சிவப்பரிசி பிடிகொழுக்கட்டை/Matta Raw Rice pidi kozhukkattai

எங்க வீட்டில் அடிக்கடி செய்யப்படும் திண்பண்டங்களில் கொழுக்கட்டையும் ஒன்று.விநாயகர் சதுர்த்திக்கு வாங்கிய சிவப்பரிசியில் சர்க்கரைப் பொங்கல், புட்டு,இடியாப்பம் எல்லாம் செய்தபிறகும் மீதமானதில் பிடிகொழுக்கட்டை செய்தேன்.நன்றாக இருந்தது.வாங்கினால் செய்து பார்க்கலாமே.

பல் முளைக்க ஆரம்பித்த குட்டிப் பிள்ளைகளுக்குச் செய்துகொடுத்தால்,அதன் இனிப்புச் சுவையினால்,கைகளில் வைத்துக்கொண்டு,விடாமல் அதைக் கடித்துக் குதப்பிக் கொண்டிருக்கும் அழகே அழகுதான்.

சாதாரண பச்சரிசிக்கும்,சிவப்பரிசியில் செய்வதற்கும் சுவையில் பெரிய வித்தியாசமில்லை.ஆனாலும் பச்சரிசியைவிட மென்மையாக இருக்கிற‌து. இடிப்பதும் எளிது.

தேவையானவை:

சிவப்புப் பச்சரிசி/மட்டரிசி_2 கப்
வெல்லம்_2 கப்
பச்சைப் பயறு_1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் கீற்று_1 (செய்த அன்று இல்லை என்பதால் சேர்க்கவில்லை)
எள்_1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்_1
உப்பு_துளிக்கும் குறைவாக(ருசிக்கு)

செய்முறை:

அரிசியைத் தண்ணீரில் ஊறவைத்து,நன்றாக ஊறியதும் நீரை வடித்துவிட்டு, மிக்ஸியில் போட்டு நைஸான,ஈரமாவாக இடித்துக்கொண்டு, இட்லிப் பானையில் வைத்து அவித்து,ஆறியதும் உதிர்த்துக்கொள்ள‌வும்.

பச்சைப்பயறை சிவக்க வறுத்து,ஆறியதும் அதனுடன் வேகுமளவு தண்ணீர் விட்டு கிள்ளுப்பதமாக வேகவைத்து வடித்துக்கொள்ளவும்.அல்லது வறுத்த பச்சைப்பயறை அப்படியேகூட சேர்த்துக்கொள்ளலாம்.

தேங்காய் போடுவதாக இருந்தால் அதனை சிறுசிறு பல்லாகக் கீறி வெறும் வாணலிலோ அல்லது நெய் சேர்த்தோ நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

அதேபோல் எள்ளையும் வெறும் வாணலில் சூடுவர வறுத்துக்கொள்ளவும்.ஏலக்காயைப் பொடித்துக்கொள்ள‌வும்.

அவித்து,உதிர்த்து வைத்துள்ள மாவுடன்,பச்சைப்பயறு,தேங்காய்,எள், ஏலக்காய்,உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது மூழ்குமளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்தவும்.வெல்லம் கரைந்ததும் தூசு&மண் போக வடித்துக்கொண்டு மீண்டும் அடுப்பிலேற்றவும்.

வெல்லம் கரைந்து நுரைத்துக்கொண்டு கொதிக்கும்போது மாவுக்கலவையில் சிறிதுசிறிதாக ஊற்றி,மத்தின் அடிப்பகுதியால் நன்றாகக் கிண்டவும்.

நன்றாகக் கிண்டிய பிறகு ஆறும்வரை வைத்திருந்து,ஆறியதும் படத்திலுள்ளதுபோல் செய்துகொள்ளவும்.

       

சிறு உருண்டை அளவிற்கு எடுத்து உள்ளங்கைகளில் வைத்து உருட்டி, உருண்டையாகவோ அல்லது உருண்டையை உள்ளங்கையில் வைத்து விரல்களால் அழுத்திப் பிடித்து,பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும். இவ்வாறே எல்லா மாவையும் செய்து கொள்ளவும்.

