கேழ்வரகு புட்டு

கேழ்வரகு புட்டு இரண்டு வகைகளில் செய்வார்கள்.ஒன்று வேர்க்கடலை, எள், வெல்லம் சேர்த்தது.என்னுடைய ஃபேவரைட்டும்கூட. இதன் செய்முறைக்கு இங்கே நுழையவும்.மற்றொன்று தேங்காய்ப்பூ,சர்க்கரை சேர்த்த‌து.இதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையானவை:

கேழ்வரகு மாவு_ஒரு கப்
சர்க்கரை_தேவைக்கு
தேங்காய்ப்பூ_2 டீஸ்பூன்
ஏலக்காய்_1
உப்பு_ துளி அளவு

செய்முறை:

கேழ்வரகு மாவில் துளி  உப்பு போட்டுக் கலந்து (உப்பு சேர்ப்பது சுவைக்காகத்தான்),தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு இரண்டு கைகளாலும் மாவைப் பிசறினார்போல் கிளறவும்.

தண்ணீரைச் சேக்கும்போது கொஞ்சம் கவனமாகச் சேர்க்க வேண்டும். அதிகமாகிவிட்டால் மாவு புட்டுபோல் இல்லாமல் குழைந்துவிடும்.தண்ணீர் குறைவாக இருந்தால் புட்டு வேகாமல் வெண்மையாக இருக்கும்.

பிசைந்த மாவைக் மாவைக் கையில் எடுத்து பிடிகொழுக்கட்டைக்குப் பிடிப்பதுபோல் பிடித்தால் பிடிக்க வரவேண்டும்.பிறகு அதையே உதிர்த்தால் உதிரவும் வேண்டும்.இந்தப் பக்குவத்தில் மாவைப் பிசறிய பிறகு ஒரு 10 நிமி மூடி வைக்கவும்.

பிறகு எடுத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும்.இல்லையென்றால் பிசறிய மாவை மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து  ஒரு சுற்று சுற்றினால் கட்டிகளில்லாமல் நைஸாகிவிடும்.அதன்பிறகு இட்லி அவிப்பதுபோல் இட்லித் தட்டில் ஈரத்துணி போட்டு மாவை அவிக்கவும்.

ஆவி வந்து வாசனை வந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி, உதிர்த்துவிட்டு தேங்காய்ப்பூ,சர்க்கரை,ஏலத்தூள் சேர்த்துக் கிளறிவிடவும்.இப்போது சத்தான,சுவையான,இனிப்பான‌ கேழ்வரகு புட்டு சாப்பிடத்தயார்.

வெண்ணெய் புட்டு

            

வாயில் போட்டதும் வெண்ணெய் போல் வழுக்கிக்கொண்டு செல்வதால் இப்பெயர் வந்திருக்கலாம்.

என் அம்மா செய்வது மாதிரியே செய்ய வேண்டும் என்ற விருப்பத்தினால் கிண்ணத்தில் ஊற்றி கவிழ்த்து எடுத்தேன்.அவர் செய்வது போலவே வந்துவிட்டது.

பார்க்கவே அழகாக இருக்கும்.சுவையும்தான்!

இதனை தட்டுகளில் ஊற்றி ஆறியதும் துண்டுகள் போட்டும் சாப்பிடலாம்.

தேவையானவை:

பச்சரிசி_ஒரு கப்
கடலைப் பருப்பு_ஒரு டீஸ்பூன்
வெல்லம்_ஒரு கப்
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன் (விருப்பமானால்)
ஏலக்காய்_1 (பொடிக்கவும்)
உப்பு_துளிக்கும் குறைவாக(சுவைக்காக)

செய்முறை:

முதலில் பச்சரிசியைக் கழுவிக்கலைந்து ஊற வைக்கவும்.

நன்றாக ஊறியதும் மிக்ஸியில் போட்டு தேவையான நீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

மாவு நீர்க்க இருக்கவேண்டும்.கெட்டியாக இருக்கவேண்டுமென்பதில்லை.

ஒரு அடி கனமான வாணலியில் ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும்.

கடலைப்பருப்பைக் கழுவிவிட்டு வாணலியில் உள்ள தண்ணீரில் போடவும்.

த‌ண்ணீர் கொதி வந்ததும் அரிசிமாவில் துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து நன்றாகக் கரைத்துவிட்டு  கொஞ்சம் கொஞ்சமாக கொதிக்கும் தண்ணீரில் ஊற்றிக்கொண்டே கரண்டியால்  விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

கிண்டுவதற்கு  whisk  ஐப் பயன்படுத்தினால் கட்டிகளில்லாமல் வரும்.

மாவு எல்லாவற்றையும் ஊற்றிய பிறகும் விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

இல்லையென்றால் மாவு அடிப்பிடிக்கும்.மேலும் மாவு வேகாமல் உருண்டை உருண்டையாக இருக்கும்.

இப்போது மாவு வெந்து கொஞ்சம் கெட்டியாக இருக்கும்.

இப்போது வெல்லத்தை பொடித்து (கல்,மண்,தூசு இல்லாமல்)போட்டுக் கிளறிவிடவும்.

