கருப்பட்டி பொங்கல் & பால் பொங்கல்

 

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !!

IMG_3678

 

மகளின் ‘ஜேப்பனீஸ் குக்கிங்’கிற்காக ‘தாய் ஸ்டிக்கி ரைஸ்’ வாங்க ஆரம்பித்து, பிறகு அடிக்கடி வாங்கிவிடும்படி ஆகிவிட்டது. ஸ்டிக்கியாக இருக்கும் இது நல்ல வாசனையுடன் சுவையும் அலாதியாக இருக்கும். வெறும் சாதத்தையே இரண்டு பேரும் போட்டிபோட்டு சாப்பிட்டுவிடுவோம்.

இந்த அரிசியை வைத்து எளிய முறையில் ஒரு இனிப்புப் பொங்கல் செய்வோம். விருப்பமானால் நெய்யில் முந்திரி வறுத்து சேர்த்துக்கொள்ளுங்கள். ஏலக்காய் சேர்ப்பதானாலும் இற‌க்கும்போது பொடியாக்கி சேர்த்துக்கொள்ளுங்கள்.

என்னைக்கேட்டால் பனை வெல்லம் & தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் இது எதுவுமே தேவையில்லை என்பேன். நம் வீட்டில் உள்ள சாதாரண பச்சரிசியிலும் செய்யலாம்.

எங்க வீட்டில் பெரும் பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கலும், பால் பொங்கலும் செய்வாங்க. முதலில் சர்க்கரைப் பொங்கலைப் பார்ப்போம்.

தேவையானவை:

பச்சரிசி _ ஒரு கப்
பனைவெல்லம் _ 3/4 கப்
தேங்காய் பால் _ 3/4 கப்
உப்பு _ துளிக்கும் குறைவாக‌

செய்முறை:

அரிசியைக் கழுவிவிட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு ஐந்து அல்லது ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு ஊறிய அரிசியை தண்ணீருடனே குக்கரிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோ வைத்து குழையாமல் fluffy  யாக‌ வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பனைவெல்லத்தைப் பொடித்து தேங்காய்ப் பாலுடன் சேர்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு அடுப்பில் ஏற்றி வெல்லம் கரைந்து வந்ததும் மண் & தூசு இல்லாமல் வடிகட்டி அதை ஒரு வாணலில் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்துள்ள சாதத்தை இதில் கொட்டி விடாமல் கிண்டவும்.

எல்லாம் சேர்ந்து இறுகி வந்ததும் இறக்கவும். இதை அலங்கரிப்பது உங்கள் விருப்பம்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பால் பொங்கல்

தேவையானவை:

பச்சரிசி _ ஒரு கப்
பால் _ 1/4 கப்
வெல்லம்_சிறு துண்டு

செய்முறை:

ஒரு கப் அரிசி வேகுமளவு பாலும் தண்ணீருமாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அடுப்பில் ஏற்றவும். அரிசியைக் கழுவி வைத்துக்கொள்ளவும்.

பால் சேர்ப்பதால் தண்ணீர் பொங்கி வெளிவரும். அந்த நேரத்தில் அரிசியைப் போட்டுக் கிண்டிவிட்டு அது வேகும்வரை இடையிடையே கிண்டிவிட்டு வெந்ததும் இறக்கவும்.

சாமிக்குப் படைக்கும்போது சாதத்தின்மேல் சிறு துண்டு வெல்லம் வைத்து படைப்பாங்க‌. வெறும் பால் பொங்கலுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.

இனிப்பு வகைகள், சாதம், பொங்கல் வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 6 Comments »

கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல் / Black rice sweet pongal

pongal

நாளை ஆடி 18 ம் பெருக்குக்கு சூப்பர் சுவையில், கொஞ்சம் வித்தியாசமான சர்க்கரைப் பொங்கல் செய்து கொண்டாடுவோமே!!

தேவையானவை:

கருப்பரிசி _ ஒரு கப்
பச்சைப் பருப்பு _ 1/4 கப்
உப்பு _ துளிக்கும் குறைவாக‌ (சுவைக்காக‌)
வெல்லம் _ ஒரு கப்
பால்_1/4 கப்
தேங்காய்ப் பூ_2 டீஸ்பூன்
நெய்_2 டேபிள்ஸ்பூன்
முந்திரி _ 10
ஏலக்காய்_1

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சூடுவர வறுத்துக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.

