கேழ்வரகு மாவு உருண்டை/லட்டு

தேவையானவை:

கேழ்வரகு மாவு_ஒரு கப்
வெல்லம்_1/2 கப்
முந்திரி_5
ஏலக்காய்_1
நெய்_கொஞ்சம்

செய்முறை:

அடுப்பில் வாணலை வைத்து நெய் விட்டுக் காய்ந்ததும் முந்திரியைப் போட்டு பொன் வறுவலாக வறுத்தெடுத்துக்கொண்டு,மீண்டும் அதே வாணலில் கேழ்வரகு மாவைப்போட்டு தோசைத் திருப்பியால் கிளறவும்.

தீ மிதமாக இருக்கட்டும்.விடாமல் கிளறிவிட்டுக்கொண்டேயிருக்கவும்.

மாவு நன்றாக சூடேறி வாசனை வந்ததும் இறக்கி வைக்கவும்.ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது மூழ்கும் அளவு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றவும்.தீ மிதமாகவே இருக்கட்டும். அதிகமானால் வெல்லம் அடியில் பிடித்து தீய்ந்து போகும்.

வெல்லம் முழுவதும் கரைந்து நுரைத்துக்கொண்டு பொங்கிவரும்.அப்போது தீயை நிறுத்திவிட்டு மாவைக் கொட்டிக்கொண்டே விடாமல் கிளறவும்.முந்திரி,ஏலத்தையும் சேர்த்துக்கொள்ளவும்.

மாவு கை பொறுக்கும் சூடாக இருக்கும்போது  வேண்டிய அளவு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

இப்போது நல்ல வாசனையுடன் கூடிய,சத்தான,சுவையான கேழ்வரகு மாவு உருண்டைகள்/லட்டுகள் தயார்.

காராபூந்தி

தேவையானவை:

கடலை மாவு_ஒரு கப்
அரிசிமாவு_2 டீஸ்பூன்
சமையல் சோடா_துளிக்கும் குறைவாக‌
தனி மிளகாய்த்தூள்_1/4 டீஸ்பூன்
வேர்க்கடலை_1/2 கைப்பிடி
முந்திரி_5
பெருங்காயம்_சிறிது
பூண்டுப்பல்_நான்கைந்து
கறிவெப்பிலை_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு

செய்முறை:

கடலைமாவு,அரிசிமாவு,சோடா உப்பு,உப்பு இவற்றை சல்லடையில் போட்டு இரண்டு தரம் சலித்து ஒரு கிண்ணத்தில் கொட்டிவைக்கவும்.

இதில் கொஞ்சம்கொஞ்சமாக தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க,கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும்.Whisk ஐப் பயன்படுத்தினால் நன்றாக வரும்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பூந்தி கரண்டியைப் பயன்படுத்தி பூந்திகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.கரண்டி இல்லையெனில் சாதம் வடிக்கும் தட்டைக்கூடப் பயன்படுத்தலாம்.லட்டு பூந்தியைவிடக் கொஞ்சம் முறுகலாக‌ எடுக்க‌ வேண்டும்.

இவ்வாறே எல்லா பூந்திகளையும் போட்டு எடுத்தபிறகு அந்த எண்ணெயிலேயே கறிவேப்பிலை,பூண்டு (ஒன்றும் பாதியுமாக தட்டியது),வேர்க்கடலை,முந்திரி  இவற்றைப் போட்டுப் பொரித்து பூந்தியில் கொட்டவும்.கொஞ்சம் கவனம் தேவை.சமயங்களில் கடலை வெடிக்கவோ அல்லது வெடித்து  எண்ணெய் தெரித்து விழவோ வாய்ப்புண்டு.

இவற்றின் மீது மிளகாய்த்தூளைத் தூவி கலக்கவும்.இப்போது கரகர மொறுமொறு காராபூந்தி ரெடி.

இது எல்லா வகையான சாதத்திற்கும்,முக்கியமாக பொரியுடன் கலந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

தீபாவளி ஸ்பெஷல்

நேற்றைய தீபாவளி;

அதிரசம்,

லட்டு,

மசால் வடை,

சேமியா,ரவா கேசரி

முறுக்கு ,

இவற்றுடன் இனிதே முடிந்தது.

லட்டு

தேவையானப் பொருட்கள்

கடலை மாவு- 2கப்புகள்
அரிசி மாவு- 2 டீஸ்பூன்
சர்க்கரை- 1 1/2கப்புகள்
சோடா மாவு- 1/2 பின்ச்
தண்ணீர்-தேவையான அளவு
கிராம்பு-2
ஏலக்கய்-2
முந்திரி-10
உலர் திராட்சை-10
குங்குமப்பூ- 1 பின்ச்
கல்கண்டு- தேவையான அளவு
நெய்- 1/4 கப்
எண்ணெய்-தேவையான அளவு
செய்முறை:
முதலில் கடலை மாவுடன் அரிசி மாவு,சோடா மாவு இரண்டையும் கலந்து மாவு சலிக்கும் சல்லடையால் சலித்துக்கொள்ள வேண்டும்.பிறகு சிறிது சிறிதாக நீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் காய வைக்க வேண்டும்.எண்ணெய்க்கு மேலாக பூந்தி கரண்டியைப் பிடித்து ஒரு சிறு கரண்டியில் மாவை எடுத்து,பூந்தி கரண்டியில் ஊற்றி லேசாக தேய்க்க வேண்டும்.பூந்தி சிறுசிறு முத்துக்களாக எண்ணெயில் விழும்.பூந்தி சிவந்து போகுமுன் எடுத்து விட வேண்டும்.இவ்வாறு எல்லா மாவையும் பூந்தியாக போட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பாகு காய்ச்சும் விதம்:
ஒரு அடி கனமான பாதிரத்தில் சர்க்கரை எடுத்து அது மூழ்கும் அளவு (1 கப் சர்க்கரைக்கு 1/4 கப் தண்ணீர் போதும்) தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்ற வேண்டும்.சிறிது நேரத்திலேயே சர்க்கரை கரைந்து தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்.இந்த நேரத்தில் சிறிது கவனமுடன் இருந்து(பாகில் சிறிது கரண்டியில் எடுத்து ஆள் காட்டி விரலுக்கும் பெரு விரலுக்கும் இடையில் வைத்து 1,2,3 என எண்ணி விரல்களைப் பிரித்தால் இரண்டு விரல்களுக்கிடையே மெல்லிய கம்பியாக வரும்.இதுதான் இளம் கம்பிப் பாகு பதம்) இளம் கம்பி பாகு பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி பூந்தியில் ஊற்றி நன்றாக கிளற வேண்டும்.கிளறுவதற்கு மத்தின் அடிப்பகுதியைப் பயன்படுத்தலாம்.அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் முதலில் முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து,பிறகு திராட்சையை வறுத்து, இரண்டையும் பூந்தியில் கொட்டிக் கிளற வேண்டும். கிராம்பு,ஏலக்கய் பொடித்து போடவும்.குங்குமபூவையும் பூந்தியில் போட்டு நன்றாகக் கலக்கவும்.லேசாக சூடு இருக்கும்போதே உருண்டைகளாக அழுத்தி பிடித்து விடவும். சுவையான வீட்டிலேயே தயரிக்கப்பட்ட லட்டு தயார். சுமார் 15 உருண்டைகள் வரை கிடைக்கும்