படத்திலுள்ள முளைகட்டிய பயறில் பாதியைத்தான் வேக வைத்தேன். எங்க வீட்டில் என்னைத் தவிர பச்சைபயறு சுண்டல் சாப்பிட ஆளில்லை. இரண்டு குட்டிக் கிண்ணங்களில் நிரப்பி வச்சிருக்கேன். முதலில் வரும் அதிர்ஷ்டசாலிக்கு ஒரு கிண்ணம் சுண்டல் வழங்கப்படும்.
நான் எப்போதும் முளைகட்டிய பச்சைபயறை அப்படியே சாப்பிட்டுவிடுவேன். இது எனக்கு ரொம்பவே பிடிக்கும். முதல் முறையாக காமாக்ஷிமாவின் முளைகட்டிய பச்சைபயறு சுண்டலை முயற்சித்திருக்கிறேன். நன்றாக இருந்தது. அதிலும் இட்லி தட்டில் வேக வைத்ததால் எந்த சத்துகளும் வீணாகாமல் இருப்பது பிடித்தது. முடிந்தால் நீங்களும் முயற்சிக்கலாமே!
அவர்கள் செய்த மாதிரியேதான் செய்தேன், ஆனால் தாளிப்பு மட்டும் செய்யவில்லை.
முழு பச்சைபயறை முதல் நாள் இரவு நன்றாகக் கழுவிவிட்டு,மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, நன்றாக ஊறியதும் அடுத்த நாள் இரவு ஒரு பௌளில், ஈரத்துணி அல்லது ஈர பேப்பர் டவலில் மூடி வைத்து, காலையில் பார்த்தால் எல்லா பயறும் முளைகட்டியிருக்கும். இதையே சுண்டலுக்கு பயன்படுத்திக்கொள்வோம்.
தேவையானவை:
முளைகட்டிய பச்சைபயறு _ ஒரு நபருக்கு ஒரு பிடி
உப்பு (நான் சேர்க்கவில்லை.விருப்பமானால் வேகவைக்கும்போது லேஸாக தூவிவிடவும்)
அலங்கரிக்க:
தேங்காய்ப் பூ
கேரட்
இஞ்சி துருவல்
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
கொத்துமல்லி
வறுத்த முந்திரி, வேக வைத்த கருப்பரிசி போன்று இன்னும் உங்களுக்கு விருப்பமானவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
காய்ந்தமிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
இட்லி அவிப்பதுபோலவே வேகவைக்க வேண்டும். இட்லி பாத்திரத்தை அடுப்பிலேற்றி, காய்ந்ததும் இட்லி தட்டை வைத்து, அதில் ஈரத்துணியைப் போட்டு, குழிகளில் பயறை நிரப்பி, மூடி வேக வைக்கவும். பயறு அதிகமாக இருந்தால் தட்டு முழுவதும் பரப்பி விடலாம்.
ஐந்தாறு நிமிடங்களிலேயே வெந்துவிட்டது.
வெந்த பயறை எடுத்துகொட்டி, தாளித்து, அலங்கரிக்கக் கொடுத்துள்ளவைகளைச் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
விருப்பமானால் ஒன்றிரண்டு துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.