பருப்புடன் கருப்ப‌ரிசியை சேர்த்துக் கழுவிவிட்டு, ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, பெயருக்கு துளிக்கும் குறைவாக உப்பு போட்டு, நன்றாக வேக வைக்கவும்.

நன்றாக வெந்த பிறகு பாலை விட்டு தீயை சிம்மில் வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி,வெல்லம் கரைந்ததும், மண் & தூசு போக வடிகட்டிவிட்டு, மீண்டும் அடுப்பில் ஏற்றி வெல்லத் தண்ணீர் நன்றாக நுரைத்துக்கொண்டு வரும்போது எடுத்து சர்க்கரைப் பொங்கலில் கொட்டி நன்றாகக் கிளறிவிடவும்.

பிறகு தேங்காய்ப் பூ, பொடித்து வைத்துள்ள ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.

அடுத்து நெய்யில் முந்திரியை வறுத்து பொங்கலில் சேர்த்துக் கிளறிக்கொடுத்து இற‌க்கவும். இப்போது சுவையான கருப்பரிசி பொங்கல் தயார்.

pongal

கடைசியில் ஒரு சிறு குறிப்பு:

நெய்யில் முந்திரியை வறுத்துக்கொண்டு அதிலேயே பொங்கலைக் கொட்டிக் கிளறி எடுத்தால் இன்னும் சுவையாக இருக்கும். அது வேறொன்றுமில்லை, நெய் முழுவதும் சேர்வதால் சூப்பர் சுவையுடன் இருக்கும்.

ஓட்ஸ் பொங்கல் / Rolled Oats pongal

oats pongal

பொங்கலில் மிளகை ஒன்றும்பாதியுமாக பொடித்துப் போட்டால் சாப்பிட்டு முடித்தபிறகு தட்டில் மிளகு மீதமாகி இருப்பதைத் தவிர்க்கலாம்.இஞ்சியையும் அப்படியே வெளியே எடுத்துப் போடாத அளவிற்கு தட்டிப்போடலாம்.

இந்தப் பொங்கலை நான் எழுதியுள்ள மாதிரியும் செய்யலாம்.இல்லாவிடில் பச்சைப்பருப்பு+ஓட்ஸிற்கும் சேர்த்து தண்ணீர் ஊற்றி அதில் பச்சைப்பருப்பை வேகவைத்து,வெந்ததும் ஓட்ஸைப்போட்டுக் கிளறிக்கொடுத்து இறக்கும்போது,தாளிப்பை செய்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கினால் இன்னும் நல்ல வாசனையாக இருக்கும்.

தேவையானவை:

வெறும் வாணலில் வறுத்துப் பொடித்த ஓட்ஸ் பொடி_2 கப்
பச்சைப் பயறு_1/4 கப்பிலிருந்து 1/2 கப்பிற்குள்
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நெய்_இரண்டுமூன்று டீஸ்பூன்.
மிளகு_சிறிது
சீரகம்_கொஞ்சம்
முந்திரி_10
இஞ்சி_சிறு துண்டு
கறிவேப்பிலை_ஒரு கொத்து

செய்முறை:

பச்சைப்பயறை சிவக்க வறுத்து,அது வேகுமளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள்தூள்,பெருங்காயம்,விளக்கெண்ணெய் (அ) நல்லெண்ணெய் விட்டு ரொம்பவும் குழையாமல் வேகவைக்கவும்.பச்சைப்பருப்பு வேகத்தான் நேரமெடுக்கும்.அது வெந்துவிட்டால் பொங்கல் நிமிடங்களில் ரெடியாகிவிடும்.

அது வெந்துகொண்டிருக்கும்போதே இஞ்சியைத் தட்டிவைத்துக்கொள்ளவும். மிளகையும் பொடித்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி,நெய்யை விட்டு சூடாகியதும் தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்துவிட்டு ஒரு பங்கு ஓட்ஸ்பொடிக்கு இரண்டு பங்கு என தண்ணீர் விடவும்.எனவே இரண்டு கப் ஓட்ஸிற்கு 4 கப் தண்ணீர் ஊற்றி,தேவையான உப்பும் போட்டு,கொதிக்கும்வரை மூடி வைக்கவும்.

பொங்கல் கொஞ்சம் மஞ்சள் நிறத்தில் வேண்டுமானால் சிறிது மஞ்சள்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அல்லது அதற்கு முன்பாகவேகூட வெந்த பச்சைப்பருப்பை சேர்த்து விடலாம்.

எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கொதித்ததும் ஓட்ஸை தூவியவாறு கொட்டிக்கொண்டே விடாமல் கிண்டிவிடவும். கிண்டுவதற்கு whisk ஐப் பயன்படுத்தினால் கட்டிகளில்லாமல் வரும்.

