ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக அதுவும் இந்த ஊரில் சுண்டைக்காயைப் பார்த்ததும் வாங்கி சாம்பார் வைத்து சாப்பிட்ட சந்தோஷத்தில் பதிவாகவும் போட்டுவிட்டேன் .
சின்ன வயசுல விரும்பி சாப்பிட்ட சாம்பாராச்சே !
இந்த சாம்பாருக்கு பெருஞ்சீரகம் சேர்த்து தாளிப்பதும், புளி சேர்க்காமல் செய்வதும்தான் வித்தியாசம்.
தேவையானவை :
துவரம் பருப்பு _ 1/4 கப்
சுண்டைக்காய் _ ஒரு கை
வெங்காயம்
தக்காளி
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள்
தேங்காய் பூ (விருப்பமானால்)
கொத்துமல்லி தழை
உப்பு
தாளிக்க :
எண்ணெய்
கடுகு
பெருஞ்சீரகம்
வெந்தயம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
துவரம்பருப்பை வேகவிடவும்.
வெங்காயம், தக்காளியை அரிந்துகொள்ளவும்.
பருப்பு நன்றாக வெந்து வரும் சமயத்தில் சுண்டைக்காயைத் தண்ணீரில் நன்றாக அலசிவிட்டு இரண்டிரண்டாக அரிந்து வெந்துகொண்டிருக்கும் பருப்பில் சேர்த்து வேகவிட்டு கடைந்துகொள்ளவும்.
சாம்பாருக்கான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி தாளித்துவிட்டு வெங்காயம், தக்காளியை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் இதில் கடைந்து வைத்துள்ள பருப்பு & சுண்டைக்காயை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு மூடி கொதிக்க விடவும்.
சாம்பார் நன்றாகக் கொதித்தபின் தேங்காய்ப் பூ, கொத்துமல்லி போட்டு இறக்கவும்.
சாம்பார் வைத்ததும் புகைப்படம் எடுக்க மறந்துபோய் கடைசியில் எடுத்ததால் ஹி ஹி 🙂 சாம்பாரின் அளவு குறைந்திருக்கிறது.
சாதம், இட்லி, தோசை என எல்லாவற்றிற்கும் கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சூப்பரா இருக்கும்.