ஃப்ரென்ச் டோஸ்ட்/French toast

ஃப்ரென்ச் டோஸ்ட்டை முட்டை,பால்,சர்க்கரை,சின்னமன் தூள் எல்லாம் சேர்த்து செய்தால் நன்றாக (சிறு பிள்ளைகளுக்கு) இருக்கும்.இங்குள்ள பதிவில் மிளகுத்தூள் சேர்த்து செய்துள்ளேன்.கொஞ்சம் காரமாக ஆனால் நன்றாக இருக்கும்.

தேவையானவை:

ப்ரெட் துண்டுகள்_3
முட்டை_2
பால்_2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
மிளகுத்தூள்_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு
ஆலிவ் ஆயில்_கொஞ்சம்

ஒரு அகலமான கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மற்ற பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்து whisk  ஆல் நன்றாக அடித்துக்கொள்ளவும்.

ப்ரெட் துண்டுகளை முழு அளவிலோ அல்லது விருப்பமான வடிவங்களிலோ துண்டுகள் போடவும்.பிறகு அவற்றின் இரு பக்கங்களிலும் சிறிது ஆலிவ் ஆயில் தடவி வைக்கவும்.

தோசைக்கல் அல்லது நான்ஸ்டிக் பேனை அடுப்பிலேற்றி சூடானதும் அதில்  ப்ரெட் துண்டுகளை வைத்து  அதன்மேல் முட்டைக் கலவையை ஒரு ஸ்பூனால் எல்லா இடங்களிலும் படுமாறு ஊற்றி விடவும்.

ப்ரெட்டைத் திருப்பிவிட்டு அடுத்தப் பக்கத்திலும் மீண்டும் மேலே சொன்னதுபோல் முட்டைக் கலவையை விடவும்.

ப்ரெட்டின் இரண்டு பக்கங்களும் சிவந்ததும் எடுத்துவிடவும்.சமயங்களில் ப்ரெட்டின் உள்ளே உள்ள முட்டைக் கலவை வேகாமல்கூட இருக்கலாம்.எனவே தோசைத்திருப்பியால் லேஸாக அழுத்திவிட்டு வேகவிடவும்.

ப்ரெட் துண்டுகளை அப்படியே முட்டைக் கலவையில் தோய்த்தெடுத்தும் டோஸ்ட் செய்யலாம்.சாப்பிட கொஞ்சம் ஹெவியாக இருக்கும்.

   

இது மாலைநேர சிற்றுண்டிக்கும்,பிள்ளைகளின் (நமக்குத்தான் ஆறினால் பிடிக்காதே) லன்ச் பாக்ஸிற்கும் பொருத்தமாக இருக்கும்.