ரவையைப்போல ஓட்ஸும் சீக்கிரமே வெந்துவிடுமாதலால் மிதமானத் தீயில் ஒன்றிரண்டு தரம் கிளறிக்கொடுத்து தீயை நிறுத்தி மூடிவிடவும்.

இப்போது சுவையான,சத்தான,வாசனையுள்ள,கொஞ்சம் கொழகொழப்பில்லாத,எளிதாக செய்யக்கூடிய ஓட்ஸ் பொங்கல் தயார்.

oats pongal

ஆறஆற பொங்கல் கெட்டியாகும்.சூடாகவோ அல்லது மிதமான சூட்டிலோ தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.சாம்பாருடனும் நன்றாக இருக்கும்.

ஓட்ஸ்_வறுத்துப் பொடித்தல்

oats oats

 

சாப்பாட்டில் ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு தானியம் எடுத்துக்கொண்டால் உடலுக்கு நல்லது என மருத்துவர் சொல்வதால் ஏதாவது ஒருவேளை உணவுக்கு ஓட்ஸைப் பயன்படுத்தலாமே.

இது கொஞ்சம் கொழகொழப்பு தன்மையுடையது.முதன்முதலில் சாப்பிட்டபோது பிடிக்கவே பிடிக்காது.கடகடவென மருந்து விழுங்குவதுபோல் சாப்பிட்டு விடுவேன்.எனக்கே இப்படி என்றால் வீட்டில் உள்ளவர்கள் நிலை,இவர்கள் தொடவேமாட்டார்கள்.

ஒருமுறை லேஸாக வறுத்துப் பொடித்து உப்புமா செய்தேன்.வறுத்ததால் நல்ல வாசனையுடன் சுவை கூடுதலாகவும் இருந்தது.கொஞ்சம் கொழகொழப்பும் குறைவாக இருந்தது.அன்றிலிருந்து ஒரு பெரிய கண்ணாடி பாட்டில் அளவிற்கு வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு கஞ்சி,பொங்கல்,உப்புமா,கிச்சடி என எல்லாமும் செய்வேன்.கொஞ்சம் கூடுதலாக மாவாக்கிக் கொண்டால் இட்லி,தோசை,அடை என எல்லாமும் செய்யலாம்.இப்போது எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த தானியமாக வலம் வந்துகொண்டிருக்கிறது.

படத்தில் உள்ளதுபோல் உள்ள தட்டையான ஓட்ஸை (Rolled oats) வெறும் வாணலில் போட்டு மிதமானத் தீயில் லேஸாக சிவந்து, சூடேறும்வரை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்றுகள் சுற்றி பொடித்துக்கொள்ளவும்.மாவாக்க‌ வேண்டுமானால் மேலும் இரண்டு சுற்றுகள் சுற்றினால் மாவாகிவிடும்.

நீங்களும்போய் ஓட்ஸை வறுத்து,பொடிச்சு வையுங்க.அடுத்த பதிவில் இந்த பொடித்த ஓட்ஸை வைத்து வெண்பொங்கல் செய்வதைப் பார்க்கலாம்.

அவல் சர்க்கரைப் பொங்கல்/Aval sakkarai pongal

இது அவசரத்திற்கு எளிதில் செய்யக்கூடியது. இதற்கு ஆகும் நேரமும் குறைவு.சுவையோ அதிகம். சத்தானதும்கூட.

இதில் நான் வறுத்த அவலை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி ஒன்றும் பாதியுமாக இடித்துப் போட்டுள்ளேன்.அவரவர் விருப்பமாக முழு அவலைப் போட்டும் செய்யலாம்.

தேவையானப் பொருள்கள்:

அவல்_ஒரு கப்
பச்சைப் பயறு_1/4 கப்
வெல்லம்_ஒரு கப்
குங்குமப்பூ_சிறிது
பால்_1/2  கப்
ஏலக்காய்_1
நெய்_1/4 கப்
முந்திரி_10
திராட்சை_10

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

அதே வாணலில் அவலைப் போட்டு சூடேறும்வரை வறுத்துக்கொள்ளவும்.

பச்சைப் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அது வேகும் அளவிற்கு தண்ணீர் விட்டு மலர வேக வைக்கவும்.

பருப்பு வெந்ததும் அதில் ஒரு பங்கு அவலுக்கு இரண்டு பங்கு பாலும், தண்ணீருமாகக்  கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும்.

