கோதுமை மாவில் இடியாப்பமா !! நட்பூ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது முதலில் நானும் இப்படித்தான் ஆச்சரியமாகிப்போனேன். பிறகு அவர் சொன்னதை வைத்து முயற்சித்துப் பார்த்தேன். நன்றாக வந்தது. பதிந்து வைத்தால் யாருக்காவது உதவுமே என இங்கே எழுதுகிறேன்.
தேவையானவை :
கோதுமை மாவு _ 2 கப்
உப்பு _ ருசிக்கு ஏற்ப
செய்முறை :
இட்லி பாத்திரத்தை அடுப்பில் ஏற்றவும். கோதுமைமாவை ஒரு துணியில் முடிந்து தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இட்லி தட்டில் வைத்து இட்லி அவிப்பதுபோல் அவிக்கவும். நான் சுமார் 25 நிமிடங்களுக்கு அவித்து எடுத்தேன்.
(மாவு கொழகொழனு இருக்குமோ எந பயந்துகொண்டே எடுத்தேன். ஆனால் சூடான கெட்டியான கல்லு மாதிரி இருந்தது.)
அதை ஒரு தட்டில் கொட்டி சூடாக இருக்கும்போதே உதிர்த்துவிட்டு உள்ளங்கைகளால் புட்டு மாவு பிசைவது மாதிரி செய்தால் பொலபொலவென மாவு உதிர்ந்த்கொள்ளும். தேவையான உப்பை சேர்க்கவும்.
இப்போது கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சிறிது சிறிதாக மாவில் தெளித்து கெட்டியாக இடியாப்பம் பிழியும் பதத்திற்கு பிசையவும். ஒரேயடியாக தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டாம்.
(இடியாப்ப அச்சிலிருந்து மாவு வெளியே வருமா என சந்தேகத்துடனே பிழிந்தேன். கடகடவென அரிசிமாவு இடியாப்பம் மாதிரியே வந்தது.)
மீண்டும் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றவும். இடியாப்ப அச்சில் மாவை நிரப்பிக்கொள்ளவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு இட்லி தட்டில் ஈரத்துணியைப் போட்டு அதில் இடியாப்பத்தை பிழிந்து இட்லி அவிப்பதுபோல் அவித்து எடுக்கவும்.
சூடாக இருக்கும்போதே உதிர்த்துவிட்டு சர்க்கரை, தேங்காய் பூ, ஏலப்பொடி சேர்த்து சாப்பிடலாம்.
அல்லது விருப்பமான குருமாவுடன் சாப்பிடலாம்.
கோதுமை மாவில் பூரி, சப்பாத்தி இப்படியே சாப்பிடுவதற்கு பதில் இது கொஞ்சம் வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.