குவாக்கமோலி / Guacamole

guacamole

இந்த டிப் செய்ய அவகாடோ முக்கியம்.அதனுடன் சேர்க்கும் மற்ற பொருள்கள் எல்லாம் நம் விருப்பமே.

சில கடைகளில் Guacamole kit என்றே கிடைக்கிறது.அந்த box ல்  அவகாடோ, எலுமிச்சை,வெங்காயம்,பச்சை மிளகாய், தக்காளி இவற்றில் ஒவ்வொன்றும், பூண்டிதழ் இரண்டும் உள்ளன‌.இதை வாங்கிக்கூட செய்துகொள்ளலாம்.

தேவையானவை:

அவகாடோ_1
வெங்காயம்_சிறு துண்டு (பெரிய வெங்காயம் எனில் 1/4 பாகம் சேர்க்கலாம்)
தக்காளி_1/4 பாகம்
இனிப்பு மிளகாய்கள்_ஒவ்வொன்றிலிருந்தும் சிறுசிறு துண்டு (பொதுவாக பச்சை மிளகாய் சேர்ப்பாங்க.1.காரத்துக்கு பயந்து, 2.கலர்ஃபுல்லாக இருக்கட்டுமே என்று இனிப்பு மிளகாய்களை சேர்த்திருக்கிறேன்)
கொத்துமல்லி தழை_கொஞ்சம்
வெங்காயத்தாள்_கொஞ்சம்
எலுமிச்சை_ஒரு மூடி
உப்பு_துளியளவு

செய்முறை:

vegetables

வெங்காயம்,தக்காளி,மிளகாய்,கொத்துமல்லி,வெங்காயத்தாள்,இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

avocado

அவகாடோவை இரண்டாக நறுக்கி அதிலுள்ள கொட்டையை நீக்கிவிட்டு சதைப்பகுதியை ஒரு பௌளில் போட்டு,சிறிது எலுமிச்சை சாறுவிட்டு (கருக்காமலிருக்க) ரொம்பவும் நைஸாக இல்லாமல் ஒன்றும்பாதியுமாக‌ பிசைந்துகொள்ளவும்.

பிறகு பொடியாக நறுக்கிய‌வைகளை இதனுடன் சேர்த்து,உப்பு,எலுமிச்சை சாறு விட்டு நன்றாகக் கலந்து ஒரு 10 நிமிடங்கள் மூடி வைத்து பிறகு உபயோகிக்கலாம்.

guacamole

இப்போது சிப்ஸுடன் சேர்த்து சாப்பிட குவாக்கமோலி தயார்.சிப்ஸ் இல்லையென்றாலும் பரவாயில்லை,அப்படியேகூட சாப்பிடலாம்.

guacamole

அவகாடோவின் கொட்டையையும்,தோலையும்(பௌல் மாதிரி இருக்கும்) எடுத்து வைத்து குவாக்கமோலி தயாரானபிறகு படத்தில் உள்ளதுபோல் வைத்துக்கொடுத்தால் பார்க்க அழகாக இருக்கும்.

அவகடோ / Avovado

இப்பழத்தை வாங்கும்போது அன்றே பயன்படுத்துவதாக இருந்தால் பழமாக வாங்கலாம்.இல்லை ஒன்றிரண்டு நாள் கழித்து பயன்படுத்துவதாக இருந்தால் கொஞ்சம் காயாக வாங்கலாம்.

கரும்பச்சை நிறமாகவும்,லேசாக அழுத்தினால் அமுங்குவது போலவும்  இருந்தால் அது பழம்.நல்ல பச்சை நிறத்துடனும் அழுத்தினால் அமுங்காமலும் இருந்தால் அது காய்.இதனை சாலட் போன்றவற்றில் பயன்படுத்துவார்கள்.

பழத்தின் ஒரு பகுதியில் கத்தியை வைத்து நறுக்கி அப்படியே நகர்த்திக்கொண்டே வந்தால் ஆரம்பித்த இடத்திற்கு வந்ததும் கத்தியை எடுத்துவிட்டு இரண்டு கைகளால் இரண்டு பக்கமும் பிடித்து இழுத்தால் இரண்டு பகுதியும் தனித்தனியாக வந்துவிடும்.

பிறகு அதன் உள்ளே உள்ள கொட்டையை நீக்கிவிட்டு மேல் தோலையும் உரித்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கி அல்லது நன்றாக மசித்துவிட்டு தேவையான சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து சாப்பிடலாம்.சுவையாக இருக்கும்.