என்னதான் தயிர், மோர் என கடையில் வாங்கினாலும் நாமே வீட்டில் தயாரிக்கும் தயிர்போல வராது. கூழ், பழைய சாதம் இவற்றில் சேர்த்து சாப்பிடும்போது ……… ஆஹா …… இன்னும் சுவை கூடுதலாக இருக்கும் ! குடிக்க நீர் மோர், தாளித்த மோர் , மோர்க் குழம்பு என கலக்கிடலாம். அடிக்கிற வெயிலுக்கும் இதமாக இருக்கும்.
தேவையானவை:
பால்
உறை
செய்முறை:
பாலை (ஹோல் மில்க் அல்லது 2% மில்க் எதுவாக இருந்தாலும்) நன்றாகக் கொதிக்கவிட்டு காய்ச்சி மிதமான சூடு வரும்வரை ஆறவைத்து உறையை ஊற்றி அல்லது உறை உள்ள கிண்ணத்தில் காய்ச்சிய பாலை ஊற்றி நன்றாகக் கலக்கி மூடி கதகதப்பான இடத்தில் வைக்கவும்.
இரவு வைத்து காலையில் பார்க்கும்போது பால், தயிராகி கெட்டியாக இருக்க வேண்டும்.
நம் ஊராக இருந்தால் காலையில் உறை ஊற்றி வைத்தால் மதியமே பால், தயிராகி சாப்பாட்டுக்குத் தயாராக இருக்கும்.
கீழே எங்க வீட்டுப் பால் தயிரானதைப் பார்ப்போமே !!
அடுப்பில் பால் காய்ந்து ஆறிக்கொண்டிருக்கிறது. தேவையான உறையை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துள்ளேன்.
மிதமான சூட்டில் உள்ள பாலை எடுத்து உறையுள்ள கிண்ணத்தில் ஊற்றி நன்றாகக் கலக்கி விட்டு நன்கு இறுக மூடி கதகதப்பான இடத்தில் வைக்கப் போகிறேன். நம் ஊராக இருந்தால் உறையை விட்டுவிட்டாலே போதும், கலக்கிவிட வேண்டிய அவசியமிருக்காது.
காலையில் கிண்ணத்தை எடுத்துத் ……….
திறந்து பார்த்தால் ……. வாவ் …… தயிர் தயாராயிடுச்சு.
பிறகென்ன ….. மதியம் சாதத்தில் போட்டு சாப்பிட வேண்டியதுதான் !