அவரைக்காய் பொரியல்/Purple beans poriyal

கோடையில் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் பல நிறங்களில் பலவிதமான காய்கறிகள் வரும்.அதில் ஒன்றுதான் இந்த கண்ணைப்பறிக்கும் காய்.இது பார்க்க‌ அவரை மாதிரியே இருக்கு,சுவையும்தான்.ஆனால் கொஞ்சம் கடினமான தோல் உள்ளது.குட்டிகுட்டியா purple color ல் பார்க்கவே அழகா இருந்துச்சு.சமைக்கும்போது நிறம் மாறிவிட்டது.சமையலில் அவரைக்காய் போலவே இதையும் செய்துவிடுவேன்.

தேவையானவை:

நறுக்கிய அவரைக்காய்_ஒரு கிண்ணம்
உப்பு_தேவைக்கு

பொடிக்க:

வறுத்த‌ வேர்க்கடலை_ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய்_2

செய்முறை:

அவரைக்காயைக் கழுவி சுத்தம்செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அடிகனமான வாணலில் நறுக்கிய அவரைக்காயைப் போட்டு அது திட்டமாக வேகுமளவு சிறிது தண்ணீர் விட்டு,சிறிது உப்பு தூவி வேக வைக்கவும்.

தண்ணீர் குறைவாக இருப்பதால் அடிப்பிடிக்க வாய்ப்புண்டு.எனவே வேகும்போதே இரண்டு தரம் கிளறிவிடவும்.

இதற்கிடையில் மிளகாயை வெறும் வாணலில் சூடுவர வறுத்து ஆறியதும் வேர்க்கடலையுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு கரகரப்பாகப் பொடித்துக்கொள்ளவும்.

அவரைக்காய் வெந்ததும்(தண்ணீர் இருக்கக்கூடாது,இருந்தால் வடித்துவிடவும்)பொடித்த பொடியைப்போட்டுக் கிளறிவிட்டு இறக்கவும்.

இதை மற்ற பொரியல் போலவே சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.இம்முறையிலேயே சாதாரன அவரைக்காயிலும் செய்யலாம்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 4 Comments »

அவரைக்காய்&வேர்க்கடலை பொரியல்

தேவையானவை:

அவரைக்காய் நறுக்கியது_ஒரு கிண்ணம்
பச்சை வேர்க்கடலை(அ)காய்ந்த வேர்க்கடலை_ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம்_இரண்டு
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
கொத்துமல்லி இலை
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு,உளுந்து,சீரகம்,கடலைப் பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

பச்சை வேர்க்கடலையானால் அப்படியே சேர்த்துக்கொள்ளலாம்.காய்ந்தது என்றால் முதல் நாளே ஊற வைத்து,நன்றாக ஊறியதைப் பயன்படுத்த வேண்டும்.

அவரைக்காய்,வெங்காயம் இவற்றை விருப்பமான வடிவத்தில் அரிந்து கொள்ளவும்.

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,முதலில் வெங்காயத்தையும்,அடுத்து அவரைக்காய், வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக்கிளறி காய் வேகுமளவு தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும்.

இடையிடையே கிண்டி விடவும்.அவரை,கடலை இரண்டும் வெந்து தண்ணீர் வற்றியதும் தேங்காய்ப்பூ&கொத்துமல்லி தூவி இறக்கவும்.

பொரிச்ச குழம்பு

பொரிச்ச குழம்பை பீர்க்கங்காய்,அவரைக்காய்,பிஞ்சு கத்தரிக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தி செய்யலாம்.

தேவையானப் பொருள்கள்:

துவரம்பருப்பு_1/2 கப்
பீர்க்கங்காய்_1
சின்னவெங்காயம்_7
தக்காளி_1
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய்_4 (காரம் விரும்பினால் கூட 1 அல்லது 2 மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்)
உளுந்து_ஒரு டீஸ்பூன்
சீரகம்_ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப் பூ_ஒரு டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

துவரம்பருப்பை நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

வெறும் வாணலியை அடுப்பில் ஏற்றி மிதமானத் தீயில் வறுத்து அரைக்க வேண்டியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தனித்தனியாக சிவக்க வறுக்கவும். மிளகாய் கருகாமல் இருக்க வேண்டும்.

இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.

பீர்க்கங்காயை விரும்பிய வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.பீர்க்கங்காயை நறுக்கும்போது சுவைத்துப் பார்க்க வேண்டும்.நன்றாக இருந்தால் மட்டுமே குழம்பில் சேர்க்க வேண்டும்.ஏனெனில் சில காய்கள் கசப்புத்தன்மையுடன் இருக்கும்.அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.அது குழம்பையே கெடுத்துவிடும்.

வெங்காயம்,தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

குழம்பு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும்.

எல்லாம் வதங்கியதும் வறுத்து அரைத்து வைத்துள்ளதை சேர்த்து சிறிது வதக்கி பருப்பைக் கரைத்து ஊற்றவும்.

தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.இக்குழம்பு சாம்பாரைவிட கொஞ்சம் கெட்டியாக இருக்கட்டும்.

இப்போது மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து மூடி போட்டு காய் வேகும்வரை கொதிக்கவிடவும்.

காய் வெந்து வாசனை வந்த பிறகு இறக்கவும்.

இது சாதம்,இட்லி,தோசை,வெண்பொங்கல்,சப்பாத்தி இவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.

முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

அவரைக்காய் பொரியல்

தேவையானப் பொருள்கள்:

அவரைக்காய்_ஒரு கப்  (நறுக்கியது)
சின்ன வெங்காயம்_5
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:
அவரைக்காயைக் கழுவிவிட்டு விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அவரைக்காயை சேர்த்து வதக்கவும்.

அது வதங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

தண்ணீர் வற்றி, காய் வெந்ததும் தேங்காய்ப் பூ,கொத்துமல்லி தூவி இறக்கவும்.

1/2 கைப்பிடி வெந்து பிழிந்த துவரம் பருப்பு இருந்தாலும் சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கலாம்.

இது எல்லா சாதத்திற்கும் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

அவரைக்காய் சாம்பார்

அவரைக்காய் சாம்பாரும் மற்ற சாம்பார் வகைகளைப் போன்றுதான் செய்ய வேண்டும்.இதனை தனி சாம்பாராகவோ அல்லது இதனுடன் ஒரு சிறு கத்தரிக்காய் அல்லது சிறு கேரட்டையோ சேர்த்தும் சமைக்கலாம்.இதன் சுவையே தனிதான்.

தேவையானப் பொருள்கள்:

துவரம் பருப்பு_1/2 கப்
அவரைக்காய்_1/4 கிலோ
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
புளி_கோலி அளவு
பூண்டு_2 பற்கள்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_3 டீஸ்பூன்
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_1 கொத்து
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
வெந்தயம்_சுமார் 5 லிருந்து 10 எண்ணிக்கை
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை

செய்முறை:

ஒரு குக்கரில் (அ) பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு ,பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.

அவரைக்காயைக் கழுவிவிட்டு விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி, அவரைக்காய்  இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.காய் மூழ்கும் அளவு மேலும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளாவும்.

உப்பு,காரம் சரிப்பார்த்து காய் வேகும் வரை மூடி கொதிக்க விடவும்.

நன்றாகக் கொதித்து காய் வெந்ததும் புளியைக் கரைத்து ஊற்றி மேலும் கொஞ்ச நேரம் கொதிக்க விடவும்.

கடைசியில் தேங்காய்ப் பூ,கொத்துமல்லி தூவி இறக்கவும்.தேங்காய்ப் பூ இல்லாவிடில் பரவாயில்லை.

இப்போது அவரைக்காய் சாம்பார் தயார்.

இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்கு அவ்வளவு பொருத்தமாக  இருக்கும்.