உங்கள் விருப்பம்போல், அவரவர் சுவைக்கு ஏற்ப அளவுகளைக் கூட்டியும் குறைத்தும் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.
தேவையானவை:
பூண்டு _ ஒரு கிண்ணம் (இதை மூன்று பங்காகப் பிரித்துக்கொள்ளவும், மூன்றில் இரண்டு பங்கு அரைக்க & ஒரு பங்கு ஊறுகாயில் முழுதாக சேர்க்க)
புளி _ பெரிய கோலி அளவு
கடுகு _ ஒரு டீஸ்பூன்
வெந்தயம் _ ஒரு டீஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் _ தேவைக்கு
பெருங்காயத்தூள்
உப்பு
நல்லெண்ணெய் _ தேவைக்கு ஏற்ப. கொஞ்சம் அதிகமாக சேர்த்தாலும் சுவை அதற்கு ஏற்றார்போல் கூடுதலாகவே இருக்கும்.
செய்முறை:
பூண்டிதழ்களைத் தோலிரித்து நுனியை நறுக்கிவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
பூண்டு அதிகமாக இருந்து உரிக்கவும் கஷ்டமாக இருந்தால் பூண்டிதழ்களை ஒரு எவர்சில்வர் தட்டில் பரப்பிவிட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்தால் எளிதாக உரித்துவிடலாம்.
வெறும் வாணலியை அடுப்பிலேற்றி கடுகு, வெந்தயம் இரண்டையும் தனித்தனியாக கொஞ்சம் கவனமாகத் தீய்ந்து விடாமல் வறுத்துக்கொள்ளவும். தீய்ந்தால் ? …… ஊறுகாய் கசக்கும், அவ்வளவே !! தீய விட்டுடுவோமா என்ன 🙂
இவை ஆறியதும் கரகரப்பாகப் பொடித்துக்கொள்ளவும்.
புளி & இரண்டு பங்கு பூண்டு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
வாணலை அடுப்பிலேற்றி, எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மீதமுள்ள ஒரு பங்கு பூண்டு போட்டு வதக்கவும். சிறிது நேரம் வதக்கவும். வதக்கினால்தான் பூண்டு வேகும். பூண்டு நீளவாக்கில் நறுக்கியும் போடலாம்.
கறிவேப்பிலை புதிதாக இருந்ததால் சேர்த்திருக்கிறேன். விருப்பமிருந்தால் சேர்க்கலாம்.
இப்போது அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்துக் கிண்டவும். பூண்டின் பச்சை வாசம் போகும்வரை வதக்கவும். அவ்வளவு சீக்கிரம் போய்டுமா என்ன ! கொஞ்சம் விடாமல் கிண்டினால்தான் அடியில் பிடிக்காமல் இருக்கும்.
எண்ணெயும் பிரிந்து வரும். இப்போது மிளகாய்த்தூள் & உப்பு சேர்த்து உப்பு & காரம் சரிபார்த்து , வதக்கி,
பெருங்காயம் & பொடித்து வைத்துள்ள கடுகு & வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கிண்டி அடுப்பிலிருந்து இறக்கவும்.
நன்றாக ஆறிய பிறகு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
தயிர் சாதம், இட்லி & தோசை என எல்லாவற்றுக்கும் சூப்பரா இருக்கும்.