உளுந்து வடை

தேவையானப் பொருள்கள்:

உடைத்த கறுப்பு உளுந்து_1 கப்

புழுங்கல் அரிசி_1 கப்

சின்ன வெங்காயம்_5 லிருந்து 10

பச்சை மிளகாய்_2

இஞ்சி_ஒரு சிறிய துண்டு

பெருஞ்சீரகம்_1/2 டீஸ்பூன்

பெருங்காயம்_ஒரு துளி

கறிவேப்பிலை_5

கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

உப்பு_தேவையான அளவு

கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

உளுந்து,அரிசி இரண்டையும் தனித்தனியாக நீரில் ஊற வைக்கவும்.உளுந்து நன்றாக ஊறியதும்(சுமார் 3 மணி நேரம்) தோலைக் கழுவிக் களைந்து நீரை வடிகட்டி விட்டு ஃபிரிட்ஜில் சுமார் 1/2 மணி நேரத்திற்கு வைக்கவும். பிறகு வெளியில் எடுத்து கிரைண்டரில் போட்டுத் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். இடையிடையே தண்ணீரைத் தொட்டுத்தொட்டுத் தள்ளி விட வேண்டும். குறைந்தது 1/2 மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.கெட்டியாக இருக்க வேண்டும்.நன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து நன்கு அடித்து கொடப்பி வைக்க வேண்டும்.அப்போதுதான் உளுந்து மாவு அமுங்காமல் இருக்கும்.

அடுத்து  அரிசியைக் கழுவிக் களைந்து  அதே கிரைண்டரில் போட்டு தண்ணீர் நிறைய ஊற்றாமல் கெட்டியாக மைய அரைக்கவும்.அதனுடன் பெருஞ்சீரகம் சேர்த்து அரைக்கவும்.நன்றாக அரைத்த பிறகு வழித்து உளுந்து மாவுடன் சேர்த்துப் பிசையவும்.

இப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் கொட்டி,பெருங்காயத்தையும்,தேவையான உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும்.ஒரு சிறிய கிண்ணத்தில் புளித்தண்ணீர் (அ) வெல்லம் கலந்த தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.இது வடை நன்கு சிவந்து வருவதற்குத்தான்.

எண்ணெய் சூடானதும் இரண்டு உள்ளங்கைகளிலும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு,மாவில் இருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலைத் தண்ணீரில் நனைத்து மாவின் நடுவில் சிறு ஓட்டைப் போட்டு எண்ணெயில் போடவும்.மாவை மற்ற வடைகள் போல் தட்டியோ அல்லது அமுக்கியோ போடக் கூடாது.எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் போடலாம்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவும்.இது வெளியில் மொறுமொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.

இவ் வடைக்கு தேங்காய் சட்னி,சாம்பார்,பாயசம் இவை பக்க உணவாகப் பரிமாரலாம்.

குறிப்பு:

வீட்டில் சிறு பிள்ளைகள் இருந்தால் இஞ்சி,பச்சை மிளகாயை அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்.அவர்கள் ஒருமுறை வடையில் உள்ள மிளகாயைக் கடித்து விட்டால் மீண்டும் அதைச் சாப்பிடத் தயங்குவார்கள்.எனவே அரிசியுடன் சேர்த்து அரைத்து விடலாம்.

மரவள்ளிக்கிழங்கு வடை

தேவையானப் பொருள்கள்:

மரவள்ளிக்கிழங்கு _1

புழுங்கள் அரிசி_1/2 கப்

சின்ன வெங்காயம்_10

பச்சை மிளகாய்_2

கறிவேப்பிலை_10  இலைகள்

கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

பெருங்காயம்_சிறிது

உப்பு_தேவையான அளவு

எண்ணெய்_பொரிப்பதற்கு தேவையான அளவு


செய்முறை:

அரிசியைத் தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.கிழங்கை கேரட் துருவியில் துருவி வைக்கவும்.அரிசி நன்றாக ஊறியதும் கிரைண்டரில் போட்டு கெட்டியாக மைய அரைத்துக்கொள்ளவும்.கடைசியில் துருவிய கிழங்கையும் அதனுடன்  சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.வடை மாவு பதத்தில் இருக்கட்டும்.மாவை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அடுத்து வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை இவற்றைப் பொடியாக‌  நறுக்கி மாவுடன் கலந்துகொள்ளவும்.மேலும் உப்பு,பெருங்காயம் இவற்றையும் போட்டு நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.எண்ணெய் சூடேறியதும் மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவிற்கு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடைபோல் தட்டி எண்ணெயில் போடவும்.இவ்வாறு எண்ணெய் கொண்டமட்டும் போட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறு பக்கம் வெந்ததும் எடுக்கவும்.உருண்டையாக உருட்டி போண்டா மாதிரியும் போடலாம்.அல்லது வடையின் நடுவில் துளையிட்டும் போடலாம்.இதை சூடாக சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும்.

மசால் வடை (கடலைப் பருப்பு வடை)

 

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு_2 கப்புகள்
சின்ன வெங்காயம்_ 10
இஞ்சி_ 1 துண்டு
பூண்டு_ 2பற்கள்
பச்சை மிளகாய்_2
பெருஞ்சீரகம்_1/4 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_1 ஈர்க்கு
கொத்துமல்லி தழை_1/4 கட்டு
உப்பு_தேவையான அளவு

 செய்முறை:

முதலில் கடலைப் பருப்பை  2 மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.நன்றாக ஊறிய பிறகு கழுவி கலந்து நீரை வடித்து விட வேண்டும் கிரைண்டர் அல்லது மிக்ஸியில்  கடலைப் பருப்பை போட்டு அத்துடன் இஞ்சி,பெருஞ்சீரகம்,பச்சை மிளகாய்,பூண்டு இவற்றைப் போட்டு தண்ணீர் விடாமல் அரைக்க வேண்டும்.மிகவும் மைய அரைக்க வேண்டாம்      பிறகு மாவை வ்ழித்தெடுக்கவும்.  இப்பொழுது வெங்காயம கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை இவற்றை ப் பொடியாக அறிந்து  கொள்ளவும்.

இப்பொழுது மாவுடன்  பொடியாக அறிந்த வெங்காயம்,,கறிவேப்பிலை ,கொத்துமல்லி தழை,பெருங்காயம் சேர்த்து,தேவையான உப்பைப் போட்டு கலந்துகொள்ளவும்.மாவு வடை தட்டும் பதத்தில் இருக்கவேண்டும். இப்பொழுது வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி காயவைக்கவும்.எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு மாவை சிறு உருண்டை அளவிற்கு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடை தட்டி எண்ணெயில் போட்டு ஒரு புறம் சிவந்ததும் திருப்பி விட்டு மறுபுறம் சிவந்ததும் எடுத்து விடவும். இதுபோல் எண்ணெய் கொண்ட மட்டும் தட்டிப் போடவும்.இப்பொழுது சுவையான,மொறுமொறுப்பான வடை தயார்.இதை தேங்காய்  சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு:

வடை மாதிரி இல்லாமல் சிறு சிறு உருண்டைகளாகவும் அல்லது மாவைக் கையிலெடுத்து கிள்ளி கிள்ளி பக்கோடா மாதிரியும் போடலாம்.