அந்தந்த ஊர் பக்கம் விளையும் பொருட்களைக்கொண்டுதானே அவ்வூர் சமையலும் இருக்கும். அப்படித்தான் எங்கள் ஊர் பக்கம் வேர்க்கடலை அதிகமாக விளையும். அதனால் இந்த ‘மல்லாட்டை சோறு’ ரொம்பவே ஃபேமஸ். இதை எப்போதாவது ஒருமுறை செய்வதால் உறவு & தெரிந்தவர் என பங்கு போகும். ஒரு பெரிய பானையில் எங்க வீட்டு chief chef(ஆயா) தான் செய்வாங்க. கெட்டியா இருக்கும். செய்த மறு நாள்தான் நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. ஏனோ அப்போது நான் சாப்பிட மாட்டேன். இப்போ ஆசையா இருக்கு அவங்க செஞ்சி நாம சாப்பிடணும்போல.
என்னென்ன போட்டு செய்வாங்க என்பது அப்போதே தெரியும். ஆனால் அளவுகள் எல்லாம் தெரியாது. அவங்களுமே அரிசியை மட்டும் அளந்துகொண்டு மற்ற பொருட்களை கண்ணாலேயே அளந்துப்பாங்க. நல்லவேளை என் அம்மாவிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டு எப்போதாவது செய்து அவர்களை எல்லாம் நினைத்துக்கொண்டே சாப்பிடுகிறேன் 😦
இதெல்லாம் முன்பொரு காலத்தில். இப்போதோ வேலைப்பளு & ஆள்கூலி இவற்றினால் வேர்க்கடலை விளைச்சல் ஏறக்குறைய இல்லாமலே போனது. இந்த சமையலும் காணாமலே போனது.
இந்த சாதத்தை பச்சரிசியில் செய்வாங்க. நான் தினையில் செஞ்சிருக்கேன். உங்க விருப்பம்போல் எல்லா தானியத்திலும் செய்யலாம்.
தேவையானவை :
தினை : ஒரு கப்
புளி _ கோலி அளவு
வறுத்த வேர்க்கடலை _ 1/2 கப் (இன்னும் அதிகமாகப் போட்டாலும் நன்றாகவே இருக்கும். )
வெறும் வாணலில் வறுத்த காய்ந்த மிளகாய் _ 1 (காரத்திற்கேற்ப)
உப்பு _ சுவைக்கேற்ப
செய்முறை :
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, ஊறியதும் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பங்கு தினைக்கு மூன்று கப்புகள் தண்ணீர் வேண்டும். இது எங்க ஊர் அடுப்புக்கு. Gas அடுப்பாக இருந்தால் கூடுதலாக சேர்க்க வேண்டி வரும். புளித்தண்ணீருடன் மூன்று கப்புகள் இருக்குமாறு தேவையான தண்ணீரை சேர்த்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி(அரிசியில் செய்வதாக இருந்தால் ஒரு கப் தண்ணீர் கூட சேர்த்துக்கொள்ளலாம்) அடுப்பில் ஏற்றவும். விருப்பமானால் இதில் துளி மஞ்சள்தூள் சேர்க்கலாம்.
தண்ணீர் நன்றாகக் கொதித்து புளி வாசனை போக இரண்டுமூன்று நிமிடங்கள் ஆகும்.
புளி வாசனை போனதும் தினையைக் கழுவி சேர்த்து, தேவைக்கு உப்பும் போட்டு, தீயைக் குறைத்து, மூடி வேக வைக்கவும்.
தினை சீக்கிரமே வெந்துவிடும் என்பதால் அடி பிடிக்க சான்ஸ் உண்டு. எனவே அடிக்கடி கிண்டி விடவும்.
சாதம் வெந்துகொண்டிருக்கும்போதே வறுத்த வேர்க்கடலை & வறுத்த காய்ந்தமிளகாய் இரண்டையும் மிக்ஸியில் போட்டு ஒன்றும்பாதியுமாக பொடித்துக்கொள்ளவும்.