இட்லிப் பாத்திரத்தை அடுப்பிலேற்றி இட்லி அவிப்பதுபோலவே இட்லிக்கொத்தில் ஈரத்துணியைப்போட்டு அது கொண்டமட்டும் கொழுக்கட்டைகளை ஒன்றன்மீது ஒன்று ஒட்டாமல் அடுக்கி வைத்து வேகவைக்கவும்.

மாவு ஏற்கனவே வெந்திருப்பதால் கொழுக்கட்டை சீக்கிரமே வெந்துவிடும். கொழுக்கட்டையைக் கையால் தொட்டுப்பார்த்து,கையில் ஒட்டாமல் இருந்தால் எடுத்துவிடலாம்.

இவ்வாறே எல்லா கொழுக்கட்டைகளையும் வேகவைத்தெடுக்கவும்.சூடாகவோ அல்லது ஆறிய பிறகோ சாப்பிடலாம்.

அளவு குறைவாக (small quantity) இருப்பதாலோ என்னவோ,முதல் நாளைவிட அடுத்த நாள்தான் சூப்பராக இருக்கும்.

சிவப்பரிசிக் கொழுக்கட்டை/Rose matta raw rice kozhukattai

கொழுக்கட்டை இல்லாத விநாயகர் சதுர்த்தியா!இந்த முறை சிவப்பரிசியில் செய்துள்ளேன்.இளம் பிங்க் நிறத்தில் பார்க்கவே அழகாக இருந்தது.நீங்களும் செய்துபார்த்து,சுவைத்துவிட்டு வந்து சொல்லுங்க.

வெல்லம்,எள் இவற்றின் அளவை அவரவர் விருப்பம்போல் கூட்டிக் குறைத்துக்கொள்ள‌லாம்.

மேல் மாவிற்கு:

சிவப்புப் பச்ச‌ரிசி/மட்டரிசி_2 கப்
உப்பு_சிறிது

பூரணத்திற்கு:

வறுத்துத் தோலெடுத்த வேர்க்கடலை‍‍‍‍‍‍‍‍‍ ‍‍_1 கப்
பொடித்த வெல்லம்_ஒரு கப்
வறுத்த எள்_ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்_1

செய்முறை:

சிவப்பரிசியைத் தண்ணீரில் ஊறவைத்து,ஊறியதும் நீரை வடித்து விடவும்.பிறகு மிக்ஸியில் போட்டு ஈர மாவாக,நைஸாக‌ இடித்துக்கொள்ளவும்.

இட்லிப்பாத்திரத்தை அடுப்பிலேற்றி சூடாகியதும் ஒரு இட்லித்தட்டை அதில் வைத்து,அதில் ஈரத்துணியைப்போட்டு மாவைப் போட்டு மூடி அவிக்கவும்.

சுமார் 10 லிருந்து 15 நிமிடங்களில் மாவு வெந்துவிடும்.மாவின் அளவைப்பொறுத்து வேகும் நேரம் மாறுபடும். மூடியைத்திறந்து மாவைக் கையால் தொட்டுப்பார்த்து,கையில் மாவு ஒட்டவில்லை என்றால் ஒரு பெரிய தட்டில் மாவை எடுத்துக்கொட்டி,கட்டிகளில்லாமல் உடைத்துவிட்டு, சிறிது உப்பு சேர்த்து இளஞ்சூடான தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.பிசைந்த மாவை உருட்டி ஒரு ஈரத்துணியால் மூடி வைக்கவும்.

பிசைந்த மாவு கைகளில் ஒட்டக்கூடாது.ஒட்டினால் இன்னும் மாவு கொஞ்சம் வேகவேண்டும்.அதற்கு மாவில் சிறிது தண்ணீரைத் தெளித்து மைக்ரோ அவனில் இரண்டு தடவை 1/2 நிமிடத்திற்கு வைத்து எடுத்தால் சரியாகிவிதும்.இது சரியாக வேகவில்லை என்றால் மட்டுமே.

வேர்க்கடலை,வெல்லம்,எள்,ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் போட்டு  pulse ல் வைத்து இரண்டு சுற்றுசுற்றி  கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தால் தெரியும்.

