கருப்பரிசி வாங்கியாச்சு, சமைக்க வேண்டும், எப்படி சமைப்பது, இப்படி எதுவுமே தெரியாததால் நெட்டில் தேடிப்பார்க்கலாம் என்று தேடினால் இந்த அரிசி எளிதில் வேகாது, முதல் நாளிரவே ஊற வைத்தால்தான் அடுத்த நாள் வேக வைக்க முடியும் என்றெல்லாம் இருப்பதைப் பார்த்து கொஞ்சம் பயந்துதான் போனேன்.
ஏன்தான் வாங்கினோமோ என்றாகிவிட்டது. அங்கேயும்,இங்கேயுமாக சென்று படித்த பிறகுதான் தெரிந்தது அதில் அடங்கியுள்ள சத்துகளின் விவரம்.
சரியென ஒரு முடிவுக்கு வந்து முதல் நாள் சமைக்கும்போது காலையில் ஊறவைத்து மதியத்துக்கு சாதாரண அரிசி மாதிரியே வடித்துப் பார்த்தேன்.
அடுத்த நாள் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வேக வைத்து வடித்தேன்.
சாதாரண அரிசி மாதிரிதான் வேகிறது. வேக எடுத்துக்கொள்ளும் நேரத்தில் சாதாரண அரிசிக்கும் இதற்கும் எந்தவொரு வித்தியாசமும் தெரியவில்லை.
அதனால் இப்போதெல்லாம் ஊற வைப்பதெல்லாம் இல்லாமல் சாதாரண அரிசி மாதிரியேதான் செய்கிறேன்.
பிரஷர் குக்கரில் வைப்பதானால் ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் விட்டு ஆவி வரும்போது வெயிட் போட்டு தீயைக் குறைத்துவைத்து விசில் வராமல் ஒரு 10 லிருந்து 15 நிமிடத்திற்குள் நிறுத்திவிடுவேன்.
நீங்களும், சாதாரண அரிசியை எப்படி குக்கரில் வேக வைப்பீங்களோ அப்படியே வேகவைங்க.
இன்னும் எலக்ட்ரிக் குக்கரில் வேக வைக்கவில்லை.
கொஞ்சம் ஸ்டிக்கி ரைஸ் மாதிரி இருக்கிறது.சாதாரண அரிசி மாதிரியே சமைக்கலாம். சுவையில் ஒன்றும் குறையில்லை. அதனால தைரியமா வாங்குங்கோஓஓ!! யான் பெற்ற இன்பம் பெறுக…………இவ் வலையுலகம்!!
சாம்பார், கிள்ளிப்போட்ட அல்லது முழுமிளகாய் சாம்பார், ரஸம் இவற்றுடன் சூப்பரா இருக்கு.
அடுத்த பதிவில் இந்த சாதத்தை வைத்து வேறு ஏதாவது செய்துகொண்டு வருகிறேன், அதற்குள் கடைகளுக்கு விஜயம் செய்து கருப்பரிசியை வாங்கிவந்து சாதமாக்கி வைங்க!