பொடி மைய இருப்பதைவிட …… அங்கங்கே வேர்க்கடலை கடிபட்டால் நன்றாக இருக்கும்.
சாதம் நன்றாக வெந்து கெட்டியானதும் பொடித்த பொடியைப் போட்டு நன்றாகக் கிண்டி, உப்பு & காரம் சரிபார்த்து, அடுப்பை நிறுத்திவிட்டு மூடி வைத்தால் அப்படியே புழுங்கிவிடும்.
பிறகு எடுத்து சாப்பிட வேண்டியதுதான். எண்ணெய், தாளிப்பு இது எதுவும் இல்லாத சுவையான உணவு !
இதற்கு அவர்கள் ஏதும் தொட்டு சாப்பிட்டதாக நினைவில்லை. நான் வத்தல் அல்லது அப்பளத்துடன் சாப்பிடுவேன்.
ஒருசிலர் பொடி சேர்க்கும்போது கொஞ்சம் முருங்கைக் கீரையும் சேர்ப்பாங்க. ஆனால் அதை அன்றே காலி பண்ணிடுவாங்க. கீரை சேர்ப்பதால் ஊசிப்போயிடுமே, அதனால்தான்.
தண்ணீரின் அளவில் குழப்பம் என்றால் பின்னூட்டத்தில் கேட்போமே !
12:13 முப இல் மே 1, 2016
நன்றாகவே இருக்கும். இங்கே தினை கிடைப்பதில்லை. ்அரிசியிலேயே செய்து பார்க்கிறேன். எண்ணெய் இல்லாத குறையை வேர்க்கடலை போக்கி விடும் புளிப்பு,காரம் இருக்கிறது. தினையின் சுவை வேறு இருக்கிறது. சுடச்,சுட சாப்பிட நன்றாக இருக்கும். கிராமங்களில் கிடைத்ததை வைத்துச் செய்வார்கள். இயற்கை ருசியும்,மணமும் இருந்தது.
நாம் வேண்டுமானால் துளி பெருங்காயம் சேர்த்துச் செய்து ருசிக்கணும். உடம்பிற்கும் கெடுதல் செய்யாது. நொய் புளிப்பொங்கல் ஞாபகம் வந்தது. சுவையான எளிய குறிப்பு. நன்றாக உள்ளது. பிரமாதப்படுத்து. ஸந்தோஷம். அன்புடன்
5:53 பிப இல் மே 2, 2016
காமாக்ஷிமா,
இனி நானும் துளி பெருங்காயம் சேர்த்து செய்கிறேன். உண்மைதான் அம்மா, சுடச்சுட சாப்பிட சூப்பர்தான். செய்து பாருங்கம்மா.
இப்போது எங்களுக்கு எல்லா சிறுதானியங்களும் கிடைக்கின்றன. பொங்கல், உப்புமா எல்லாம் இவற்றில்தான் செய்கிறேன். உங்கள் பின்னூட்டமும் சுவையுடன் மணமாகவும் உள்ளது 🙂
6:50 முப இல் மே 1, 2016
இது வரை வேர்க்கடலை சாதம் செய்து பார்த்ததில்லை. எளிதாகவே தெரிகிறது செய்முறை செய்து பார்ஹ்த்டு விடலாம். வேர்க்கடலை ஆசியப் பெண்மணிகள் அவசியம் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று படித்ததாக நினைவு.
அருமையான ரெசிபி ஓரணு பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி சித்ரா.
5:59 பிப இல் மே 2, 2016
ராஜலஷ்மி,
ஓ, புது செய்தியா இருக்கே ! நாங்க தினமுமே ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக்கொள்வோம். சின்ன வயசிலிருந்தே அப்படியே பழகிப்போச்சு. செய்து பாருங்க, வருகைக்கும் நன்றிங்க !