பிசைந்த மாவில் சிறு எலுமிச்சை அளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து லேஸாக உருட்டி சிறு வட்டம் மாதிரி தட்டிக்கொண்டு,அதில் கொள்ளுமளவு கொஞ்சம் பூரணத்தை வைத்து படத்திலுள்ளதுபோல் மடித்து ஓரத்தை அழுத்திவிட‌வும்.

இதுபோல் எல்லாவற்றையும் செய்துகொள்ளவும்.அல்லது ஒரு தட்டு வேகும்போதே அடுத்த தட்டுக்கு செய்துகொள்ளலாம்.இட்லிப்பானயில் ஒரு தட்டை வைத்து அதில் ஈரத் துணியைப் போட்டு,ஒன்றன் மேல் ஒன்று ஒட்டாமல் அடுக்கி வேகவைக்கவும்.ஏற்கனவே மாவு வெந்துவிட்டதால் 5 லிருந்து 10 நிமிடத்திற்குள்ளாகவே வெந்துவிடும்.

       

மூடியைத் திறந்து தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டாமல் இருந்தால் வெந்துவிட்டது எனலாம்.இட்லித்தட்டை அப்படியே எடுத்துக்கொட்டாமல் ஒவ்வொன்றாக எடுத்துவைக்கவும்.

இப்போது சுவையான இந்த சிவப்பரிசிக் கொழுக்கட்டைகளை எடுத்துச் சாப்பிட வேண்டியதுதான்.இதுவும் அன்றே சாப்பிடுவதைவிட அடுத்த நாள் இன்னும் சுவையாக இருக்கும்.

பச்சரிசியில் செய்த வெள்ளை வெளேர் கொழுக்கட்டைக்கு இங்கே செல்லவும்.

ஆவியில் வேக வைக்குமுன்                                                                                   வெந்த பிறகு

                                   

பால் கொழுக்கட்டை

தேவையானவை:

பச்சரிசி_ஒரு கப்
பால்_ஒரு கப்
சர்க்கரை_தேவைக்கு
தேங்காய்ப்பூ_1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ_10 இதழ்கள் (விருப்பமானால்))
ஏலக்காய்_1
உப்பு_துளிக்கும் குறைவாக‌

செய்முறை:

பச்சரிசியை ஊறவைத்து,வடிகட்டி,மாவாக இடித்து,இட்லிப்பானையில் வைத்து அவித்து,ஆறியதும் உதிர்த்து வைக்கவும்.

பிறகு அதில் துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து,சிறிது சிறிதாக warm water  சேர்த்து கொழுக்கட்டை மாவு/இடியாப்ப மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்.

பிறகு படத்திலுள்ளதுபோல் சிறுசிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்கவும்.சிறிய அளவில் மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து முதலில் க்ளாக் வைஸாக உருட்டி, பிறகு நேராக உருட்டினால் வந்துவிடும்.முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.பிறகு எளிதாகிவிடும்.

இவ்வாறு உருட்டியவற்றை இட்லிப்பானையில் வைத்து அவிக்கவும்.இது சீக்கிரமே வெந்துவிடும்.

இதற்கிடையில் பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்து காய்ச்சவும்.காய்ந்ததும் சர்க்கரை,குங்குமப்பூ சேர்த்து கலக்கவும்.மிதமானத் தீயில் வைக்கவும்.

இப்போது வெந்த,சூடான‌ கொழுக்கட்டைகளை எடுத்து சூடான பாலில் போட்டு கலக்கிவிடவும்.ஒரு 5 நிமி கழித்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.இப்போது தேங்காய்ப்பூ,பொடித்த ஏலக்காய் சேர்க்கவும்.

கொழுக்கட்டை பாலில் வெந்து,ஊறி சுவையாக இருக்கும்.சூடாகவோ அல்லது ஆறியபிறகோ ஒரு பௌளில் எடுத்து ஸ்பூனால் சாப்பிடலாம்.

