காமாக்ஷிமாவின் செய்முறையைப் பார்த்து செய்த குறிப்பு இது. அசல் குறிப்பைக் காண இங்கே செல்லவும். அதே பொருள்கள்தான், ஆனால் ஒருசில மாற்றங்களுடன் செய்திருப்பேன்.
தேவையானவை:
சிறிய பிஞ்சு சௌசௌ _ 1
பச்சை வேர்க்கடலை _ ஒரு கைப்பிடி (காய்ந்ததாக இருந்தால் முதல் நாளே ஊறவைத்துக்கொள்ளவும்)
பச்சப்பருப்பு _ 2 டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி தழை
உப்பு _ தேவைக்கு
வறுத்து அரைக்க:
இட்லி உளுந்து _ ஒரு டீஸ்பூன்
மிளகு _ 5
சீரகம் _ ஒரு டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் _ 1
தேங்காய்ப் பூ _ 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
வேர்க்கடலையில் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பச்சைப்பருப்பை லேஸாக வறுத்துக்கொள்ளவும். வறுத்தால் நல்ல வாசனை வரும், இல்லையென்றாலும் பரவாயில்லை.
ஒரு பாத்திரத்தில் பச்சைப்பருப்புடன் மஞ்சள் தூள், பெருங்காயம், துளி விளக்கெண்னெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
வெறும் வாணலியை அடுப்பில் ஏற்றி வறுக்கக் கொடுத்துள்ளவற்றில் முதலில் உளுந்து போட்டு சிவந்ததும் மிளகு, காய்ந்தமிளகாய், சீரகம் என அடுத்தடுத்து போட்டு சூடேறியதும் எடுத்துவிட்டு அதே சூட்டிலேயே தேங்காய் பூவை போட்டு வறுத்துக்கொள்ளவும். இவை ஆறியதும் முதலில் தேங்காய் இல்லாமல் பொடித்துக்கொண்டு கடைசியில் தேங்காய் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பருப்பு முக்கால் பதம் வேகும்போது சௌசௌ, வெந்த வேர்க்கடலை இரண்டையும் சேர்த்து கிண்டிவிட்டு வேக வைக்கவும்.
காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, தேவைக்கு உப்பு போட்டு, கொதிக்கவிட்டு எல்லாம் சேர்ந்து கொதித்ததும், தாளிப்பதை தாளித்து, கூட்டில் கொட்டி கிண்டிவிட்டு, கொத்துமல்லி கிள்ளிப்போட்டு இறக்கவும்.
சாதத்துடன் சேர்த்தோ, அல்லது தொட்டுக்கொண்டோ சாப்பிட சூப்பரோ சூப்பர். முக்கியமாக உளுந்து வறுத்து சேர்த்ததால் நல்ல வாசனையுடன் அருமையாக இருந்தது.
குறிப்பை பகிர்ந்துகொண்ட காமாக்ஷி அம்மாவுக்கும் நன்றி.