு
செய்முறை :
பச்சரிசியை நன்றாகக் கழுவிவிட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்.
ஊறிய பிறகு தண்ணீர் முழுவதையும் சுத்தமாக வடித்துவிடவும். அரிசியில் தண்ணீர் துளியும் இருக்க வேண்டாம்.
பிறகு அரிசியை மிக்ஸியில் போட்டு அதனுடன் ஏலக்காயையும் போட்டு ஈர மாவாக இடித்துக்கொள்ளவும். சமயங்களில் கடைசியில் ஏலக்காயை சேர்க்க மறந்துவிடுவதால் இந்த ஐடியா. புட்டு, இடியாப்பம் என எல்லாவற்றுக்கும் இப்படியே இடித்துக்கொள்கிறேன்.
மாவை ஒரு எவர்சில்வர் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் கொட்டி, அதனுடன் சர்க்கரையையும், உப்பையும் போட்டு கை விடாமல் ஒரு கரண்டியால் நன்றாகக் கலந்து மூடி வைக்கவும்.
அடுத்த நாள் மாவை கையால் நன்றாகக் கிளறிவிட்டு பிசையவும். அதிரசம் செய்யும் பதத்திற்கு மாவு வந்துவிடும். ஈர மாவுடன் சர்க்கரை சேர்ந்து சிறிது நீர் விட்டுக்கொண்டு பதமாக இருக்கும்.
அப்படி ஈரம் பத்தவில்லை எனில் அரை ஸ்பூன் அளவிற்கு சுடுதண்ணீர் தெளித்து பிசையவும். டபக்கென நீறை ஊற்றிவிட வேண்டாம். பார்த்து தேவையானால் மட்டுமே சேர்க்கவும்.
பாகு காய்ச்சுவது, பாகு பதம் பார்ப்பது என பிரச்சினையில்லாமல் அதிரச மாவு தயார்.
வாணலில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி காயவைக்கவும். வடை போடும் அளவிற்கெல்லாம் எண்ணெய் ரொம்பவும் சூடாகக் கூடாது.
சிறு உருண்டை அளவிற்கு மாவை எடுத்து உள்ளங்கைகளில் வைத்து அழுத்தாமல் உருண்டையாக்கி ஒரு ப்ளாஸ்டிக் அல்லது வாழையிலையில் வைத்துத் தட்டவும். இந்த மாவு எவ்வளவு மெல்லியதாக வேண்டுமானாலும் தட்ட வருகிறது.
எண்ணெய் காய்ந்ததும் அதில் போட்டு, (நன்றாக பூரிபோல் இரண்டு பக்கமும் உப்பிக்கொண்டு வரும்) ஒரு பக்கம் சிவந்ததும் திருப்பிப்போட்டு மறுபக்கமும் சிவந்ததும்(சர்க்கரை சேர்ப்பதால் அந்தளவிற்கு சிவக்காது) எடுத்து அடிப்பக்கம் தட்டையான ஒரு தட்டில் போட்டு அடிப்பக்கம் தட்டையான ஒரு கிண்ணத்தால் அதிரசத்தை அழுத்தவும்.
மீதமான எண்ணெய் வெளியேறிவிடும். இந்த மாவு எண்ணெய் குடிக்கவில்லை. இருந்தாலும் அழுத்தினால்தான் எல்லாம் ஒன்றுபோல் அழகாக இருக்கும்.
செய்து சாப்பிட்டுப் பார்த்து, வந்து சொல்லுங்க !
10:28 பிப இல் திசெம்பர் 27, 2014
பார்க்க அழகாக இருக்கிறது அதிரசம்! செய்து பார்த்து விட்டு சொல்லுகிறேன்.. சித்ரா அக்கா வழக்கம் போல் ஒரே ஒரு டவுட்.. அந்த புகைப்படத்தில் வெள்ளை நிறத்தில் பச்சரிசி இருக்கு ஒரு பெரிய கரண்டியில் , இன்னொரு கரண்டியில் பிரவுன் நிறத்தில் இருப்பது என்ன சீனியா??
