இதை செய்வது சுலபம், சுவையோ அதிகம். எவ்வளவு இனிப்பு வகைகளை சுவைத்தாலும் இதன் சுவையே தனிதான்.
எங்கம்மா ஒரு பெரிய இரும்பு வாணலை வைத்து பொரிப்பாங்க,எல்லா அரிசியும் பூ மாதிரி பொரிந்து இருக்கும். இங்கே நான் பொரித்துள்ள அரிசிகூட சரியாகப் பொரியாமல்தான் உள்ளது.
குட்டீஸ்களுக்கு கொடுக்கும்போது மாவு புரை ஏறும் என்பதால் நெய் அல்லது நல்லெண்ணெயில் பிசைந்து கொடுக்கலாம்.
இதையே மாவாக அரைக்காமல் கொஞ்சம் ரவை பதத்துடன் அரைத்து சூப்பரான அரிசி உருண்டை செய்யலாம்.
தேவையானவை:
புழுங்கல் அரிசி _ ஒரு டம்ளர் அளவிற்கு
சர்க்கரை _ தேவைக்கு
ஏலக்காய் _ 1
உப்பு _ துளிக்கும் குறைவாக (ருசியைக் கூட்டத்தான்)
செய்முறை:
ஒரு அடிகனமான வாணலை அடுப்பில் ஏற்றி நன்றாக சூடு ஏறியதும் அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு அரிசியைப் போட்டு தோசைத் திருப்பியின் உதவியால் விடாமல் கிண்டிவிடவும்.
சிறிது நேரத்தில் அரிசி படபடவென பொரியும்.விடாமல் கிண்டவும். இப்போது பூ மாதிரி பொரிந்து வரும்.எல்லா அரிசியும் பொரிந்ததுபோல் தெரியும்போது ஒரு அகலமானத் தட்டில் எடுத்துக்கொட்டி ஆறவிடவும்.இங்கு கொஞ்சம் ஏமாந்தால் அரிசி தீய்ந்துவிடும்.அதனால் கவனம் தேவை.
இதேபோல் தொடர்ந்து எல்லா அரிசியையும் பொரித்து தட்டில் கொட்டி ஆறவிடவும்.
அரிசி நன்றாக ஆறியதும் மிக்ஸியில் கொட்டி அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்,உப்பு இவற்றையும் போட்டு மைய மாவாக்கி, இனிப்பு போதுமா என சுவை பார்த்து, தேவையானால் மேலும் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து அரைத்து, இனிப்பு அதிகமாக இருந்தால்…கூடுதல் சந்தோஷம்தான்!! ஒரு அகலமான தட்டில் கொட்டி மீண்டும் ஆறவிட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டால் தேவையானபோது சுவைக்கலாம்.