படத்திலுள்ள வடகம் ஊருக்கு போனசமயம் வீட்டிலிருந்து எடுத்து வந்தது.
வடகம் _ இது சாம்பார்,காரக்குழம்பு,காய் சேர்த்து செய்யப்படும் புளிக்குழம்பு,வத்தக்குழம்பு,முக்கியமாக மீன் குழம்பு,கருவாட்டுக்குழம்பு இவற்றிற்கு தாளிக்கப் பயன்படுத்துவார்கள்.
நாம் சாதாரணமாக குழம்பு செய்யும்போது எண்ணெயில் கடுகு,உளுந்து,சீரகம் என தாளிப்போம்.அதற்கு பதிலாக இதில் சிறிதளவு போட்டு தாளித்துவிட்டு மற்ற செய்முறைகளை அப்படியே செய்ய வேண்டியதுதான்.இதை நல்லெண்ணெயில் தாளிக்கும்போதே வாசனை கமகமவென்று வரும்.
வடகத்தைக் காய வைக்கும்போது உருண்டகளாகத்தான் காய வைப்பார்கள்.இங்கெல்லாம் அது வேலைக்காகாது. சாதாரணமாக உதிரியாகக் காய வைத்தாலே நன்றாகக் காய ஒரு வாரம் ஆகிவிடும்.
இதற்கு சின்ன வெங்காயத்தைத்தான் பயன்படுத்த வேண்டும்.
தேவையானப் பொருள்கள்:
சின்னவெங்காயம்_ஒரு கிலோ
முழு பூண்டு_2 அல்லது 3
கடுகு_100 g
உளுந்து_100g
சீரகம்_100g
வெந்தயம்_100g
மஞ்சள் தூள்_சிறிது
கறிவேப்பிலை_ஒரு கொத்து
உப்பு_1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் (அ) விளக்கெண்ணெய்_1/2 டீஸ்பூன்
செய்முறை:
சின்ன வெங்காயத்தைக் கழுவி துடைத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அல்லது மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து இரண்டு சுற்று சுற்றினால் போதும்.தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டாம்.ஊரில் என்றால் உரலில் போட்டு இடித்துவிடுவார்கள்.
பூண்டு பற்களை தோல் எடுக்காமல் அப்படியே முழுதாக சேர்க்க வேண்டும். அவ்வாறு போட்டால் காய வைப்பது சிரமம்.எனவே பூண்டுப்பற்களை தட்டிப் போடலாம்.
பிறகு வெங்காயத்தை ஒரு மண் அல்லது பீங்கான் பாத்திரத்தில் எடுத்து வைத்து அதனுடன் தேவையானப் பொருள்கள் அனைத்தையும் சேர்த்து (எண்ணெய் நீங்களாக) கையால் நன்றாகப் பிசையவும்.
பிசைந்ததை இரண்டு நாட்களுக்கு இறுக்கமாக மூடி வைக்கவும்.
மூன்றாவது நாள் ஒரு அகலமான தட்டில் கொட்டி பரப்பிவிட்டு வெய்யிலில் காய வைக்கவும்.
மாலை மீண்டும் அதே பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இதேபோல் அடுத்தடுத்த நாட்களும் காய வைக்கவும்.
வெங்காயம்,பூண்டு உட்பட எல்லா பொருள்களும் ஈரமில்லாமல் நன்றாகக் காயும் வரை தினமும் காயவைக்க வேண்டும்.
நன்றாகக் காய்ந்த பிறகு கடைசி நாள் எண்ணெய் விட்டுக் கிளறி மீண்டும் ஒருமுறை காயவைத்து, மாலை ஆறியதும் எடுத்து சுத்தமான பாட்டிலில் கொட்டி வைக்கவும்.
வடகம் நன்றாகக் காய்ந்த பிறகு முதல் படத்தில் இருப்பது மாதிரி வரவேண்டும.