முதலில் கொஞ்சம் நீர்த்துக்கொள்ளும்.பிறகு வேக வேக இறுகி வரும்.

நன்றாக இறுகி வரும்போது தேங்காய்ப் பூ,ஏலக்காய் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.

இப்போது சுவையான வெண்ணெய் புட்டு தயார்.

இதனை  சூடாகவோ அல்லது ஆறிய பிறகோ சாப்பிடலாம்.

கேழ்வரகு புட்டு

தேவையானப் பொருள்கள்:

கேழ்வரகு மாவு_ஒரு கப்
வேர்க்கடலை_1/2 கப்
எள்_ஒரு டீஸ்பூன்
வெல்லம்_1/2 கப்பிற்கும் குறைவாக‌
உப்பு_துளி

செய்முறை:

முதலில் வேர்க்கடலை,எள் இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.

வேர்க்கடலை ஆறியபிறகு தோலெடுத்துவிட்டு அதனுடன் எள்ளையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி,அடுத்து வெல்லம் சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.மைய அரைக்க வேண்டாம்.சிறிது கொரகொரப்பாக இருக்கட்டும்.

அடுத்து கேழ்வரகு மாவில் துளி  உப்பு போட்டுக் கலந்து (உப்பு சேர்ப்பது சுவைக்காகத்தான்),தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு இரண்டு கைகளாலும் மாவைப் பிசறினார்போல் கிளறவும்.

தண்ணீரைக் கலக்கும்போது கொஞ்சம் கவனமாகச் சேர்க்க வேண்டும். அதிகமாகிவிட்டால் மாவு புட்டுபோல் இல்லாமல் கொழகொழப்பாகிவிடும். தண்ணீர் குறைவாக இருந்தால் புட்டு வேகாமல் வெண்மையாக இருக்கும்.ஒரு கப் மாவிற்கு 1/2 கப்பிற்கும் குறைவானத் தண்ணீர் தேவைப்படும்.

தண்ணீர் சேர்த்துப் பிசறிய பிறகு ஒரு 10 நிமி மூடி வைக்கவும்.பிறகு எடுத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும்.அதன்பிறகு இட்லி அவிப்பதுபோல் இட்லிக் கொத்தில் ஈரத்துணி போட்டு மாவை அவிக்கவும்.

ஆவி வந்து வாசனை வந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி வேர்க்கடலைக் கலவையைக் கலந்து விடவும். விருப்பமானால் துளி ஏலக்காய்த் தூள் சேர்க்கலாம்.இப்போது சத்தான,சுவையான கேழ்வரகு புட்டு தயார்.சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

பச்சரிசி புட்டு

புட்டு செய்யும் போது ஈர அரிசி மாவைத்தான் பயன்படுத்த வேண்டும்.ஈர அரிசி மாவை வீட்டிலேயே தயாரித்து செய்யும்போது புட்டு பூ போல் வரும்.

தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி_ஒரு கப்
வெல்லம்_3/4 கப்
ஏலக்காய்_1
உப்பு_ஒரு துளிக்கும் குறைவாக‌
முந்திரி_5
உலர் திராட்சை_10

செய்முறை:

முதலில் பச்சரிசியைத் தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.நன்றாக ஊறிய பிறகு நீரை வடித்து விடவேண்டும்.அரிசி ஈரமாக இருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் கோர்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.

ஏலக்காய்,வெல்லம் இவற்றைப் பொடித்துக்கொள்ளவும்.ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி,திராட்சையை வறுத்துக்கொள்ளவும்.

அரிசியை மிக்ஸியில் போட்டு ஈர மாவாக, niceஆக‌ இடித்துக்கொள்ளவும். அதை இட்லிப் பானையில் வைத்து இட்லி அவிப்பதுபோல் அவித்து எடுத்துக்கொள்ளவும்.ஆவி வெளியில் வரும்போது சிறிது நேரம் கழித்து நல்ல வாசனை வரும்.அப்போது மாவை இட்லிப் பானையில் இருந்து எடுத்து ஆற வைக்கவும்.நன்றாக வெந்த மாவு கைகளில் ஒட்டாது.ஆறிய பிறகு துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, கட்டிகளில்லாமல் மாவை உதிர்த்துக் கொள்ளவும். உதிர்த்த மாவை மிக்ஸியில் போட்டு   pulse   ல் வைத்து ஒரு சுற்று சுற்றினால் பூ போல் ஆகி விடும்.

இந்த மாவை மீண்டும் இட்லிப் பானையில் வைத்து அவிக்கவும்.மாவு ஏற்கனவே வெந்து விட்டதால் இந்த முறை சீக்கிரமே ஆவி வந்துவிடும். எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி ஏலத்தூள்,வெல்லம்,முந்திரி,திராட்சை சேர்த்துக் கிளறி சாப்பிடவேண்டியதுதான்.இப்போது நல்ல சுவையான , சத்தான, குழந்தைகளுக்குப் பிடித்தமான புட்டு தயார்.