பிடி கொழுக்கட்டை

தேவை:

பச்சரிசி_2 கப்
வெல்லம்_2 கப்
பச்சைப் பயறு_1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப் பல்_1 டீஸ்பூன்(விருப்பமானால்)
எள்_1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்_1

செய்முறை:

பச்சைப் பயறை நன்றாக‌ சிவக்க வறுத்து ஊற வைக்கவும்.பச்சரிசியை ஊற வைத்து ஈர மாவாக இடித்துக் கொள்ளவும்.பின்பு மாவை  இட்லிப் பானையில் வைத்து அவித்தெடுக்கவும்.ஒரு பாத்திரத்தில் மாவைக் கொட்டி, கட்டி இல்லாமல் உதிர்த்து ஆற வைக்கவும்.எள்ளை வெறும் சட்டியில் போட்டு வறுத்து மாவில் கலக்கவும்.பச்சைப் பயறையும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மாவில் சேர்க்கவும்.தேங்காயை சிறிது நெய்யில் வறுத்து மாவில் போடவும். ஏலக்காயைத் தட்டிப் போடவும்.இவை எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.

அடுத்து வெல்லத்தை ஒரு கனமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் எடுத்து மாவில் ஊற்றி நன்றாகக் கிளறவும்.பாகுப் பதமெல்லாம் வேண்டாம்.எல்லாம் நன்றாகக் கலந்த பிறகு ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து விரல்களால் அழுத்தி மூடவும். படத்தில் உள்ளது போல் செய்துகொள்ளவும்.மேலும் உருண்டைகளாகவும் பிடித்துக்கொள்ளலாம்.இவ்வாறே எல்லாவற்றையும் செய்துகொண்டு இட்லிப் பானையில் வைத்து இட்லி அவிப்பது போல் அவிக்கவும். இனிப்பாகவும், வித்தியாசமாகவும் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

பூரணம் வைத்த‌ கொழுக்கட்டை

தேவை:

ப‌ச்சரிசி_2 கப்
உப்பு_சிறிது

பூரணம்:

வேர்க்கடலை‍‍‍‍‍‍‍‍‍ ‍‍_1 கப்
வெல்லம்_3/4 கப்
எள்_1 டீஸ்பூன்
ஏலக்காய்_1

செய்முறை:

அரிசியை நன்றாக ஊறவைத்து நீரை வடிய வைத்து மிக்ஸியில் போட்டு ஈர மாவாக இடித்துக்கொள்ளவும்.மாவை இட்லிப் பானையில் வைத்து அவித்துக் கொள்ளவும் (நன்றாக அவிந்த‌தா என்பதை அறிய மாவை கைகளால் தொட்டால் அது நன்றாக வெந்திருந்தால் பிசுபிசுவென கைகளில் ஒட்டாது.மாவு நன்றாக வேகவில்லை என்றால் கொழுக்கட்டை முழுதாக வராமல் உடைந்து போகும்) இப்போது மாவை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.

பூரணம் தயாரித்தல்:

வேர்க்கடலையை வறுத்து தோலியை அகற்றிவிட்டு அதனுடன் பொடித்த வெல்லம்,வறுத்த எள்,பொடித்த ஏலக்காய் சேர்த்து கரகரப்பாக இடித்துக்கொளளவும்.இப்போது பூரணம் தயார்.‌

ஆற வைத்த மாவில் சிறிது உப்பைப் போட்டு இளஞ்சூடான தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.

அடுத்து பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு எலுமிச்சை அளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து உருண்டையாக்கி பின்னர் ஒரு கிண்ணம் போல் செய்து அதில் கொஞ்சம் பூரணத்தை வைத்து படத்தில் உள்ளது போல் மடித்து ஓரத்தை அழுத்தி விடவும்.உருண்டை மாதிரியும் செய்யலாம்

வேகவைக்குமுன்

இதுபோல் எல்லாவற்றையும் செய்துகொண்டு இட்லிப்பானயில் ஒரு தட்டை வைத்து அதில் ஒன்றன் மேல் ஒன்று ஒட்டாமல் அடுக்கி வேகவைக்கவும்.

வெந்த பிறகு எடுக்கவும்.மூடியைத் திறந்து தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டாமல் இருந்தால் வெந்துவிட்டது எனலாம்.

பூரணத்தை அவரவர் விருப்பம் போல் செய்துகொள்ளலாம்.மாவை புதிதாக இடித்து செய்தால்தான் நன்றாக,சாஃப்டாக,சுவையாக இருக்கும்.