7:48 முப இல் திசெம்பர் 28, 2014
சீனிதான் அது(raw cane sugar). பார்க்க அழகா மட்டுமில்லை மஹா, மேல்பகுதி மொறுமொறுப்பாகவும், உள்பகுதி சாஃப்டாகவும் இருக்கு. முதலில் அரை கப் அரிசியில்(எனக்கு ஏழு அதிரசங்கள் வந்தன) செஞ்சு பாருங்க. சரியாக வந்ததும் கொஞ்சம் கூட்டி செய்யலாம்.
10:37 பிப இல் திசெம்பர் 27, 2014
ஈசியான ரெசிபி தான் ஆனால் எனக்கும் அதே டவுட்டு….மகாவைப்போல் தான்.. இல்லை பிரவுன் சுகர் என்று நினைக்கிறேன். ‘பிரவுன் சுகர்’ என்று நான் சொல்வதுக் கலரைப் பார்த்து மட்டுமே…… படிக்கும் யாரும் கற்பனைக் குதிரையைத் தட்டி விட வேண்டாம்.
7:56 முப இல் திசெம்பர் 28, 2014
ஹா ஹா கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டாச்சு. இது சர்க்கரைதான்(raw cane sugar). ஏன்னே தெரியல பிடிச்சு போச்சு, பல வருடங்களாக இந்த சர்க்கரைதான் வாங்குகிறேன்.
உறவுப் பெண்தான் இந்த ரெஸிபிய சொன்னாங்க. ரெஸிபி ஈஸியா இருக்கேன்னு எனக்கும் முதலில் சந்தேகம் வந்துச்சு. அதனால முதலில் அரை கப் அரிசியில் செய்து பார்த்தேன். உடனே காலி. இப்போ கொஞ்சம் முன்னேறி ஒரு கப் அரிசியில்.
3:53 முப இல் திசெம்பர் 28, 2014
அதிரசம் செய்ததில்லை சித்ரா. அதன் செய்முறை பீதியால்.ஆனா நீங்க தந்த குறிப்பு செய்யலாம் பயமல்லாமல் என என்று மனம் சொல்லுது. ஆனபடியால் செய்துபார்க்க போகிறேன்.நன்றி சித்ரா.
8:04 முப இல் திசெம்பர் 28, 2014
ப்ரியசகி,
சரியா வரலைன்னாலும் ஏதும் சொல்ல ஆட்கள் இங்கு இல்லை என்ற தைரியத்தில், துணிந்து நானாக பாகு வைத்து அதிரசம் செய்தது இங்கு வந்தபிறகுதான். இப்போது இட்லி & தோசை மாதிரி சுலபமாகிவிட்டது.
இங்குள்ள ரெஸிபியும் உறவுப்பெண் ஒருவர் சொன்னதுதான். செய்ய பயமிருந்தால் முதலில் கொஞ்சமா அரை கப் அளவுல செஞ்சு பாருங்க.
4:58 முப இல் திசெம்பர் 30, 2014
நம் ஊர் பக்கத்தில் பெண்ணிற்கு அதிரஸம் சீரில் வெள்ளை அதிரஸம்கூட கொடுப்போம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இதன் பெயராகவே இருக்கும். ரொம்ப ஸுலபமாக இருக்கு.
செய்து விடுகிறேன். நன்றி. அன்புடன்
2:21 பிப இல் திசெம்பர் 30, 2014
காமாக்ஷிமா,
எப்பவும் பாகு வைத்துதான் வெல்ல அதிரஸம் செய்வேன். உறவினர் இந்த முறையை சொன்னதால் சுலபமா இருக்கேன்னுதான் நானும் முயற்சித்தேன். சரியாகவும் வந்தது. நீங்களும் செஞ்சு பாருங்கம்மா.
முன்பெல்லாம் அதிரஸமும் வைத்ததாக நானும் கேள்விப்பட்டிருக்கேன். இப்போ எல்லாமே மாறிப்போச்சு. அன்புடன் சித்ரா.
