கடையில் வாங்கியதையுமா!

எனக்குப் பிடித்ததாக இருந்தால் (உணவு உட்பட) ஃபோட்டோ எடுத்து வைத்துக்கொள்வேன். அவ்வாறு எடுத்ததுதான் இந்த ஃபோட்டோ.

Doughnut__மைதாவில் செய்து எண்ணெயில் பொரித்தெடுத்து,சர்க்கரைப் பாகில் தோய்த்து…சொல்லும்போதே இனிப்பா இருக்கில்லையா!

போன சனிக்கிழமை மாலை Krispy Kreme லிருந்து ஒரு டஜன் டோனட் வாங்கிவந்தோம்.நிறைய வெரைட்டியில் கிடைக்கும். அதில் ஒருசிலவற்றை மட்டுமே நாங்க வாங்குவோம்.பார்க்கவே அழகா இருக்கில்ல!

ரசிச்சு & விரும்பி சமைக்க ஆரம்பித்த‌பிறகு நமக்குத்தான் பச்சைமிளகாய்கூட அழகாகத் தெரிகிறது,அதன் காரத்தைக்கூட வியந்து ‘என்ன ஒரு அருமையான காரம்’ என வியக்கத்தோன்றுகிறது.

எடையைக் குறைக்கனும்,இதை சாப்பிட்டால் அது வரும்,அதை சாப்பிட்டால் இது வரும்,BP எகிறும், கொலஸ்ட்ரால் கூடும் என்ற பிரச்சினையெல்லாம் இல்லாதவர்கள் ஒரு பிடிபிடிக்கலாம்.சூப்பரா இருக்கும்.

சரி என்றைக்காவது ப்ளாகிற்கு உதவுமே என்று சில படங்கள் எடுத்தேன்.எங்க வீட்டில் இவரும் பொறுமையாக இருந்தார், வேறு வழியில்லை,எடுத்து முடிக்கட்டுமென்று.

‘சரி தலைப்புக்கு வாங்க’ என்பது கேட்கிறது.சொல்லிவிடுகிறேன்.மகள் அன்று காலையிலிருந்து மாலைவரை பள்ளியில் band practice செய்து முடித்துவிட்டு வியர்க்க & விறுவிறுக்க வீட்டிற்கு வந்தாள்.பார்த்தாள் நான் ஃபோட்டோ எடுப்பதை. இதற்குமேல் பொறுக்க முடியாது என்பதுபோல் ” ப்ளாகுக்கு ஃபோட்டொ எடுக்கிறேன் பேர்வழின்னு அம்மா சமைப்பதைத்தான் கொடுக்க மாட்டாங்க,கடையில் வாங்கியதையுமா?”,என்று சொல்லிக்கொண்டே வந்து எடுத்துக்கொண்டாள்.அதுவும் சரிதானே.அதை முதல் படத்தில் பார்த்தால் தெரியும்.