கொதி வந்ததும் அவலைக்கொட்டிக் கட்டித்தட்டாமல் நன்றாகக் கிளறி மிகவும் குறைவானத் தீயில் மூடி வேகவைக்கவும்.அவல் சீக்கிரமே வெந்துவிடும்.

சிறிது சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கி பொங்களில் சேர்த்துவிடவும்.

இதற்கிடையில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி இளம் பாகு பதம் வந்ததும் பொங்கலில் கொட்டிக் கிளறவும்.

ஏலக்காயைத் தட்டிப் போடவும்.

ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரி,திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து இவற்றை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கவும்.

சர்க்கரைப் பொங்கலுடன் புளிசாதம், உருளைக் கிழங்கு வறுவல் சேர்த்து சாப்பிட காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.

சேமியா பொங்கல்

சேமியா பொங்கலுக்கு ரவை சேர்த்துத்தான் செய்யவேண்டுமென்பதில்லை.தனி சேமியாவில் செய்தாலும் சுவையாக இருக்கும்.

உப்பமா என்றாலே சிலருக்கு வெறுப்பாக இருக்கும்.அதிலும் சேமியா,ரவை உப்புமா என்றால் கேட்கவே வேண்டாம். உப்புமாவிற்கு பதிலாக இவற்றை வைத்து பொங்கலாக செய்யும்போது அதிலும் நெய்யில் மிளகு,சீரகத்தை வறுக்கும் வாசனை வந்தவுடன் உடனே சாப்பிடத்தோணும்.

தேவையானப் பொருள்கள்:

சேமியா_2 கப்
ரவை_1/2 கப்
பச்சைப் பருப்பு_1/2 கப்
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நெய்_2 டீஸ்பூன்
மிளகு_1  டீஸ்பூன்
சீரகம்_1  டீஸ்பூன்
முந்திரி_10
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

அதே வாணலியில் சேமியாவையும்,ரவையையும் தனித்தனியாக‌ சூடு வர வறுத்துக்கொள்ளவும்.

அடுத்து பச்சைப் பருப்பை நன்றாகக் கழுவிவிட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.

ஒரு  வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து, ஒரு பங்கு சேமியா & ரவைக்கு  இரண்டு (அ) இரண்டேகால் பங்கு தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு கொதி நிலை வரும்வரை மூடி வைக்கவும்.

பச்சைப்பருப்பு ஏற்கனவே வெந்திருப்பதால் அதற்கு சேர்த்து தண்ணீர் ஊற்றவேண்டாம்.

தண்ணீர் கொதி வந்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பச்சைப் பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.

மீண்டும் ஒரு கொதி வந்ததும் சேமியாவை கொஞ்சம்கொஞ்சமாக சேர்த்து ,கட்டித் தட்டாமல் கிளறிவிட்டு அது வேகும் வரை மூடி வைக்கவும்.

சேமியா வெந்ததும் ரவையைச் சிறிதுசிறிதாகக் கொட்டி,கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

ரவை முழுவதையும் சேர்த்த பிறகு,நன்றாகக் கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி,மூடி வைக்கவும்.இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும்.

இப்போது சேமியா பொங்கல் சாப்பிடத் தயாராக உள்ளது.


இது நல்ல வாசனையாகவும்,சுவையாகவும்,எளிதில் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.

இதற்கு தேங்காய் சட்னிதான் மிகப் பொருத்தம்.சாம்பாரும் நன்றாக இருக்கும்.

ஓட்ஸ் பொங்கல்(steel cut oats )/Oats pongal

சாதாரன பொங்கல் போல் அல்லாமல் ஓட்ஸ் பொங்கல் செய்யும்போது பச்சைப் பருப்பின் அளவைக் கொஞ்சம் கூட்டி செய்தால்தான் நன்றாக இருக்கும்.

தேவையானப் பொருள்கள்:

ஓட்ஸ்_2 கப்
பச்சைப் பருப்பு_3/4 கப்
மஞ்சள்தூள்_1/4 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நெய்_2 டீஸ்பூன்
மிளகு_1  டீஸ்பூன்
சீரகம்_1  டீஸ்பூன்
முந்திரி_10
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை_கொஞ்சம்

செய்முறை:

முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பை வாசம் வர வறுத்துக்கொள்ளவும்.