5:10 பிப இல் ஜனவரி 1, 2015
எளிதாக செய்ய அழகாக வழி காட்டியுள்ளீர்கள்.
நான் இதுவரை அதிரசம் முயற்சித்ததில்லை. பாகுப்பதத்தை எண்ணித் தான்….:) இனி கட்டாயம் செய்து பார்க்கிறேன். என் கணவருக்கு மிகவும் பிடித்தமானது அதிரசம் தான்.
10:31 பிப இல் ஜனவரி 1, 2015
ஆதி,
எங்க வீட்டிலும் இவருக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும் என்பதால்தான் செய்யவே கற்றுக்கொண்டேன்.
9:47 பிப இல் ஜனவரி 3, 2015
//எங்க வீட்டிலும் இவருக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும் என்பதால்தான் செய்யவே கற்றுக்கொண்டேன்.// இதெல்லாம் டூ மச்சு சித்ராக்கா.. ஏற்கனவே “நீ உனக்கு பிடிச்சத மட்டுந்தான் சமைக்கிறே!”ந்னு கம்ப்ளெயிண்ட்டு..இந்த மாதிரி டேஞ்சரான கமெண்ட்டெல்லாம் எங்க வீட்டுக்காரர் படிச்சா என்னாகறது?? ;)))) குடும்பத்தில கொழப்பத்த உண்டுபண்ணாதீங்க, சொல்லிட்டேன்! கர்ர்ர்ர்ர்ர்!
பை த வே, எத்தனை முறை அடி வாங்கினாலும்(ஹி..ஹி..அதிரசத்திலதான்..அடிச்சா மண்டை உடையறாமாதிரியே வரும்…அவ்வ்வ்!) விடாம ஓரொரு தீபாவளிக்கும் முயற்சிப்பேன்..இந்த வாட்டி எதுவும் செய்யலை. எங்க செல்ல அதிரசம்:) என்னை எதுவும் செய்ய விடல்லை! 🙂
எனக்கு முன்பு பாகு மட்டும்தான் பிரச்சனையா இருந்துச்சு..இப்ப பொரிப்பதுமே பிரச்சனை..எண்ணெய் சட்டி அடுப்பில வைச்சா லயா-வுக்கு மூக்கு வேர்த்து கண்ணு வழியா வழிய ஆரம்பிச்சிரும்..அதாங்க, அழ ஆரம்பிச்சுருவாங்க. அப்புறம் எல்லாம் கருக்கி;) எடுக்க வேண்டியதா போகுது. எனி ஷார்ட் கட் ஃபார் திஸ்? இருந்துச்சுன்னாச் சொல்லுங்க..முயற்சி பண்ணிர்றேன்! :)))))
7:02 பிப இல் ஜனவரி 8, 2015
ஹா ஹா !! இதுக்குத்தான் ப்ளாக் இருப்பதாக் காட்டிக்கவே கூடாது மஹி.
நெறைய செய்யாம மொதல்ல பத்துக்குள்ள வர்ற மாதிரி ட்ரை பண்ணுங்க. சுடும்போதே பெரிய அதிரசத்துல ஒண்ண எடுத்து சின்ன அதிரசத்துகிட்ட முதலிலேயே கொடுத்துட்டா பிரச்சினையே வராது. இதைவிட(பாகு காய்ச்சாம) ஒரு ‘ஷார்ட்கட்’டா ??
12:12 முப இல் ஒக்ரோபர் 24, 2017
Hi,
I do not have tamil fonts in my phone hence the question in english.
I can use normal white sugar also right? pls clarify thanks. Meera
7:50 முப இல் ஒக்ரோபர் 28, 2017
மீரா,
எனக்கு இந்த செய்முறையை சொன்னவங்க சாதாரண வெள்ளை சர்க்கரையை போட்டதாகத்தான் சொன்னார்கள். கைவசம் அது இல்லாததால் நான் (raw cane sugar) போட்டேன்.
நீங்களும் செய்து பார்த்துட்டு வந்து சொல்லுங்க.