எங்க ஊர் பக்க்ம் உளுந்து வடை என்றாலே உளுந்து அளவுக்கு புழுங்கல் அரிசியும் சேர்ப்பார்கள். அப்போதுதான் வடை வெளியில் மொறுமொறுப்பாகவும் உள்ளே சாஃப்டாகவும், கூடவே சுவையாகவும் இருக்கும் என்பதால்.
முன்பெல்லாம் உளுந்து வடை செய்வதென்றாலே மனதளவில் நான்கைந்து நாட்களுக்கு முன்பே தயாராக வேண்டும். உளுந்துகூட அரைச்சிடலாம், ஆனால் அந்த புழுங்கல் அரிசியை கெட்டியாக அரைப்பதுதான் சிரமம்.
ஒருமுறை என் சகோதரி கொடுத்த ஐடியாபடி பச்சரிசியை இடிப்பதுபோல் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, வடிகட்டி மிக்ஸியில் இடித்து மாவாக்கி சேர்த்தேன், சுலபமாக இருந்தது.
அதன்பிறகு கொஞ்சம் நாள் கழித்து இன்னொரு ஐடியா கொடுத்தார். இதுதான் இப்போது நான் செய்வது. எளிதாகவும் உள்ளது. அது அது அது …… வாங்க பார்க்கலாம் :)))
அரைக்கத் தேவையானவை :
உளுந்து _ இரண்டு கப்
பெருஞ்சீரகம் _ சிறிது
அரைத்த உளுந்து மாவில் கலக்கத் தேவையானவை:
இட்லி மாவு _ இரண்டு கை . ஒரு கப் உளுந்துக்கு ஒரு கை என (புதிதாக அரைத்தது அல்லது பழைய மாவு என்றாலும் பரவாயில்லை)
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் _ தேவைக்கு
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் _ இரண்டுமூன்று
பொடியாக நறுக்கிய இஞ்சி _ கொஞ்சம்
பெருங்காயம்
கறிவேப்பிலை
உப்பு
செய்முறை :
ஊற வைப்பது தோலுடன் கூடிய உளுந்து என்றால் தோல் எளிதாக பிரியும்வரை ஊறவைத்து (எனக்கு இங்கே மூன்றிலிருந்து நான்கு மணி நேரமாவது பிடிக்கும்) கழுவி கொஞ்சம் தண்ணீருடன் (அரைக்கும்போது பயன்படுத்த) ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும்.
வெள்ளை முழு உளுந்து என்றால் ஊற வைக்கும்போதே கழுவிவிட்டு ஊற வைக்கவும். (இங்கே எனக்கு இரண்டிலிருந்து இரண்டரை மணி நேரம்வரை பிடிக்கும்). ஊறியதும் கொஞ்சம் தண்ணீருடன் ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும்.
சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு வெளியில் எடுத்து கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு கூடவே பெருஞ்சீரகத்தையும் போட்டு நன்றாக அரைக்கவும். தேவைப்படும்போது தண்ணீர் தெளித்து மைய அரைக்கவும். தண்ணீர் அதிகமானால் மாவு நீர்த்துவிடும். நீண்ட நேரம் அரைத்தாலும் மாவு அமுங்கிவிடும்.
கிரைண்டர் என்றால் தள்ளிவிட்டுவிட்டு அரைக்கணும். மிக்ஸி என்றால் நிறுத்தி நிறுத்தி ஓட விட்டு தள்ளிவிட்டு அரைக்கணும். எதுவாக இருந்தாலும் பதமாக அரைக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் வழித்து போட்டுக்கொண்டு, அதனுடன் இட்லி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்கி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து கொடப்பினாற்போல் கலக்கவும். உப்பு, காரம் சரி பார்த்துக்கொள்ளவும்.
வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வலது கையைத் தண்ணீரில் நனைத்துக்கொண்டு, மாவில் கொஞ்சம் எடுத்து, உருட்டி கட்டை விரலால் நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போடவும்.
இதேபோல் எண்ணெய் கொள்ளுமளவு போட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறு பக்கம் வெந்ததும் எடுக்கவும். இப்படியே எல்லா மாவையும் வடைகளாக சுடவும்.
இப்படியே செய்தால் துளி எண்ணெயும் குடிக்காமல் வரும். விருப்பமான பாயசத்துடன் சுவைக்கவும்.
கடைசி மாவை கொஞ்சம் போண்டா மாதிரியும் போட்டுக் கொள்ளலாம்.
6:41 பிப இல் ஏப்ரல் 29, 2018
பட்டு,
பதிவை லைக் பண்ணியதற்கு நன்றிங்க.
11:48 பிப இல் ஏப்ரல் 29, 2018
ஸாதாரணமாக இட்லி மாவில் h போண்டோமாதிரி செய்தால் எண்ணெய் நிரம்ப இழுக்கும். புதுமாதிரியா இருக்கு, இன்னும் உளுந்து சேர்த்த வடை. எதுவும் நான் இப்போது செய்யும்படியான உடல்நிலை இல்லை. நீ திரும்பவும் எழுதுவதே மிக்க ஸந்தோஷம்.
ஹலோ பட்டு உன் லைக்கிங்பார்த்து ஸந்தோஷம். சித்ரா உனக்கும் நன்றி. அன்புடன்
8:55 முப இல் மே 1, 2018
காமாக்ஷிமா,
உங்க சந்தோஷம் என்னையும் தொற்றிக்கொண்டது :)))
ஆமாம்மா, செய்ய மனம் இருந்தாலும் உடல்நிலை ஒத்துழைக்க வேண்டுமே !
நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் நானும் இதுவரை இட்லி மாவில் முயற்சித்ததில்லை. எண்ணெய் குடிக்கும் என பயம். இப்போதெல்லாம் இதுதான், இது எனக்கு கொஞ்சம் எளிதாக இருக்கிறது. அன்புடன் சித்ரா.
12:57 முப இல் ஏப்ரல் 30, 2018
ஆஹா…நீண்ட நாளைக்கு அப்புறம் .வாங்க. வடை ரெசிப்பியா. எப்பவுமே வடை,இட்லி சரிவராது. இப்ப இட்லி ஓகே.சாப்டா வருகிறது. வடை அடிக்கடி செய்கிறேன். இந்தமுறையிலும் செய்துபார்க்கிறேன் சித்ரா.
1:04 முப இல் ஏப்ரல் 30, 2018
வடை புஸு,புஸு ந்னு இருக்கு 😀
9:03 முப இல் மே 1, 2018
வாங்க ப்ரியாஆஅ வாங்க , உங்களத்தான் வல போட்டு தேடிட்டிருந்தேன். சரியா வந்து சிக்கிட்டீங்க. சிவப்பு அரிசி வாங்கி வச்சி, ஏதேதோ பண்ணி இப்போ தீர போற நெலமையில இரூக்கு. முழுசா காலி பண்றதுக்குள்ள சீக்கிரமே கடலகறி ரெஸிபி போடுங்க.
வடை செஞ்சு பாருங்க, குண்டுகுண்டா அழகா வருது. உளுந்து மட்டும் நீர்க்காம அரைச்சிக்கோங்க, சரியா 🙂