பிறகு குக்கரில் (அ) ஒரு பாத்திரத்தில் பருப்பு வேகும் அளவு தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

பருப்பு முக்கால் பதம் வெந்ததும் அதில் ஒரு பங்கு ஓட்ஸுக்கு இரண்டரை பங்கு தண்ணீர்  என 5 கப் தண்ணீர் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

கொதி வந்ததும் ஓட்ஸைப் போட்டு,தேவையான உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு மூடி வைக்கவும்.

இரண்டும் நன்றாகக் குழைந்து,வேகும் வரை மிதமானத் தீயில் வைக்கவும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு சூடுபடுத்தி,அதில் மிளகு(ஒன்றிரண்டாகப் பொடித்து),சீரகம்,இஞ்சி,முந்திரி, கறிவேப்பிலை தாளித்துப் பொங்களில் கொட்டிக் கிளறி இறக்கவும்.

அல்லது தாளித்த பிறகு பொங்கலை வாணலியில் கொட்டிக் கிளறி இறக்கலாம்.இந்த முறையில் செய்யும்பொழுது மிகவும் நன்றாக இருக்கும்.

இதற்கு தேங்காய் சட்னி,சாம்பார் இவை மிகப்பொருத்தமாக இருக்கும்.

ரவை பொங்கல்

தேவையானப் பொருள்கள்:

ரவை_2 கப்
பச்சைப் பருப்பு_1/2 கப்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நெய்_2 டீஸ்பூன்
மிளகு_1  டீஸ்பூன்
சீரகம்_1  டீஸ்பூன்
முந்திரி_10
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

அதே வாணலியில் ரவையைப் போட்டு சூடு வர வறுத்துக்கொள்ளவும்.

அடுத்து பச்சைப் பருப்பை நன்றாகக் கழுவிவிட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.

மீண்டும் வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து,ஒரு கப் ரவைக்கு இரண்டேகால் கப் தண்ணீர் என ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.

பச்சைப்பருப்பு ஏற்கனவே வெந்திருப்பதால் அதற்கு சேர்த்து தண்ணீர் ஊற்றவேண்டாம்.

தண்ணீர் கொதி வந்ததும் தேவையான உப்பு,வேக வைத்த பச்சைப் பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.

மீண்டும் ஒரு கொதி வந்ததும் ரவையை சிறிதுசிறிதாகக் கொட்டி,கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

ரவை முழுவதையும் சேர்த்த பிறகு,நன்றாகக் கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி,மூடி வைக்கவும்.இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும்.

நீண்ட நேரம் அடுப்பிலேயே இருந்தால் ரவை பொங்கலுக்குப் பதில் ரவை உப்புமாவாக மாறிவிடும்.

இப்போது ரவை பொங்கல் தயார்.

இது நல்ல வாசனையாகவும்,சுவையாகவும்,எளிதில் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.

இதற்கு தேங்காய் சட்னிதான் மிகப் பொருத்தம்.சாம்பாரும் நன்றாக இருக்கும்.

கோதுமை ரவை பொங்கல்/Wheat rava pongal

தேவையானப் பொருள்கள்:

கோதுமை ரவை_2 கப்
பச்சைப் பருப்பு_1/2 கப்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நெய்_2 டீஸ்பூன்
மிளகு_ஒரு டீஸ்பூன்
சீரகம்_ஒரு டீஸ்பூன்
முந்திரி_10
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை

செய்முறை:

இதன் செய்முறையும் சாதாரண வெண்பொங்கல் செய்வது மாதிரிதான்.

முதலில் பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க, வாசம் வரும்வரை வறுத்து ஆறியதும் கழுவிவிட்டு,தேவையானத் தண்ணீர்விட்டு,மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.

பாதி வெந்த நிலையில் கோதுமை ரவையைக் கழுவிவிட்டு (வறுக்க வேண்டாம்)ஒன்றுக்கு மூன்று அல்லது அதற்கும் மேல் தண்ணீர் விட்டு,உப்பு போட்டு பருப்புடன் சேர்த்து வேகவிடவும்.இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து குழைய வேக வேண்டும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து பொங்கலில் கொட்டிக் கிளறி இறக்கவும்.அல்லது தாளிப்பு முடிந்ததும் பொங்கலை வாணலியில் கொட்டிக் கிளறி இற‌க்கலாம்.

பொங்கலுக்கு தேங்காய் சட்னி அல்லது சாம்பார் நன்றாக இருக்கும்.

சர்க்கரைப் பொங்கல்

சூடாக இருக்கும்போது கொஞ்சம் தளர்வாக இருக்கும்.    அதுவே     ஆறியதும்      இறுகிவிடும்.